வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன்: தமிழகத்தில், கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இரண்டு நாட்களாக கன மழை பெய்துள்ளது. ஜூனில் சென்னை மாவட்டத்திற்கு, இயல்பாக 5.6 மி.மீ., மழை கிடைக்கும். கடந்த 19ம் தேதி ஒரே நாளில், சென்னை மாவட்டத்தில், 8.2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில், பதிவான மழையை விட, மிக மிக அதிகம்.
@@டவுட் தனபாலு: இந்த புள்ளிவிபரங்கள் எல்லாம், சாதாரண மக்களுக்கு தேவையா...? அதை வானிலை அதிகாரிகள் பார்த்துக்குவாங்க... மழை பெய்தால் சாலைகள்லயும், தெருக்கள்லயும் தண்ணீர் தேங்க கூடாது... அதுக்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கீங்களா என்ற, 'டவுட்'டுக்கு தங்களிடம் பதில் இருக்கிறதா... இல்லை என்றால், அதற்கான பணிகள்ல உடனே இறங்குங்க!
பத்திரிகை செய்தி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், 'அம்மா ஆன்மிக பேரவை' என்ற அமைப்பை, புதிதாக துவக்கி உள்ளார். 'இந்த அமைப்பில் அரசியல் இல்லை. ஜெயலலிதாவை நேசிக்கும் உங்கள் வாழ்த்துக்களோடு பயணிக்க விரும்புகிறேன்' என, பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வில் பழனிசாமி, பன்னீர்செல்வம் பதவி சண்டையால வெறுத்து போய், அரசியலே வேண்டாம் என முடிவுக்கு பலர் வந்திருக்காங்க... அவங்களுக்கு தங்களது இயக்கத்தில் இடம் உண்டா என்ற, 'டவுட்'டுக்கு விளக்கம் தாங்களேன்!
தே.மு.தி.க., தலைமை அறிக்கை: பல ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்னையால், விஜயகாந்த் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லை. இதனால், டாக்டர்களின் ஆலோசனைப்படி, நேற்று முன்தினம் விரல் அகற்றப்பட்டது. டாக்டர்கள் கண்காணிப்பில், தற்போது நலமுடன் உள்ளார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டவுட் தனபாலு: நோய், நொடி வருவது எல்லாருக்கும் இயற்கை தான் என்றாலும், சினிமாவிலும், அரசியலிலும் சிங்கம் மாதிரி கம்பீரமா வலம் வந்த மனிதருக்கு இந்த நிலையா...? இன்றைக்கு பதவிக்காகவும், அந்தஸ்துக்காகவும் அடித்து கொள்ளும் அரசியல் தலைவர்கள், ஒரு கணம் இதை எண்ணிப் பார்த்தால் என்ன என்பது தான் எங்க, 'டவுட்!'
அரசியலிலும் சிங்கம் மாதிரி கம்பீரமா வலம் வந்த விஜயகாந்த் இன்று நலமுடன் யிருந்திருந்தால் தமிழ்நாடு அரசியல் களைகட்டியிருக்கும்.