''அவங்களே வகுத்த விதியை, அவங்களே கடைப்பிடிக்கலைன்னா எப்படிங்க...'' எனக் கேட்டபடியே டீயை உறிஞ்சினார், அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கு, பல்வேறு விதிமுறைகள் இருக்குது... உதாரணமா, செய்தித் துறையில, பல வருஷங்களா சீனியாரிட்டி பட்டியலே வெளியிடலைங்க...''அரசு விதிகளின்படி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், அடுத்த பதவி உயர்வு பெற, துறை தேர்வில் தேர்ச்சி பெறணும்... அவங்க பணியில சேர்ந்த தேதி அடிப்படையில, சீனியரா இருந்தாலும், தேர்ச்சி பெறும் தேதி அடிப்படையில தான், சீனியாரிட்டியை கணக்கிடணும்...
''ஆனா, இந்த விதியை கடைப்பிடிக்காம, துணை இயக்குனர் ரெண்டு பேருக்கு, சமீபத்துல இணை இயக்குனர் பதவி உயர்வு குடுத்திருக்காங்க...
'நாலு இணை இயக்குனர் பதவிகள் காலியா இருந்தும், பதவி உயர்வுக்கு காத்துட்டு இருக்கிற இன்னும் ரெண்டு பேருக்கும் குடுக்காம, இந்த ரெண்டு பேருக்கு மட்டும் பதவி உயர்வு குடுத்திருக்காங்க... இது ஒரு சாம்பிள் தான்... இந்த மாதிரி, துறையில நிறைய குளறுபடிகள் நடக்குதுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''வாய் கூசாம லஞ்சம் கேட்டு வாங்குதாங்க வே...'' என்றபடியே அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார், அண்ணாச்சி.
''யாருப்பா அந்த அதிகாரி...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''பத்திரப்பதிவு அலுவலகங்கள்ல லஞ்சம் குடுக்காம, காரியம் முடியாதுங்கிறது எழுதப்படாத விதியா போயிட்டுல்லா...
''ஈரோடு மாவட்டம், சென்னிமலை சார் - பதிவாளர் ஆபீசுக்கு பத்திரம் பதிய போனா, அங்க இருக்கிற பெண் அதிகாரி, ஏதாவது உப்புசப்பில்லாத காரணத்தை காட்டி, பத்திரம் பதிவு பண்ண முடியாதுன்னு சொல்லிடுதாங்க வே...
''அப்புறமா, 'இத்தனை ஆயிரம் ரூபாயை வெட்டுனா, வேலை முடியும்'னு ஓப்பனாகவே மிரட்டி லஞ்சம் வாங்குதாவ... இவங்களை பத்தி, மாவட்ட பதிவாளரிடம் புகார் சொல்லியும், ஒண்ணும் நடக்கலை வே...
''இதனால, தொகுதி எம்.எல்.ஏ.,வும், செய்தி துறை அமைச்சருமான சாமிநாதனிடம், ஆளுங்கட்சியினர் சிலரே, எழுத்து மூலமா புகார் குடுத்து, 'பெண் அதிகாரியை மாத்துங்க'ன்னு கேட்டிருக்காவ வே... பார்ப்போம், என்ன நடக்குன்னு...'' என்றார், அண்ணாச்சி.''வனிதாகுமாரி ஆத்துல, 'சூரி' கத்தி கேட்டிருந்தா... அதை குடுத்துட்டு வரதுக்கு லேட்டாயிடுத்து...''என்றபடியே வந்த குப்பண்ணா, ''கேன்டீன்கான்ட்ராக்டை வளைச்சு போட்டுட்டார் ஓய்...'' என்றார்.
''எந்த ஊருல, யாருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''அரசு மருத்துவமனைகள்ல கேன்டீன்கள் வைக்க தனியாருக்கு அனுமதி குடுப்பா... அந்த வகையில, மதுரை அரசு மருத்துவமனையில, சிரிப்பு நடிகர் ஒருத்தருக்கு கேன்டீன் நடத்த அனுமதி குடுத்திருக்கா ஓய்...
''அவர், சினிமாவுல கோடி கோடியா சம்பாதிக்கறதோட, ஏற்கனவே மதுரையில பல இடங்கள்ல ஹோட்டல்கள் நடத்தி லாபத்துல கொழிச்சுண்டு இருக்கார்...
''எத்தனையோ மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கேன்டீன் நடத்த தயாரா இருந்தும், உள்ளூர் அமைச்சர் ஆதரவுல, அந்த நடிகருக்கு கேன்டீனை ஒதுக்கிட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.பெஞ்சில் மேலும் சிலர் இடம் பிடிக்க, அரட்டை முடிந்தது.
மேலிடத்து தொடர்பிருந்தால் சீனியாரிட்டியாவது, ஒன்றாவது இந்த அம்மாவை மாற்றிவிட்டால், போகுமிடத்தில் ஜெகஜோதியாக இதே லஞ்சம், மேலும் பல மடங்கு வாங்குவார் இது விடியாத தலைவலி