Load Image
Advertisement

அரசின் 'அக்னிபத்' திட்டம்: மாற்றம் செய்வது அவசியம்

மத்திய அரசு, 2021 செப்டம்பரில், பார்லிமென்டில் மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓராண்டிற்கும் மேலாக, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதன்பின், அந்த சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன.

அதேபோல, ராணுவத்தின் முப்படைகளுக்கு வீரர்களை தேர்வு செய்ய, இம்மாதம், ௧௪ம் தேதி ராணுவ அமைச்சர் அறிவித்த, 'அக்னிபத்' திட்டமும், பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பீஹார், உ.பி., தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில், போராட்டங்கள், வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. அக்னிபத் திட்டப்படி, ராணுவத்திற்கு தேர்வாகும் வீரர்கள், நான்கு ஆண்டுகள் பணியில் இருப்பர்; அவர்களுக்கு மாதம், ௩௦ முதல் ௪௦ ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். நான்கு ஆண்டு பணி முடிக்கும் போது, ௧௦ முதல் ௧௨ லட்சம் ரூபாய் வரையிலான தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில், பல மாநில இளைஞர்கள் இல்லை. ராணுவத்தில் பணியாற்றும் பலர்,


தங்களின் வாரிசுகளும் ராணுவ சேவைக்கு வர வேண்டும் என்று நினைக்கின்றனர். தங்களை விட தங்களின் வாரிசுகள், ராணுவத்தில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.ஆனால், அக்னிபத் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் சேரும் இளைஞர்கள், நான்காண்டு பணி முடிந்ததும் வீடு திரும்பி விடுவர்; அவர்களுக்கு முன்னாள் ராணுவத்தினருக்கான சலுகை கிடைக்காது.

மேலும், நான்காண்டு பணி முடித்து திரும்பும் அவர்கள், மீதமுள்ள காலத்தை நிம்மதியாக கழிக்கும் வகையில், வேறு வேலைகளுக்கு முழு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்பதே, பெரும்பாலானவர்களின் குற்றச்சாட்டு. அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை அடுத்த ஆண்டிற்குள் தேர்வு செய்யும்படி, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தார்.


அதே பாணியில், அக்னிபத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு, 40 முதல் 50 ஆயிரம் வீரர்களை தேர்வு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டிருந்தாலும், இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கு, எதிர்கால பணி உத்தரவாதம் இல்லாதது, ஓய்வூதியம் கிடைக்காது என்பதுமே பிரச்னைகளுக்கு காரணம்.

கடந்த, 2019 ஏப்ரலில் வெளியான ஆய்வு முடிவு ஒன்றில், 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் கொரோனா காரணமாக நாடு முழுதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, அமைப்பு சாரா துறைகளில் வேலையின்மை பாதிப்பு அதிகம். அதனால் தான், ராணுவ பணியில் சேர்ந்தால் பணி பாதுகாப்பு கிடைக்கும் என இளம் தலைமுறையினர் நம்பிக் கொண்டிருந்த நிலையில், மத்திய அரசின் புதிய அணுகுமுறை, அவர்களை கோபம் அடையச் செய்துள்ளது. தற்போதைய போராட்டங்களும், தீ வைப்பு சம்பவங்களும் தொடர்ந்தால், அது நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதோடு, அன்னிய முதலீடுகளின் வருகையிலும் தடையை ஏற்படுத்தலாம்.

எனவே, அக்னிபத் திட்டத்தின் கீழ், ராணுவ பணியில் சேரும் வாலிபர்களுக்கு, அவர்களின் எதிர்கால வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் தர வேண்டும். மத்திய, மாநில துணை ராணுவ படைகள் மற்றும் மாநில போலீசில் அவர்கள் அதிக அளவில் நியமிக்கப்படுவதற்கான ஒதுக்கீடும் அளிக்கப்பட வேண்டும். அத்துடன், ராணுவத்தில் பணியாற்றும் காலத்தில்,ஒவ்வொரு வீரரும், தங்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.

நான்காண்டு பணி முடித்து திரும்பும் போது, அவர்களின் தொழில்நுட்பத் திறன் அடிப்படையில், வேறு நல்ல வேலையை நிச்சயம் பெற முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதற்கேற்ற வகையில், தற்போதைய திட்டத்தில் மாற்றங்களைச் செய்து, அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதை மத்திய அரசு செய்ய வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பு.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement