மக்கள் தொகை பெருக்கம்கட்டுப்படுத்துவது அவசியம்
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின், பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையானது, உலக மக்கள் தொகை கணிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது.
அதில், 'இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், உலக மக்கள் தொகை, 800 கோடியாக உயரும்; 2030ல், 850 கோடியாகவும், 2050ல், 970 கோடியாகவும்,2100ல், 1,040 கோடியாகவும் அதிகரிக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், உலக மக்கள் தொகையில், சீனாவை அடுத்த ஆண்டு இந்தியா முந்தும். தற்போது, சீன மக்கள் தொகையானது, 142 கோடியே60 லட்சமாக உள்ளது. இந்திய மக்கள் தொகை, 141கோடியே, 20 லட்சமாக இருக்கிறது. ஆனாலும், அடுத்த ஆண்டில் சீன மக்கள் தொகையை, இந்திய மக்கள் தொகை முந்தி விடும்.
2050ல், இந்திய மக்கள் தொகை, 167 கோடியாக இருக்கும், 2064ல், 170 கோடியை எட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வரும், 2050 வரை உலக மக்கள் தொகையில் எவ்வளவு உயருமோ, அதில் பாதிக்கும் மேற்பட்ட அளவு, இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளில் தான் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, குழந்தைகள் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.
இந்தியாவிலோ, குழந்தைகள் பிறப்பு விகிதம் மெதுவாகவே குறைந்து வருகிறது. இதுவே மக்கள் தொகையில், சீனாவை இந்தியா முந்த உள்ளதற்கான காரணமாகும். மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்துவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அத்துடன் கொள்கைளை உருவாக்கும் ஆட்சியாளர்களுக்கும், இது சவால்களை உருவாக்கும். நலத்திட்டங்களை செயல்படுத்தும், மத்திய - மாநில அரசுகள், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, அனைத்து குடும்பங்களுக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனில், கூடுதலான நிதி ஆதாரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், சுகாதாரத் துறை, வீட்டு வசதி மற்றும் கல்வித் துறைகளிலும், மக்கள் தொகை பெருக்கம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட விஷயங்களிலும், அரசுகள் நெருக்கடிக்கு ஆளாகலாம். மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க, நம் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அவை திருப்திகரமாக இல்லை என்பதை, ஐ.நா.,வின் ஆய்வறிக்கை காட்டுகிறது. எனவே, கருத்தடை சாதனங்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வுகளை மீண்டும் அதிகரிக்க வேண்டியது அவசியம். உலக அளவில் மனிதனின் சராசரி ஆயுள், 2019ல், 72.8 வயதாக இருந்தது. 2050ல், இது, 77.2 வயதாக உயரவுள்ளது.
மேலும், உலக மக்கள் தொகையில், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் எண்ணிக்கை, தற்போது, 10 சதவீதமாக உள்ளது; 2050ல் இது, 16 சதவீதமாக அதிகரிக்க உள்ளது. இதனால், இந்தியாவிலும் வயதானவர்களின் மருத்துவ தேவைகள் கடுமையாக அதிகரிக்கும் என்பதால், இப்போதே, மத்திய - மாநில அரசுகள் உஷார் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
மேலும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ற வகையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். இல்லையெனில், சமூகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான பிரச்னைகள் உருவாகலாம். வேலைவாய்ப்பு கிடைக்காமல், மக்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்வது அதிகரிக்கும். நகரங்களில் குடிசைப் பகுதிகளில், சுகாதாரமற்ற சூழ்நிலைகளில் வாழ்வோர் எண்ணிக்கையும் கூடும்.
மக்கள் தொகை பெருக்கம் விஷயத்தில் அஜாக்கிரதையாக இருந்து, அது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்று விட்டால், நாட்டின் சமூக, பொருளாதார மேம்பாடு தடம் புரண்டு விடும். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகாமல் தடுக்க, இப்போதே போர்க்கால அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!