Load Image
dinamalar telegram
Advertisement

தில்லுமுல்லு அம்பலம்... தெறிச்சு ஓட காட்டுறாங்க 'பலம்!'

''தாராபுரம், பல்லடம்ன்னு நிறைய இடங்கள்ல கனிம வளங்களை சூறையாடறாங்கன்னு போன வாரம் தானே பேசினோம். அதை தெரிஞ்சு, கனிம வளக்கொள்ளையை தடுத்து நிறுத்த, அதிகாரிகள களத்துல இறங்கச் சொல்லியிருக்காரு கலெக்டரு. அதிகாரிகளும், முக்கியமான ரோடுகள்ல, விடிய, விடிய வாகன சோதனை பண்ணாங்களாம். ஆனா, எதிர்பார்த்த மாதிரி எதுவும் சிக்கலையாம். ஒவ்வொரு குவாரியா போய் திடீர் ஆய்வு பண்ணாதான், விவகாரம் வெளிச்சத்துக்கு வரும்ன்னு, விவரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க,'' என்று, சித்ரா பேச்சைத் துவங்கினாள்.

''இதே மாதிரி, ஓடை, நீர்நிலையோரம் இருக்கிற வீடுங்க, ஆக்கிரமிப்புகளையெல்லாம் அப்புறப்படுத்தி, அங்க இருக்கிறவங்களுக்கு வேற இடம் ஏற்பாடு செய்து தர்ற விவகாரத்துல, கலெக்டர் ரொம்ப தீவிரமா இருக்காரு. ஆனா, நொய்யல் ஆத்தங்கரையையொட்டி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருத்தரு, 8 வீடு கட்டி வாடகைக்கு விட்டுருக்காரு. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவரை ஒன்ணும் பண்ண முடியறது இல்லையாம்'' என கள நிலவரம் சொன்னாள் மித்ரா.'பாரபட்சம் இல்லாம கவனிப்பாரோ, என்னவோ' என யூகித்த சித்ரா, ''அவிநாசி தெக்கலுார் பக்கம் இருக்கிற ஒரு கிராமத்துல, பஞ்சாயத்து 'ரெக்கார்டு' படி வண்டிப்பாதை புறம்போக்குன்னு, 30 சென்ட் இடம் இருக்காம். அங்க இருக்கிற ஒரு சமுதாய மக்கள், ரொம்ப நாளா தங்களுக்கு ஒரு சமுதாயம் கூடம் வேணும்ன்னு கேட்டுட்டு இருக்கிறதால, அங்க, 5 சென்ட் நிலத்துல, சமுதாயக்கூடம் கட்டித்தர ஆதிதிராவிடர் நலத்துறை அனுமதி வழங்கிடுச்சாம். பஞ்சாயத்து சார்பில், அந்த இடத்தை சுத்தம் செய்ற வேலை செஞ்சிருக்காங்க. அந்த ஊர்ல இருக்கற இன்னொரு தரப்பு, சமுதாயக்கூடம் வரக்கூடாதுங்கற நோக்கத்துல, அந்த இடத்துக்கு 'பொக்லைன்' வாகனத்தைக் கொண்டு போய், ஆங்காங்கே குழி தோண்டி, மரக்கன்று நட்டு வச்சிட்டாங்களாம். சமுதாயக்கூடம் வர்றதுக்கு தடையா இருக்கிறவங்க மேல புகார் கொடுக்க ஒரு சமுதாயத்தை சேர்ந்தவங்க தயாராகிட்டு இருக்காங்களாம்; பிரச்னை பெரிசா வெடிக்கறதுக்கு முன்னாடி, அதிகாரிங்க இந்த விவகாரத்தை சரி பண்ணா பரவாயில்ல'' என புகைந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்னையை விளக்கினாள்.

இப்பவே கண்ணக் கட்டுதே!
'சட்'டென மாநகராட்சி விஷயத்துக்குள் நுழைந்த மித்ரா, ''போன ஆட்சியில, என்னென்ன வேல செஞ்சிருக்காங்க; எவ்வளவு தொகை செலவு பண்ணியிருக்காங்கன்னு, கணக்கு பார்க்க ஆரம்பிச்சுட்டாராம் நம்ம மேயரு. அதுல, சுகாதார பிரிவுல வாகன பராமரிப்பு, உபகரணம் வாங்கினதுல்ல நிறைய தில்லுமுல்லு நடந்திருக்கிறது தெரிய வந்துருக்கு. 'சிக்கல்ல மாட்டிக்குவோம்'ன்னு பயந்து, சில அலுவலர்ங்க, 'விட்டா போதும் சாமி'ன்னு, 'டிரான்ஸ்பர்'ல போகவும் தயாராகிட்டாங்களாம்'' என்றாள்.''அப்படியே இன்னொரு விஷயத்தையும் சொல்றேன் கேளுங்க. கார்ப்பரேஷன்ல, நான்காவது மண்டல தலைவருதான், ஆளுங்கட்சியோட வடக்கு மாவட்ட செயலாளராவும் இருக்காரு. இந்த ரெண்டு பதவி போதாதுன்னு, 'டி.டி.சி.பி., அப்ரூவ்டு நிர்வாக குழு உறுப்பினர்' பதவியும் அவருக்கு கொடுத்திருக்காங்களாம். 'ஒருத்தருக்கு ஒரு பதவிதான்னு நம்ம தலைவரு சொல்லியும், இப்படி, பதவி மேல பதவி கொடுத்தா, மத்தவங்க சோர்ந்து போயிட மாட்டாங்களா, எப்படி கட்சி வளரும்?'ன்னு, கட்சிக்காரங்க வெளிப்படையாகவே பேச ஆரம்பிச்சுட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.''அவரு, 'சாமி'யே கதின்னு இருக்கறதால தான், பதவி மேல பதவி கிடைக்குதுன்னு, நம்ம பத்மநாபன் அண்ணா கூட சொன்னாரு'' என்ற மித்ரா, ''அங்க பதவிக்கு போட்டி போடறாங்க; ஆனா, கூட்டணி கட்சியான காங்கிரசோட நிலைமையோ, கழுத தேஞ்சு கட்டெறும்பான கதையா மாறிட்டு இருக்கு,'' என்றவள் தொடர்ந்தாள்.''அவங்களோட தலைவரு ராகுல் மேல, அமலாக்க துறைக்காரங்க விசாரணை பண்ற விவகாரத்த கண்டிச்சு, ரெண்டு தடவை ஆர்ப்பாட்டம் பண்ணாங்க; இதுல மொத்தமா சேர்த்து, 50 பேர் கூட தேறலையாம். இளைஞர் காங்கிரசும், மாவட்ட காங்கிரசும் தனித்தனி கோஷ்டியா ஆர்ப்பாட்டம் நடத்தினதுதான் இதுக்கு காரணமாம். ஒரு தரப்பு நடத்தின ஆர்ப்பாட்டம், இன்னொரு தரப்புக்கு தெரியவே இல்லையாம். இதுல என்ன ஒரு காமெடின்னா, இளைஞர் காங்கிரஸ்காரங்க நடத்துன கூட்டதுக்கு, 60, 70 வயசு ஆட்களையெல்லாம் கூட்டிட்டு வந்து, நிக்க வச்சிருந்தாங்களாம்,'' என்றாள் மித்ரா, நகைப்புடன்.

அசிஸ்டன்ட் அளப்பறை
சமையலறைக்குச் சென்ற சித்ரா, மிக்ஸரையும், டீயையும் எடுத்து வந்து, மேஜை மீது வைக்க, அதை ருசித்த படியே, ''உணவுப்பொருள் கடத்தலை தடுக்கிற, பறக்கும் படை அதிகாரியோட ஜீப் ஓட்ட டிரைவர் இல்லையாம். அதனால, வெளியாள் ஒருத்தரை டிரைவராகவும், அவரையே உதவியாளராகவும் அந்த அதிகாரி பயன்படுத்திட்டு இருக்காராம்.அந்த உதவியாளரு என்னடான்னா… அதிகாரிக்கு தெரியாம, ஒவ்வொரு ரேஷன் கடைல இருந்தும், 500, 1,000 ரூபாய்ன்னு வசூல் பண்றாராம். சில கடைகள்ல இருந்து, பொருட்களையும் வாங்கிட்டு போயிடறாராம். பணமோ, பொருளோ தரலைன்னா, அந்த கடைக்காரங்க மேல, 'அளவு குறைவா பொருட்களை போடறாரு', அப்படி, இப்படின்னு ஏதாவது ஒரு புகாரை சொல்லி, அதிகாரியை கூட்டிட்டு வந்து தணிக்கை பண்ண வைச்சி, அபராதம் போட வச்சிடறாராம். வசூல் அள்றதுல 'வெற்றி' நடை போடற அவரால, சம்மந்தமே இல்லாம பெரிய அதிகாரிக்கும் கெட்ட பேரு வருதாம்'' என ரகசியம் சொன்ன மித்ரா, ''டீ நல்லா இருக்கு அக்கா. இது என்ன, ரேஷன் கடைல விக்கிற ஊட்டி டீயா?'' என கேட்டாள்.''அங்கே நிலைமை அப்படின்னா… காங்கயம் வருவாய்த்துறைல, பெரிய அதிகாரி பணியிடம் காலியா இருக்காம். உடுமலையில இருக்கிற ஒரு அதிகாரி தான், ரெண்டு மாசமாக கூடுதல் பொறுப்புல இருக்காரு. பக்கத்துல இருக்கற முத்துார்தான் அவரோட சொந்த ஊருங்கறதால, அந்த ஆபீஸ்லயே 'செட்டில்' ஆகிடலாம்ன்னு, முயற்சி பண்றாராம். அதனாலதான், அங்க இனி, 'போஸ்டிங்' போடாம இருக்காங்கன்னு சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.

'கைம்மாறு'க்காக கண்டிப்பு
''எது எப்படியோ…நல்லா வேல பார்த்தாருன்னா பரவாயில்ல'' என்ற மித்ரா, ''சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையா, அவிநாசி போலீஸ்காரங்க தவிக்கிறாங்க,'' என்றவள், ''ஒவ்வொரு போலீசுக்கும், கட்டாயம் வார விடுமுறை தரணும்ன்னு ரூரலை கவனிக்கிற பெரிய அதிகாரி உத்தரவு போட்டிருக்காரு. ஸ்டேஷன்ல எழுத்து வேலைய கவனிக்கறவங்க தான், வார விடுமுறை தர்றது, டியூட்டி போடுறதுன்னு பொறுப்பை ஏத்துப்பாங்க. ஆனா, அந்த ஸ்டேஷன்ல இருக்கிறவரு, ஆள் பார்த்து தான், லீவு தர்ராறாம்; தனக்கு 'கைமாறு' செய்றவங்களுக்கு ஒரு மாதிரியும், மத்தவங்களுக்கு இன்னொரு மாதிரியும் டியூட்டி போடறாராம். சிலருக்கு லீவு தர்றதே இல்லையாம்; தொடர்ச்சியாக, டூட்டி போட்டுடுறாராம். 'ஒவ்வொரு போலீசும் மனசு திருப்தியா வேல பாக்கணும் தான், பெரிய ஆபீசர் விரும்பறாரு. ஆனா, நம்மள 'ஆனந்தமே' இல்லாம ஆக்கிடறாரே, நம்ம 'ரைட்டரு'ன்னு, போலீஸ்காரங்க புலம்பறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''இந்த விவகாரம் பெரிய ஆபீசர் காதுக்கு போனா, கண்டிப்பா நடவடிக்கை எடுப்பார்ன்னு நினைக்கிறேன்,'' என்றாள் சித்ரா.

பட்டையக் கிளப்பும்பலான தொழில்
''பல்லடத்துல, பாலியல் தொழில் ரொம்ப அதிகமாகிடுச்சாம். சமீபத்துல, பங்களாதேைஷ சேர்ந்த ஒரு பெண்ணை கூட இந்த புகார் அடிப்படைல கைது பண்ணாங்க. பாரதி நகர்ல, 24 மணி நேரமும் பாலியல் தொழில் நடக்குதுன்னு, மக்கள் மறியல் பண்ற அளவுக்கு நிலைமை மோசமாகிடுச்சு. காரணம்பேட்டையிலும், பாலியல் தொழில் பட்டைய கிளப்புதாம். இது சம்மந்தமா, ஒரு 'ஆடியோ' வெளிய வர, அதுல பல பேரு பேசியிருக்காங்க. உள்ளூர் வி.ஐ.பி.,ங்க சிலரும் சம்மந்தப்பட்டிருந்ததால, போலீஸ்காரங்க, விவகாரத்தை பெரிசுபடுத்தாம விட்டுட்டாங்களாம். அந்த 'ஆடியோ' சம்மந்தப்பட்ட லேடியும், வீட்டை காலிப்பண்ணிட்டு போயிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''அதே மாதிரி, ரூரல்ல இருக்கிற கிராமங்கள்ல, திரும்பவும் சில்லிங், கஞ்சா விற்பனை அதிகமாகிடுச்சாம். போலீஸ்காரங்க ரெய்டு போறப்ப, வெறும் கிராம் கணக்குல தான் சிக்குதாம். ரூரலை கவனிக்கிற அதிகாரி வந்த புதுசுல, இந்த மாதிரி இல்லீகல் சமாச்சாரங்க நடக்காம இருக்க கடுமையான உத்தரவையெல்லாம் போட்டாரு. திரும்பவும் சாட்டைய சுழட்டுவாரான்னு பார்க்கலாம்,'' என்றாள் சித்ரா.

'கணக்கு' காண்பிச்சாமட்டும் போதுமா?
''சிட்டிக்குள்ள, ஒரு ஸ்டேஷனுக்கு ஒரு ஒற்றர் பிரிவு போலீஸ் இருக்காங்க. இப்ப, கூடுதலா, 10, 12 பேரை போட்டிருக்காங்களாம். யாரு, என்ன வேல பார்க்குறதுன்னே தெரியாம இருக்காங்களாம். நிறைய பேரு சும்மா பொழுது போக்கிட்டு போயிடறாங்களாம்,'' என, கேள்விப்பட்டதை சொன்னாள் மித்ரா.''பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கம் கால்நடைத்துறை ஆராய்ச்சி மையம் இருக்கு. அங்க கோழி, ஆடு, கறவை மாடு வளர்ப்பு பத்தி, விவசாயிகளுக்கு சொல்லி கொடுப்பாங்க; தேவையான தொழில்நுட்ப ஆலோசனை, நோய் தடுப்பு முறை சம்மந்தமா, மாசா மாசம் விவசாயிகளுக்கு இலவசமா பயிற்சியும் கொடுப்பாங்க. ஆனா, கொரோனாவுக்கு அப்புறம், இந்த பயிற்சி சரியா நடக்கறது இல்லையாம். பயிற்சி நடத்தறது தொடர்பா, விவசாயிகளுக்கு முன்னறிவிப்பு எதுவும் தர்றதும் இல்லையாம். இதனால, அரசாங்கத்தின் திட்டம் எதுவும் விவசாயிங்க, கால்நடை வளர்க்கறவங்களுக்கு தெரியாம போயிடுதுன்னு புலம்பறாங்க,'' என்றாள் சித்ரா.''இப்படி பண்ணா என்னதான் பண்றது?'' என, சலித்துக்கொண்ட மித்ரா, ''சரிங்க்கா... டைம் ஆகுது. நான் கெளம்பறேன்'' எனக்கூறி, தன் வீட்டை நோக்கி ஸ்கூட்டரை முறுக்கினாள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement