Load Image
dinamalar telegram
Advertisement

காங்., 'மாஜி' தோள் பட்டையை இறக்கிய போலீஸ்!

காங்., 'மாஜி' தோள் பட்டையை இறக்கிய போலீஸ்!
''கட்டிய வீடுகளை கூவிக்கூவி வித்துட்டு இருக்காவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''வாங்கிப் போட வேண்டியது தானேங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''முழுசா கேளும்... வேலுார் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி வள்ளலார்ல, 22வது வார்டு மலையடிவாரத்துல, 10 ஏக்கர் அரசு நிலத்தை சிலர், 'ஆட்டை' போட்டது மட்டுமில்லாம, அஞ்சு வருஷத்துக்கு முன்ன, 'பிளாட்' போட்டு வித்துட்டாவ வே...

''இது தெரியாம, நிலத்தை வாங்கிய பலர் வீடு கட்டி குடிவந்துட்டாவ... இப்ப அங்க 100க்கும் அதிகமா வீடுகள் வந்துட்டுல்லா... நிலத்தை ஆட்டைய போட்ட, 'மேட்டர்' இப்ப தெரியவந்ததால, 30 நாளுக்குள்ள வீட்டை காலி செய்ய உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' வந்துட்டு வே...

''இதனால, அவங்க அவசர அவசரமா, 5 லட்சம், 8 லட்சம்னு வந்த விலைக்கு வீட்டை கூவிக்கூவி வித்துட்டு இருக்காவ... ஆக்கிரமிப்பு இடம்னு தெரியாம, அதையும் சிலர் வாங்கிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''டிரான்ஸ்பர் கேட்டவாள்லாம் பீதியில இருக்கா ஓய்…'' என, காபியை ஆற்றியபடியே அடுத்த தகவலை ஆரம்பித்தார், குப்பண்ணா.

''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''பத்திரப்பதிவு துறையில ஏப்ரல், மே மாசத்துல சார் - பதிவாளர்களுக்கு பொது மாறுதல் வழங்கறது வழக்கம்... போன ரெண்டு வருஷமா இந்த பணி நடக்கலை ஓய்...

''இப்ப, 350 சார் - பதிவாளர்கள், சொந்த காரணங்களுக்காக, 'டிரான்ஸ்பர்' கேட்டு மனு குடுத்திருக்கா... சிலர் ஆர்வக் கோளாறுல, 'டிரான்ஸ்பர் எப்ப கிடைக்கும்'னு பதிவுத்துறை ஐ.ஜி., ஆபீஸ்ல விசாரிச்சிருக்கா ஓய்...

''இதனால, மேலதிகாரிகள் கடுப்பாயிட்டா... 'டிரான்ஸ்பர்' கேட்டவா மேல பழைய புகார் ஏதாவது இருக்கான்னு பார்த்து, நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்டுட்டா... இதனால, சார் - பதிவாளர்கள் எல்லாம் திகில்ல இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''தோள் பட்டையை இறக்கி அனுப்பிட்டாங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''காங்கிரஸ் எம்.பி., ராகுலை, 'நேஷனல் ஹெரால்டு' வழக்குல அமலாக்கத் துறை விசாரிச்சாங்களே... இதை கண்டிச்சு, காங்கிரஸ் எம்.பி.,க்களும், மூத்த தலைவர்களும் டில்லியில போராட்டம் நடத்தினாங்க...

''இந்தப் போராட்டத்துல, கேரள எம்.பி., ஒருத்தரை போலீசார் கைது செஞ்சு வச்சிருந்தாங்க... அவரை, கேரள மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், 'மாஜி' எம்.பி.,யுமான விஸ்வநாதன் மீட்டு கொண்டு வந்தாருங்க...

''உடனே, விஸ்வநாதனையும் கைது செஞ்சு வேன்ல ஏத்திட்டாங்க... ஆனா, போலீசுக்கு தெரியாம, வேனின் முன்பக்கம் வழியா நைசா இறங்கி வந்த விஸ்வநாதன், திரும்ப போராட்ட களத்துல இறங்கி கோஷம் போட்டிருக்காருங்க...

''கடுப்பான டில்லி போலீசார், அவரை குண்டுகட்டா வேன்ல துாக்கி எறிஞ்சு, டில்லி எல்லையில இருக்கிற பதேபூர் சிக்ரி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போயிட்டாங்க... நள்ளிரவு வரை, அங்கேயே உட்கார வச்சு தான் திருப்பி அனுப்பியிருக்காங்க...


''வேன்ல துாக்கி வீசியதுல, விஸ்வநாதனின் தோள் பட்டை இறங்கிடுச்சு... சத்தம் காட்டாம சென்னைக்கு வந்தவர், இப்ப சிகிச்சை எடுத்துட்டு இருக்காருங்க...'' என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அப்படிப்பார்த்தால் சார்பதிவாளர்களில் ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்களே

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement