இம்மாதம், 23ம் தேதி அ.தி.மு.க., பொதுக்குழுவில் நடந்த களேபரங்கள், ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி எழுப்பப்பட்ட கோஷங்கள், அக்கட்சியில் மீண்டும் பிளவு ஏற்படுமோ என்ற சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன. ஆனாலும், அக்கட்சியின் மொத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான, பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளதாகவே தெரிகிறது.
அதே நேரம், கட்சி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகளின் ஏகோபித்த ஆதரவை பெறவில்லை என்பதையும், செயற்குழு கூட்டம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த, 1972ல், அ.இ.அ.தி.மு.க., கட்சியை எம்.ஜி.ஆர்., துவக்கினார். அப்போது முதல், 2017ம் ஆண்டு வரை ஒற்றைத் தலைமையே நீடித்து வந்தது.
சசிகலாவின் சூழ்ச்சியால், முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்ததை அடுத்து, அவரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை உருவானது.
இருப்பினும், 2017ல் முதல்வராக பதவியேற்றது முதல், பழனிசாமி சந்தித்த பிரச்னைகள் ஏராளம். சட்டசபையில் அவரது தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்த போது, பன்னீர்செல்வம் தலைமையிலான, 11 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்த்து ஓட்டளித்தனர். ஆனாலும், பழனிசாமி அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது. இதன்பின், சசிகலாவால் அ.தி.மு.க.,வின் துணை பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட தினகரன் - பழனிசாமி இடையே மோதல் உருவானது.
அப்போது, முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் கவர்னரை சந்தித்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர் கடிதம் அளித்தனர். இதில், ஒருவரை தவிர மற்ற, 18 பேரை பதவி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கையும் வெற்றிகரமாக கையாண்டு, தன் அரசுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றார். இதுபோல, பல பிரச்னைகள் உருவாகியும், அவற்றை வெற்றிகரமாக சமாளித்தார் பழனிசாமி.
இதோ கவிழ்ந்து விடும்... அதோ கவிழ்ந்து விடும் என்று, எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்ட அரசை, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக நடத்திச் சென்றார் என்றால், அது மிகையாகாது.
அதே நேரத்தில், ஊழல் வழக்கில் ஜெயலலிதா இரு முறை தண்டனை பெற்ற நேரத்தில், இடைக்கால முதல்வராக பன்னீர்செல்வம் பதவி வகித்தார். இதன் வாயிலாகவே, தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவு இல்லாத நிலையிலும், அவர் தன்னை பெரிய தலைவராக முன்னிலைப்படுத்திக் கொண்டார். தனி அணியாக செயல்பட்ட பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்த போதே, அ.தி.மு.க.,வில் அதிகாரப் போட்டி துவங்கி விட்டது.
ஆயினும், சசிகலாவை ஓரம் கட்டவே, பன்னீருடன், பழனிசாமி இணைந்து செயல்பட்டார். இருவரும் ஒற்றுமையாக இருப்பது போல காட்டிக் கொண்டார். பன்னீர்செல்வம் கட்சியின் மூத்த தலைவர் என்ற பந்தாவோடு வலம் வந்தாரே தவிர, கட்சியில் தனக்கான செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் நடவடிக்கையில் அக்கறை காட்டவில்லை. அதுவே, அவரது பின்னடைவுக்கு காரணம்.
ஆனால், நிர்வாகிகளின் ஏதோபித்த ஆதரவை பெற்ற பழனிசாமியின் கை தற்போது ஓங்கியுள்ளது. தற்போதைய நிலையில், இரு தரப்பினர் இடையே சுமுக தீர்வு காண்பதற்கான சூழல் இல்லை என்றே தோன்றுகிறது. சட்ட ரீதியான போராட்டங்களை தொடர்ந்தாலும், கட்சி நிர்வாகிகளின் பெரும்பான்மை ஆதரவு பழனிசாமிக்கு இருப்பதால், அவரின் கையே ஓங்கலாம். எனவே, அண்ணாதுரை காலத்தில் நெடுஞ்செழியன், கருணாநிதி காலத்தில் அன்பழகன் போன்றோர், தி.மு.க.,வில் இரண்டாம் இடத்தில் நிரந்தரமாக இருந்தது போல, பன்னீர்செல்வமும் இருக்க முற்பட்டால், அது கட்சிக்கும், அவரின் அரசியல் எதிர்காலத்திற்கும் நல்லது... யோசிப்பாரா?
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!