மஹாராஷ்டிரா மாநிலத்தில், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த உத்தவ் தாக்கரே தலைமையிலான, 'மஹாராஷ்டிரா விகாஸ் அகாடி' கூட்டணி அரசு கவிழ்ந்து விட்டது. உத்தவ்விற்கு எதிராக, அவரது சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உருவான அதிருப்தி அணியால், சில நாட்களாக குழப்பங்கள் நீடித்து, தற்போது, முடிவுக்கு வந்துள்ளது. ஷிண்டே தலைமையில், புதிய அரசு பதவியேற்று உள்ளது.
புதிய அரசில், அதிக எம்.எல்.ஏ.,க்களை கொண்டுள்ள பா.ஜ.,சார்பில், தேவேந்திர பட்னவிஸ் முதல்வராவார் என, மாநிலமே எதிர்பார்த்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே முதல்வராகி உள்ளார். முன்னாள் முதல்வரான பட்னவிஸ், துணை முதல்வராகி உள்ளார். ஏக்நாத் ஷிண்டேக்கு, பா.ஜ.,வின் 105 மற்றும் சிவசேனா அதிருப்தி அணியின், 39 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதால், அவர் தலைமையிலான அரசு இன்று நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில், நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி.
பா.ஜ.,வும், சிவசேனா கட்சியும் ஹிந்துத்வா கொள்கையில் தீவிர பற்று கொண்டவை. அதனால், இந்த இரு கட்சிகளுக்கும் இடையே, 1995 முதல் 2019 சட்டசபை தேர்தல் வரை கூட்டணி நீடித்து வந்தது.2019 சட்டசபை தேர்தலில், இந்தக் கூட்டணி வெற்றி பெற்றாலும், முதல்வர் பதவி விவகாரத்தில் மோதல் உருவானது. சிவசேனாவை சேர்ந்தவர் இரண்டரை ஆண்டும், பா.ஜ.,வைச் சேர்ந்தவர் இரண்டரை ஆண்டும், சுழற்சி முறையில் முதல்வராக பதவி வகிப்பது என்ற யோசனையை, உத்தவ் தாக்கரே முன்வைத்தார்.
அதை ஏற்க, பா.ஜ., மேலிடம் மறுத்து விட்டதால், பல ஆண்டுகளாக பின்பற்றிய கொள்கைக்கு முரணாக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்ததுடன், முதல்வராகவும் பதவியேற்றார் உத்தவ் தாக்கரே. இந்த விஷயத்தில், அவரது சந்தர்ப்பவாதமே மேலோங்கி இருந்தது. மஹாராஷ்டிரா மக்கள், பா.ஜ., - சிவசேனா கூட்டணிக்கு அளித்த ஆதரவுக்கு முரணாகவே, அவர் செயல்பட்டதாக பலராலும் விமர்சிக்கப்பட்டது.
முதல்வரான பின், உத்தவ் தாக்கரேயின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. கட்சியினர் அவரை எளிதாக சந்திக்க முடியாத நிலைமை உருவானதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், கூட்டணி கட்சியினருக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்ததும், அவர்களை எளிதாக சந்தித்ததும், கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது.
அத்துடன், தன் மகன் ஆதித்யா தாக்கரேக்கு முக்கியத்துவம் அளித்ததன் வாயிலாக, வாரிசு அரசியலையும் உத்தவ் ஊக்கப்படுத்தினார். மேலும், சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தின் தலையீடும், கட்சி மற்றும் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் அதிகம் இருந்தது. இதுவே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா கட்சியின் மொத்த எம்.எல்.ஏ.,க்களில், பாதிக்கும் மேற்பட்டோர் அணிவகுக்க காரணமாக அமைந்து விட்டது.
உத்தவ் அரசுக்கு எப்போது ஆபத்து வரும் என காத்திருந்த பா.ஜ., தலைவர்கள், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினர். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அணி மாறுவதும், அதனால், அரசுகள் கவிழ்வதும் சமீபத்திய ஆண்டுகளில், மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. அந்த வரிசையில், தற்போது மஹாராஷ்டிராவும் இடம் பெற்றுள்ளது.
ஒரு கட்சி உடையும் போது, அதிலிருந்து மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறினால், அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டம் பாயாது. அந்த அடிப்படையில், ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி மீது, நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி விட்டது. தன் கட்சிக்கு முதல்வர் பதவி வேண்டும் என்ற சந்தர்ப்பவாத அரசியலை உத்தவ் பின்பற்றியதால், 2019ல் பா.ஜ., - சிவசேனா கூட்டணி முறிந்தது. தற்போதும், அதே சந்தர்ப்பவாத அரசியலால், அதிருப்தி அணியினர், பா.ஜ., உடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர்.
தற்போதைக்கு ஏக்நாத் ஷிண்டே முதல்வர் என்றாலும், அவரது மூக்கணாங்கயிறு, துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கையில் தான் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!