'பொறுப்பான பதவிக்கு ஆசைப்படுபவர், பொதுவெளியில் வைத்து இப்படி பேசுவது நியாயம் தானா...' என்று மத்திய பிரதேச மாநில பா.ஜ., மூத்த தலைவரான மாலதி ராயைப் பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.
இம்மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. விரைவில் இங்கு மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ளது.போபால் மாநகராட்சி தேர்தலுக்கான மேயர் வேட்பாளராக, மூத்த தலைவரான மாலதி ராயை அறிவித்துள்ளது, பா.ஜ., மேலிடம்.
இவர், ஏற்கனவே இரண்டு முறை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானிடம் உள்ள செல்வாக்கு காரணமாக, மேயர் வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற பிரசார கூட்டம் நடந்தது. இதில் பேசிய மாலதி, 'கடந்த 10 ஆண்டுகளாக போபால் மாநகராட்சியில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடியது; இதை ஒழிக்க வேண்டும்...' என்றார். இதைக்கேட்டதும், மேடையிலிருந்த பா.ஜ., நிர்வாகிகளின் முகங்களில் ஈயாடவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக, பா.ஜ., வசம் தான், போபால் மாநகராட்சி உள்ளது. முன்னாள் மேயரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அலோக் சர்மாவும், அப்போது மேடையில் இருந்தார். மாலதி பேசியதைக் கேட்ட அனைவரும், 'சொந்த கட்சிக்கு எதிராக பேசும் இந்த அம்மாவை, மேயர் வேட்பாளராக அறிவித்துள்ளனரே; உருப்பட்ட மாதிரி தான்...' என்று புலம்புகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!