Load Image
dinamalar telegram
Advertisement

'செஸ் ஒலிம்பியாட்' டெண்டரில் அதிகார போட்டி!

''முன்னாள் முதல்வர் பெயரிலான திட்டத்தை சுருக்கிட்டாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த திட்டம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், வேளாண் துறைக்குன்னு தனியா பட்ஜெட் தாக்கல் செஞ்சாங்கல்லா... அதுல, 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகள்ல வேளாண் வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தாவ வே...''அந்த திட்டத்துக்கு, 'கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்'னு பேரு வச்சிருக்காவ...

இந்த திட்டத்தை இங்கிலீஷ்ல எழுதி சுருக்கி, 'காவ்யா டி.பி.,'ன்னு வேளாண் துறையினர் சுருக்கமா அழைக்காவ வே...''தமிழக அரசின் டெண்டர் இணையதளத்துலயும் காவ்யா டி.பி.,ன்னு தான் இருக்கு...

கருணாநிதி பெயரை இப்படி சுருக்கினதை, ஆளுங்கட்சியினர் யாரும் கண்டுக்கலை வே...'' என்றார் அண்ணாச்சி

''அமைச்சரையே குறை சொல்றாராமே...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''சென்னை நந்தம்பாக்கத்துல அடையாறு ஆற்றின் ஒரு பகுதியை குடியிருப்பா மாத்த வந்த விண்ணப்பத்தை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., நிராகரிச்சிடுச்சுங்க...

''இதுல, 'விண்ணப்பதாரர் சொல்ற விபரங்கள் தான் சரி... அந்த திட்டத்துக்கு ஒப்புதல் தரணும்'னு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உயர் அதிகாரி ஒருத்தர், சி.எம்.டி.ஏ.,வுக்கு கடிதம் எழுதினாருங்க..

.''கடந்த, 2008 தி.மு.க., ஆட்சியின் போது இருந்த மூத்த அமைச்சர்கள் குழு தான், இந்த, 'மாஸ்டர் பிளான்' வரைபடத்தை ஆய்வு செஞ்சு ஒப்புதல் குடுத்தாங்க... அவங்க தான் இப்பவும் மூத்த அமைச்சர்களா இருக்காங்க...''விண்ணப்பத்தை நிராகரிச்ச விஷயம் அமைச்சர்கள் காதுக்கு போச்சுன்னா, செயலர் நிலைமை என்ன ஆகுமோன்னு சி.எம்.டி.ஏ.,வுல பேசிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''நேர்மையா இருக்கறது சிலருக்கு பிடிக்காது தான்... எல்லாம் நான் பார்த்துக்கறேன் ஹிதேஷ்குமார்...'' என, 'கட்' செய்தபடியே,

''மாறி மாறி, 'செக்' வச்சுக்கறா ஓய்...'' என, கடைசி தகவலை ஆரம்பித்தார்.

''அது என்ன கூத்து பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''மாமல்லபுரத்துல, 'சர்வதேச செஸ் ஒலிம்பியாட்' போட்டி நடக்கப் போறதோல்லியோ... அதுக்காக மாமல்லபுரத்தை, 'பளிச்'ன்னு ஆக்க தமிழக அரசு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடுத்து ஓய்...

''பேரூராட்சியின் அ.தி.மு.க., தலைவரும், அவரோட ஆதரவு கவுன்சிலர்களும், மாமல்லபுரம் நகர தி.மு.க., நிர்வாகியும் சேர்ந்து, இந்த நிதியில, 60 சதவீதம் வளர்ச்சி பணிகளை செய்ய திட்டமிட்டு இருக்கா ஓய்...

''மீதி இருக்கற, 40 சதவீத வேலைகளை பேரூராட்சியின் அ.தி.மு.க., துணை தலைவருக்கும், அவருடைய ஆதரவு கவுன்சிலர்களுக்கும் ஒதுக்கிட்டா...


''வளர்ச்சி பணிகளை செய்யற கான்ட்ராக்டர்களுக்குள்ளே, 'சிண்டிகேட்' போட்டிருக்கா... 'மொத்த கான்ட்ராக்டையும் எங்ககிட்ட குடுங்கோ'ன்னு துணை தலைவர் தரப்புல கேட்டதுக்கு, தலைவர், 'நோ' சொல்லிட்டார் ஓய்...


''இப்ப, கான்ட்ராக்ட்டை பிடிக்கறதுல அதிகார போட்டி நடக்கறது... இதனால, பேரூராட்சி தலைவர் மேல, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர்ற அளவுக்கு நிலைமை மோசமாகிடுத்து ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அந்த அதிகாரி மாற்றலுக்குத் தயாராக வேண்டும், இதுதான் விடியலின் வழிமுறை ஆயிற்றே இப்படி இருந்தால் யாருக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதத் தோன்றும்?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement