Load Image
Advertisement

திருமணம் எனும் அமைப்பு அவசியம்தானா?

ஒரு சமூகத்தில் திருமணம் என்ற அமைப்பே இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்கிற கேள்வியை எதிர்கொள்வது அவசியம். இன்றுகூட சிலர் திருமணம் என்ற அமைப்பை தகர்த்தெறிய நினைக்கிறார்கள். திருமணம் சில பிணைப்புகளை ஏற்படுத்துகிறது, பந்தங்களை வளர்க்கிறது என்றெல்லாம் ஏகப்பட்ட காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால் மணவாழ்க்கைக்கொரு மாற்று இல்லாதபோது இந்த முயற்சிகள் அபத்தமானவை.

சத்குரு:

ஒரு சமூகத்தில் திருமணம் என்ற அமைப்பே இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்கிற கேள்வியை எதிர்கொள்வது அவசியம். இன்றுகூட சிலர் திருமணம் என்ற அமைப்பை தகர்த்தெறிய நினைக்கிறார்கள். திருமணம் சில பிணைப்புகளை ஏற்படுத்துகிறது, பந்தங்களை வளர்க்கிறது என்றெல்லாம் ஏகப்பட்ட காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால் மணவாழ்க்கைக்கொரு மாற்று இல்லாதபோது இந்த முயற்சிகள் அபத்தமானவை. திருமணம் என்பதே நம் வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட விளையாட்டு என்றாலும் அந்த விளையாட்டுக்கு வேறொரு மாற்று கைவசமில்லாதபோது அதைக் குலைப்பது அறிவுடைமை ஆகாது.

திருமணம் என்கிற கட்டமைப்பு இல்லாவிட்டால் யாரும் யாரோடும் இருக்கலாம் என்று பலரும் நினைத்தார்கள். அதுகூடச் சாத்தியமில்லை. பொறாமை, சண்டை, போராட்டம் என்று பலவும் தோன்றும். இதையெல்லாம் பார்த்துதான் திருமணம் என்பது, ஒரு நிறுவனமாகவே உருவாக்கப்பட்டது.

எதிர் பாலினத்துடன் இணைந்திருக்க உங்களைத் தூண்டுவது எது? உங்களை இனப்பெருக்கம் செய்ய வைப்பதற்காக இயற்கை செய்யும் தூண்டுதலே அது. உண்மையில் ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் உடலியல் மற்றும் உளவியல் வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. இனப்பெருக்கத்தில் விலங்குகளும் ஈடுபடுகின்றன. ஆனால் மனிதர்களின் உணர்வுகளும் தேவைகளும் கூடுதல் தீவிரம் கொண்டிருப்பதால், அதை திருமணம் என்ற வட்டத்துக்குள் கொண்டு வந்தார்கள். ஏனெனில் விலங்குகளைப் போல நீங்கள் குழந்தைகளைப் பெற்றுப் போட்டு அவற்றை வீதியில் விட்டுவிட முடியாது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது.

இதற்கென்று பொறுப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டியிருப்பதால் அதற்கு திருமணம் தேவைப்படுகிறது. மனித உணர்வுகளை சரியான சூழலில் ஒழுங்குபடுத்தாவிட்டால், 99% பேர் பைத்தியமாகி விடுவார்கள். இதற்கெல்லாம் ஒரு தீர்வாக திருமணம் திகழ்கிறது. ஆனால் சில வகைகளில் திருமணமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் இதில் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பல பெண்ணுரிமை இயக்கங்கள் குரல் கொடுத்துள்ளன.

அதேநேரம் ஓர் ஆண் தன் வாழ்க்கைத் துணையால் பாதிக்கப்பட்டால் அவனால் வாய்விட்டுச் சொல்லவோ அழவோ முடிவதில்லை. ஆனால் ஒரு பெண்ணால் சொல்ல முடிகிறது. எனவே பாதிப்புகளும் இரு தரப்பினருக்கும் நிகழத்தான் செய்கின்றன. இருந்தாலும் திருமண பந்தம் என்பது நிலையானதாய் இருக்கும்போது அதனால் பல நன்மைகள் நிகழ்கின்றன.
மேலை நாடுகளில் இந்த பந்தம் உறுதியாக இல்லாத காரணத்தால் நடுத்தர வயதுப் பெண்கள் பலரும் பாதிப்புக்கும் பாதுகாப்பற்ற உணர்வுக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

பெண்ணுரிமையின் பெயரால் 18 வயதிலிருந்து பலமுறை துணையை மாற்றிக் கொண்டவர்கள் 50 வயதாகும்போது, துணை தேடிப் போகமுடியாது. அதேநேரம் தன்மீது தன் துணைவரின் கவனம் முழுமையாக இருக்க வேண்டுமென்கிற ஏக்கமும் இருக்கிறது. ஒரு நாளுக்கு 12 முறையாவது கணவர் “உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

மாறாக இந்தியாவில் ஒருபெண் 40 வயதை நெருங்கும்போது குடும்பம் என்கிற கட்டமைப்புக்குள் மிகவும் உறுதியான பெண்மணியாக மாறுகிறாள். மேலை நாடுகளில் காணப்படும் அழுத்தம் இவளிடம் இல்லை. உணர்ச்சி ரீதியாய் அவர்கள் எப்படியிருந்தாலும் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். ஆனால் மேலைநாடுகளில் உணர்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுவதால் பல சிரமங்கள் நிகழ்கின்றன. 60 வயதான பின்னும் அங்கே பலர் உணர்ச்சியால் மட்டுமே வழிநடத்தப்படுகின்றனர்.

உறவுகளுக்கும் உங்கள் ஆன்மீகத் தொடர்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஏனெனில் அது முழுவதுமே உள்நிலை சம்பந்தப்பட்டது. பலர் தங்கள் திருமண வாழ்வை உயிர்பந்தம் என்கிறார்கள். பெரும்பாலும் அவை உடல் பந்தமாகவும் உள பந்தமாகவுமே உள்ளன. அந்த பந்தங்களில் எந்தத் தவறும் இல்லை. அதேநேரம் அதை நீங்கள் ஆன்மீகத்துடன் சேர்த்து குழப்பிக் கொள்ள அவசியமில்லை.

உங்கள் தன்மை என்னவோ அதற்கேற்பதான் நீங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டதுபோல் ஆகும். உங்களை சமப்படுத்த பண்பாட்டுப் பயிற்சிகளும் துணையிருக்கும். யோகா தியானம் போன்றவை, சராசரி மனிதர்களைப் போல் வாழ்வைப் பாராமல் மேம்பட்ட நிலையில் வாழ்வை உள்வாங்கும் தெளிவைத் தரும். இப்போது திருமணம் என்று நீங்கள் சொல்வதெல்லாம் உங்கள் துணைவர் மீதான உங்கள் எதிர்பார்ப்புகளின் தொகுப்பாகத்தான் இருக்கிறது. உங்கள் மகிழ்ச்சியை பிறரிடமிருந்து பெறுவதென நீங்கள் நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பழமையான எண்ணங்களையே திரும்பத் திரும்ப வாழ்ந்து கொண்டிராமல் வாழ்வை புதிதாகவும் தெளிவாகவும் பாருங்கள். உங்கள் வாழ்வை நீங்களே வாழுங்கள்.



வாசகர் கருத்து (1)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    இதை சாமியார் ஆகிய நீங்கள் சொல்வது தான் வேடிக்கை என்ன செய்ய

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement