கடந்த எட்டு ஆண்டுகளாக உலகத்தின் பார்வையில், நம் பாரத நாட்டின் பெருமை பிம்பம் சீராக மேம்பட்டுள்ளது. இந்தச் சாதனை, அத்தனை எளிதாக நடைபெறவில்லை.
நாடு எதிர்கொள்ளும் சமூக, அரசியல் அல்லது பொருளாதார சவால்களை முறியடித்து, முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த, அனைத்து முட்டுக்கட்டைகளையும் உடைத்தெறிந்து, நம் சமூகத்தின் நற்பண்புகளை மீண்டும் நிலைபெறச் செய்ய, பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.இந்த எட்டு ஆண்டுகளில் நாடு கண்ட நன்மைகள் நிரந்தரமான சீரான வளர்ச்சி, நிலையான சமூக நீதி, நிம்மதியான சமூகப் பாதுகாப்பு. அது மட்டுமா, இந்த எட்டு ஆண்டுகளில் தாய்மார்கள், பெண் மக்கள் மற்றும் பெண் குழந்தைகள் என அனைத்து சகோதரிகளையும் தகுதிப்படுத்துவதற்கான, மேம்பாடு அடையச் செய்வதற்கான, அனைத்து உறுதியான நடவடிக்கைகளும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ளப்பட்டது.
பழங்குடியின சமூகத்தில் இருந்து திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது, பொது நோக்கோடு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைவருக்குமான வாய்ப்புகள் பற்றிய நம் பார்வையை, கொள்கையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.பட்டியல் பழங்குடியினர், சமூகத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய சமூகமான, சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர் திரவுபதி முர்மு. இவர் 1997ல் தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.
அப்போது, அவர் ராய்ரங்பூரில் உள்ள மாவட்ட வாரியத்தின் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலில் நுழையும் முன், ராய்ரங்பூரில் ஸ்ரீ அரபிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், கவுரவ துணை ஆசிரியராகவும், பின்னர் நீர்ப்பாசனத் துறையில் இளநிலை உதவியாளராகவும் பணியாற்றினார்.ஒடிசா மாநிலம், ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் இருந்து, 2004 மற்றும் 2009ம் ஆண்டில்எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமூக நீதி
இவர், நவீன் பட்நாயக் அரசில், விலங்குகள் நல மேம்பாடு மற்றும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக அரும்பணி ஆற்றினார்.திரவுபதி முர்மு, ஒடிசாவில் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் மாவட்டமான மயூர் பஞ்சில் இருந்து, நாட்டின் உயர்மட்ட அரசியல் அமைப்பு பதவிக்கான தன் பயணத்தின்போது, பல தனிப்பட்ட இழப்புகளை தாங்க வேண்டி இருந்தது. கடந்த 2009 - 2015ம் ஆண்டுகளுக்கு இடையே முர்மு தன் கணவரையும், இரண்டு மகன்களையும், தன் தாய் மற்றும் சகோதரனையும் இழந்துள்ளார். 2015ம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக திரவுபதி முர்மு நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் முழு பதவிக் காலத்தை நிறைவு செய்த ஒரே கவர்னர் அவர்தான்.
ஜார்க்கண்ட் முதல் பெண் கவர்னரும் இவரே. அதுமட்டுமின்றி, ஒடிசாவில் இருந்து, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கவர்னராக பணியாற்றிய முதல் பழங்குடியினர் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கியமான முன் உரிமைகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது, பழங்குடியினரின் மேம்பாடு மற்றும் அவரின் சமூக, பொருளாதாரச் செழுமை என்பதை, நாம் அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். பழங்குடியினர் நலத்துறைக்கு, 2020 -- 21ம் ஆண்டில் 5,476 கோடி ரூபாய்; 2019 -- 20ல் 7,289 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஏப்ரல் 22ல், 'மத்திய அரசு பழங்குடியினர் நலனில் உறுதியாக உள்ளது; 2014ம் ஆண்டு பதவியேற்ற பின், பழங்குடி சமூக நலனில் பல்வேறு திட்டங்களுக்காக, 78 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது' என சுட்டிக் காட்டினார். இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில், பழங்குடியினர் நலனுக்காக, 21 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது என்றும் அவர் நினைவூட்டினார்.
கடந்த 2021 நவ., 10ல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 'நவ., 15ஐ பழங்குடியினரின் பெருமை தினம்' என, அறிவிக்க ஒப்புதல் அளித்தது.அத்தினத்தில், 19ம் நுாற்றாண்டில் வாழ்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த பிர்சா முண்டாவுக்கு நினைவகத்தை அமைத்து, அவர் பழங்குடி மக்களுக்குச் செய்த தொண்டை, இந்த உலகம் அறியச் செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி.
மேலும், அந்த நிகழ்ச்சியில் உரையாடிய பிரதமர் மோடி, ஆக., 15, ஜன., 26, காந்தி ஜெயந்தி மற்றும் சர்தார் படேல் ஜெயந்தியைக் கொண்டாடுவது போல, நவ., 15ம் தேதியை, பகவான் பிர்சா முண்டாவின் ஜெயந்தியை, பழங்குடியினர் பெருமையைக் கொண்டாடும் நாளாக அறிவித்தார்.
'இந்த தினம் புகழ்பெற்ற பழங்குடி கலாசாரம் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பங்களிப்பைக் கொண்டாடும் நாளாக அமையும்' என்று, அவர் கூறியதையும் நினைவுகூர விரும்புகிறோம். மத்திய அரசு, 2021 -- 22 முதல் 2025 -- 26 வரையிலான காலக் கட்டத்தில், 26 ஆயிரத்து 135.46 கோடி ரூபாயில், செயல்படுத்த, 'பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் - பிரதான் மந்திரி வனபந்துக்கள் கல்யாண் யோஜனாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு 150க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகள் அனுமதிக்கப் பட்டுள்ளன; 2,500க்கும் மேற்பட்ட வன் தன் விகாஸ் கேந்திராக்கள், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயஉதவி குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது, ஏழு லட்சம் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.மேலும், 20 லட்சம் நில பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 'பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் கல்வி கற்பதில் கவனம் செலுத்தப்படுகிறது' என்று, 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் நமது பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அங்கீகாரம்
தமிழகத்தில் ஏழு லட்சம் மலைவாழ் பழங்குடி மக்கள் உள்ளனர். பழங்குடியின மக்களுக்காக மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 2018 முதல் 2021ம் வரை, தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி 1,425.18 கோடி ரூபாய். கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழகத்தில், 'ப்ரீ மற்றும் போஸ்ட் மெட்ரிக்' உதவித்தொகையாக வழங்கப்பட்ட நிதி, 245.76 கோடி ரூபாய். தமிழகத்தில் எட்டு 'ஏகலவ்யா' உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில், 2,867 மலைவாழ் பழங்குடி மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கிராம சாலை திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், மலைவாழ் பழங்குடி மக்கள் வாழும் பல பகுதிகளுக்குச் சாலை வசதிகள் முழுமையாகச் சென்று சேரவில்லை என்பதாலும், தமிழகத்தில் சாலை வசதிகள் இல்லாத கிராமங்களின் மேம்பாட்டிற்காக, 1,817 கோடி ரூபாய் ஒதுக்கிஉள்ளது நம் மத்திய அரசு.பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த ஆண்டு, நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், திரவுபதி முர்முவை நியமித்திருப்பது, நம் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்களான, பழங்குடியின சமூகத்தினருக்குக் கிடைக்க வேண்டிய தகுதி வாய்ந்த அங்கீகாரம்.
எனவே, உண்மையான சமூக நீதி என்றால் என்ன என்பதை உலகுக்கு உணர்த்த, அனைத்து சட்டசபை உறுப்பினர்களும், பார்லிமென்ட் உறுப்பினர்களும், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, பழங்குடியின பெண் வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும்.
- கே.அண்ணாமலை
முர்மு தான் வந்தாச்சே, இன்னுமா ஏன் வேண்டும் ?