ராணுவத்திற்கான 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்த உடனேயே, அரசியல் கட்சிகள் முதல் சில தலித் தலைவர்கள் வரை, பலரும் தங்கள் அரசியல் லாபத்திற்காக அதை எதிர்த்து வருகின்றனர்.இந்த திட்டத்தை பற்றிய தவறான தகவல்களை இளைஞர்களிடையே பரப்பி, வன்முறையை துாண்டும் விதமாக பேசி, உசுப்பி வந்ததன் விளைவாக பல இடங்களில் வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இந்த திட்டம், மற்ற சமுதாயத்திற்கு பயன்படுகிறதோ, இல்லையோ, பட்டியல் சமூக இளைஞர்களுக்கு பெரும் பயன் தரக்கூடியது.
தற்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள இத்திட்டத்தை போல இல்லாமல், சட்ட மேதை அம்பேத்கர், இதற்கு மேலும் சென்று, பல புரட்சிகரமான கருத்துகளை பட்டியல் சமூகத்திற்கு வழங்கியுள்ளார். பட்டியல் சமூகத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் கூட இத்திட்டம் போன்ற ஒரு ஆக்கப்பூர்வமான திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.ரத்னகிரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட அம்பேத்கரின் முன்னோர், ராணுவத்தில் சேரும் பொருட்டு, கிழக்கிந்திய கம்பெனி இருந்த காலகட்டத்தில் குடிபெயர்ந்தனர். அம்பேத்கரின் தந்தை, சிறப்பு ராணுவப் படையில் சுபேதார் அந்தஸ்தில் பணிபுரிந்து, ஓய்வு பெற்று மஹாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் குடியேறினார்.அவரின் பாட்டனாரும், தந்தையும் ராணுவத்தில் இருந்ததாலும், அம்பேத்கர் பரோடா ராணுவ காலாட் படையில் பயிற்சி லெப்டினன்ட்டாகப் பணியாற்றியதாலும், கல்வியின் தேவை பற்றிய விழிப்புணர்வும், பொருளாதாரம் உயரும் என்ற நம்பிக்கையும், எதிர்த்து போராடும் தன்மையும் ஏற்படும் என்ற உறுதியும் அவருக்கு இருந்தது.
அதனால் தான், புரட்சியாளர் அம்பேத்கர் பட்டியல் சமூகத்தவர்களை ராணுவத்தில் சேர செய்யும் செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். (தனஞ்செய்கீர், பக்கம் 500)சட்டமேதை அம்பேத்கர், 1927களில் மகத் மாநாட்டில், 'தீண்டாமை ஒழிப்பும், சமபந்தி விருந்தும் நம் இன்னல்களை நீக்கி விடாது. நீதித்துறை, ராணுவம், காவல்துறை, வணிகத்துறை போன்ற அனைத்து அரசு துறைகளிலும் தடையின்றி நமக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்...' என்று கூறினார். (தனஞ்செய் கீர் பக்கம் 139)கடந்த, 1941ல் முதல் காலாண்டு பருவத்தில், தீண்டப்படாதவர்களை குறிப்பாக, 'தீரமுடன் போரிடுவதில் வல்லவர்கள்' என்று புகழ் பெற்றிருந்த மகார்களை, ராணுவத்தில் பணியில் சேர்ப்பதற்கான முயற்சியில் அம்பேத்கர் ஈடுபட்டிருந்தார்.
மகார் படைப்பிரிவு
அம்பேத்கர் மும்பை கவர்னரை சந்தித்தார். ராணுவத்தில் சேருவதற்குரிய வகுப்பு, சேருவதற்குரியதல்லாத வகுப்பு என்ற பொருளற்ற ஒரு பாகுபாட்டின் அடிப்படையில் மகார்களை படையில் சேர்க்க மறுக்கும் ராணுவ கோட்பாட்டிற்கு எதிரான அவருடைய குறைகளை கூறினார்.கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்காலத்தில், மகார்கள் ராணுவத்தில் ஆற்றிய பங்கு சிறப்பானதாகும்; அதன்பின் அவர்கள் படையில் சேருவது தடை செய்யப்பட்டது. ஆனால், மீண்டும் முதல் உலகப்போரின் போது, தனி மகார் படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது.அப்போர் முடிந்தவுடன் நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி, தனி மகார் படைப்பிரிவு கலைக்கப்பட்டது என்கிற விபரங்களை, கவர்னரிடம் எடுத்துரைத்தார் அம்பேத்கர்.ஆகவே, ராணுவத்தில் உடனடியாக தனி மகார் படைப்பிரிவை ஏற்படுத்துமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.மிக விரைவிலேயே, தனி மகார் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது.
அவர்களில் பலர், ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் அதிகாரிகளாக அமர்த்தப்பட்டனர். அதிகாரிகளாக அமர்த்தப்பட்டவர்களில் அம்பேத்கரின் தளபதிகளில் ஒருவரான, 'மதகெபுவா' என்று அழைக்கப்பட்ட ஜதாவ் ஒருவர் ஆவார். இவர், அமைப்பை கட்டும் திறன் மிக்கவர். ஹிந்துக்கள் போர்த்தொழில் புரியும் இனமாக மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்ற தணியாத வேட்கை கொண்டிருந்த சாவர்க்கர், 'அம்பேத்கரின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ் மகார் சகோதரர்கள் அவர்களுடைய போர்த்திறனில் சிறப்புற்று விளங்குவர். 'அவர்கள் ராணுவத்தில் சேர்ந்துள்ளமை
இந்தியாவின் ஒற்றுமைக்கு உதவும்' என்றும் கூறினார். (தனஞ்செய்கீர், பக்கம் 497)கடந்த, 1941ல் ஜூலை மாதத்திற்கு பின் அம்பேத்கர் சில கூட்டங்களில் பேசினார். அக்கூட்டங்களில் ராணுவத்தில் மகார்கள் சேர வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். கடந்த, 1943 ஜன., 17ல் அம்பேத்கர் சூரத்தில், 'சிவில் பயோனியர்' பேரணியில் பேசிய போது, ராணுவப் பயிற்சி பெறுவதன் முதன்மையை வலியுறுத்தினார்.'இந்திய ராணுவம்' என்ற நுாலை எழுத அம்பேத்கர் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். அதுபற்றி பரோடாவை சேர்ந்த ஜி.எம்.ஜதாவிடம் மிகுந்த ஆர்வமுடன் கலந்து பேசினார்.
ராணுவ விஞ்ஞானம்
ஜதாவிடம் ராணுவ விஞ்ஞானம், இந்தியாவின் ராணுவ சிக்கல் பற்றி பல நுால்கள் இருந்தன. ராணுவ விஞ்ஞானத்தை கற்க விரும்பும் மாணவர்களுக்காக புதிய வகுப்பு ஒன்று துவக்க அம்பேத்கர் விழைந்தார். ஜதாவ், அவ்வகுப்பில் ராணுவ விஞ்ஞானத்தை கற்பிக்க வேண்டும் என்றும் விரும்பினார். ராணுவ விஞ்ஞானி வகுப்பு நடத்த வேண்டும் என்று அம்பேத்கர் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டிருந்தார்.ஆனால், அம்பேத்கரின் இந்த எண்ணம் ஈடேறவில்லை. இருப்பினும் அம்பேத்கரின் சித்தார்த்தா கல்லுாரி, ஜதாவிடமிருந்து சில நுால்களை வாங்கியது. (தனஞ்செய் கீர் பக்கம் 603) இரண்டாம் உலகப்போரின் போது, பிரிட்டீஷார் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற ராணுவத்தில் ஈடுபட வேண்டும் என்பது அண்ணலின் கருத்து. தன் சுதந்திர தொழிலாளர் கட்சியின் சார்பாக இதுபற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டார்
அம்பேத்கர்.இந்தியாவின் பாதுகாப்பு இந்தியாவின் பொறுப்பாகவே நடத்தப்பட வேண்டுமென்று வட்டமேஜை மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இந்த கொள்கைகளை செயல்படுத்த இதுவரை ஒன்றும் செய்யப்படவில்லை. ராணுவ கல்லுாரிகளை திறக்க வேண்டும் என்று அதிகமாக பேசப்பட்டது. அதிகாரி கள் கிரேடை இந்தியர்களாக ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டது. தங்கள் நாட்டை பாதுகாக்க இந்தியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் இவை மிக சிறிய விஷயங்களே என்று சுதந்திர தொழிலாளர் கட்சி கருதுகிறது.ஜாதி, மத பேதமின்றி ஒரு குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்ட எல்லாருக்கும் ராணுவ பயிற்சியை அறிமுகப்படுத்துவதே மிகவும் முக்கியமானதாகும். இந்தக் கொள்கை மட்டுமே இந்தியர்கள் தங்கள் நாட்டை காப்பதற்கான முயற்சியில் வெற்றியளிக்கும்.ராணுவ கல்லுாரிகளை திறக்க வேண்டும் என்பதெல்லாம் மிக சிறிய விஷயங்களாக அம்பேத்கர் நினைக்கிறார். அதில் பெரிய விஷயமாக அம்பேத்கர் குறிப்பிடுவது என்னவெனில் ஜாதி, மத பேதமின்றி ஒரு குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்ட எல்லாருக்கும் ராணுவ பயிற்சியை அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்கிறார்.
குறிப்பிட்ட வயது என்பது எது?
இப்போது 'அக்னிபத்' திட்டத்தில் குறிப்பிட்டுள்ள வயது தான் அது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஏனெனில், 17 - 25 வயது வரை உடல் ராணுவப் பயிற்சியை ஏற்றுக் கொள்ளும் என்பதை எல்லாரும் ஏற்றுக் கொள்வர்.
கட்டாய ராணுவ பயிற்சி
அந்த அறிக்கையில், மேலும் பல புரட்சிகரமான அக்னிபத் கருத்துகளை முன் வைக்கிறார் அம்பேத்கர். யுத்த காலத்தை போல, யுத்தம் அல்லாத காலத்திலும், ராணுவக் கண்ணோட்டத்தில் இந்திய மக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் அம்பேத்கர்.'இந்தியாவின் மனித வளம் அளவிடற்கரியது. தேவைப்படும் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டால் இந்தியாவில் மட்டுமல்ல; பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே எவ்வளவு வலிமையான ஆக்கிரமிப்பாளரிடமிருந்தும் அது பாதுகாக்கும். 'தேசிய பாதுகாப்பிற்காக இந்திய இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதை பிரிட்டிஷ் அரசு சிந்திக்காதிருப்பது ஆச்சரியமாக உள்ளது. யுத்தம் நடக்கும் போது மட்டுமே, இந்தியர்களை ராணுவ வீரர்களாக்கி, யுத்தம் முடிந்தவுடன் அவர்களை ராணுவ பணியிலிருந்து நீக்கி, செயலற்றவர்களாக செய்வதே ஆச்சரியத்தை அளிக்கிறது.இவ்வாறு அம்பேத்கர் குறிப்பிட்டார்.அம்பேத்கரின் அக்னிபத் திட்டத்தில் அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சியை முன் வைக்கிறார். தற்போது கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தில் கட்டாயம் இல்லை. சேர விரும்புபவர்கள் சேரலாம் என்று தான் உள்ளது.
அதனால் தான் அம்பேத்கரின் அக்னிபத் திட்டம் புரட்சிகரமானது எனலாம்.அதே அறிக்கையில் மற்றொன்றையும் கூறுகிறார்...அதேபோன்று நிரந்தர படைக்கும் எல்லா வகுப்புகளில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே ராணுவத்திற்கு தகுதியானவர்கள் என்ற வேறுபாடின்றி, எல்லா பிரிவினரிடமிருந்தும் ஆட்கள் சேர்க்கப்பட வேண்டும்.அதிகாரிகள் பணியை நேர்மையான முறையில் இந்தியர் மயமாக்க வேண்டும். தற்போது கடற்படை மற்றும் ராணுவ பயிற்சிப் பள்ளிகளில் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளே சேர முடிகிறது; அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் என்பதால் அல்ல. பயிற்சிக்கான அதிக கட்டணத்தை அவர்கள் செலுத்த முடிவதால் தான்.வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ராணுவ சேவையில், உயர் பதவிகளில் செல்வந்தர்களும் விசேஷமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில வகுப்பினர் மட்டுமே ஆக்கிரமித்து கொண்டதை மாற்றுவதன் மூலம் பிரிட்டிஷ் அரசின் மீது நம்பிக்கை உருவாக கூடும்.(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 36, பக்கம் 404, 405)எல்லா சமுதாயத்தினரையும் ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற அம்பேத்கரின் அக்னிபத் திட்டம் நிறைவேற்றப்பட்டது என்றாலும், ஏழை பட்டியல் சமூக இளைஞர்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது.இப்போதும் கூட மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு அடிமாடாய் வேலை செய்து கொண்டிருக்கின்றனர், பட்டியல்சமூக இளைஞர்கள். அவர்களுக்கு காப்பீடு இல்லை;நிரந்தரமான வேலை இல்லை.
அக்னி வீரன்
இதை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான் புரட்சியாளர் அம்பேத்கர் ராணுவத்தில் பட்டியல் சமூக இளைஞர்கள் சேர அறிவுறுத்தினார். பட்டியல் சமூக இளைஞர்களுக்கு மட்டுமல்ல, மற்ற சமுதாய ஏழை இளைஞர்களுக்கும் இதே நிலை தான்.இந்த நிலையை மாற்ற தற்போது வந்துள்ள அக்னிபத் திட்டம் வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது.நான்கு ஆண்டுகள், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை நல்ல சம்பளம் பெற முடியும்; காப்பீடு இருக்கிறது. நான்கு ஆண்டு முடிவுக்கு பின், 15 ஆண்டுகள் வேலை கிடைக்கும். வேலை கிடைக்காதவர்கள் கையில், 11 லட்சம் ரூபாயுடன் வீடு திரும்பலாம். முக்கியமாக அக்னிவீரன் என்று சமூகத்தில் மதிப்பு கிடைக்கும்.ஆகவே அம்பேத்கர் அப்போது சொன்னதை தான் இப்போது சொல்கிறோம்... பட்டியல் சமூக இளைஞர்கள்மட்டுமல்ல, எல்லா சமூக இளைஞர்களும் ஆர்வமிருப்பின் சேருங்கள் அக்னிபத் திட்டத்தில்!
இவனுங்க அதை இல்லம் கேட்க மாட்டானுங்க.இவனுங்க கம்மியா மார்க்கு வாங்குவானுங்க.எல்லா காலேஜில இடம் கேட்பானுங்க. எல்லா வேலையும் கேட்பானுங்க. கேட்ட ஈட்டா ஒதுக்கீடு, அப்படிம்பாங்க.திறமை கிடையாது.ஆனா அம்பேத்கர் வாழ்கம்பங்க