இம்மாதம், 18ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், நாட்டின், 15வது ஜனாதிபதியாக, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட, பழங்குடிஇனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பதவியேற்கிறார்.
நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான பகுதியான, ஒடிசா மாநிலம், மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உபர்பேடா என்ற கிராமத்தில் பிறந்தவர் முர்மு. ஆரம்பத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து பின் அரசியலுக்கு வந்தார். பின், கவுன்சிலர், இரண்டு முறை எம்.எல்.ஏ., மற்றும் மாநில அரசில் மந்திரியாக பதவி வகித்தார். தொடர்ந்து, 2015 முதல் 2021 வரை, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் கவர்னராக இருந்துள்ளார். தற்போது ஜனாதிபதியாகி உள்ளார். பிரதீபா பாட்டீலுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெண் ஜனாதிபதி என்பதுடன், பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.
அதே நேரத்தில், முதுபெரும் அரசியல் தலைவர்களான சரத்பவார், பரூக் அப்துல்லா போன்றோரை களமிறங்கும்படி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும், அவர்கள் மறுத்ததால், முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா வீம்புக்காக போட்டியிட்டு, 36 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக, ஆளும் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, 125 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும், 17 எம்.பி.,க்களும் ஓட்டளித்துள்ளனர். இதிலிருந்தே எதிர்க்கட்சிகள் மத்தியில் எந்த அளவுக்கு ஒற்றுமையின்மை மற்றும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது என்பதை அறியலாம்.
நாடு சுதந்திரமடைந்து, 75வது ஆண்டை கொண்டாடும் நிலையில், முர்முவின் தேர்வு பழங்குடியின மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நாடு முழுதும், 700 வகையான பழங்குடியினர் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் அவர்களின் எண்ணிக்கை, 10 கோடிக்கு மேல் இருக்கும்.அந்த பழங்குடியின சமூகத்தினர் வறுமை, உரிமைகள் மறுப்பு, விவசாய நிலங்கள் அபகரிப்பு, பாரம்பரிய வாழ்வாதாரங்கள் பறிப்பு, தொழில் மயமாக்கத்தால் இடம் பெயர்வு, காடுகள் அழிப்பு, சுரங்க நடவடிக்கைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் சிரமம் என பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
திரவுபதி முர்மு, ஜனாதிபதியாகி உள்ளதன் வாயிலாக, இனி பழங்குடியின மக்களின் பிரச்னைகள் முக்கியத்துவம் பெறும். பார்லிமென்ட் உட்பட உயர்மட்ட அளவில், அவர்களின் துயரங்கள் பேசப்பட்டு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கலாம். அத்துடன், முர்முவை தேர்வு செய்ததன் வாயிலாக, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட பழங்குடியின மக்களின் ஆதரவை பெறும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
ஜனாதிபதி பதவி என்பது அரசியல் அமைப்பு ரீதியாக உயரிய பதவி என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே அவர் செயல்பட வேண்டும். சில அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே, அவர் தனக்குள்ள விசேஷ அதிகாரத்தை பயன்படுத்த முடியும் என்பது நாடறிந்த உண்மை. அதே நேரத்தில், நாடு முழுதும் உள்ள மக்களுக்கும் இவர் ஜனாதிபதி என்பதால், ஜனநாயக மற்றும் அரசியல் சட்ட ரீதியான விஷயங்களுக்கு உட்பட்டு, அனைத்து தரப்பு மக்களும் போற்றும் வகையில் சிறப்பாக செயல்படுவார்.
மேலும், முப்படைகளின் கமாண்டர் என்ற முறையில் நாட்டின் பாதுகாப்புக்கு சவாலான விஷயங்களிலும் எச்சரிக்கையாக செயல்படுவார் என எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் நாட்டு மக்கள் போற்றத்தக்க வகையில், அப்துல்கலாம் போல, மீண்டும் ஒரு மக்கள் ஜனாதிபதியாக செயல்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!