Load Image
dinamalar telegram
Advertisement

'மாயமான' போட்டோ; 'காயம்பட்ட' வி.ஐ.பி.,

''எம்.எல்.ஏ.,வை தொகுதிக்குள்ள காணலைன்னு போஸ்டர் ஒட்டுற அளவுக்கு நிலைமை வந்துடுச்சாம்க்கா'' என, பேச்சை துவக்கினாள் மித்ரா.

''என்ன சொல்ற…'' என, ஆச்சர்யத்தில் விழிகளை விரித்தாள் சித்ரா.''ஆமாங்க்கா. அவிநாசி எம்.எல்.ஏ.,வா இருக்கிற முன்னாள் சபாநாயகரு, தொகுதி பக்கம் வர்றதே இல்லையாம். அவரை காணலைன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டலாம்ன்னு சில அமைப்புகளைச் சேர்ந்தவங்க முடிவு பண்ணியிருக்காங்க. இந்த விஷயம் எப்படியோ, கட்சிக்காரங்க காதுக்கு போக, அடுத்த நாளே அவிநாசியில இருக்கிற ஆபீசுக்கு எம்.எல்.ஏ.,வை வர வச்சு, தெரிஞ்சவங்களையெல்லாம் கூட்டிட்டு வந்து மனுவும் கொடுக்கவச்சிருக்காங்க. 'இனி, மாசம் ஒரு முறை குறைகேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு பண்றேன்'னு சொல்லிட்டு போயிருக்காராம் எம்.எல்.ஏ.,'' என்றாள் மித்ரா, ஜெட் வேகத்தில்.''இப்படித்தான் மித்து. அவரு ஜெயிச்சத்துக்கு அப்புறம் கூட, ரொம்ப நாளா தொகுதிக்குள்ள தலை காட்டவே இல்ல. அப்பத்தான், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அவரு பேரும் அடிபட்டுச்சு. கட்சியில தனக்கு முக்கியத்துவம் இல்லைங்கறதுக்காக, கட்சி மாறப்போறார்ன்னு, சிலர் 'வாட்ஸ்ஆப்'ல கிளப்பி விட, அடிச்சு, பிடிச்சு அடுத்த நாளே, ஆபீசுக்கு வந்த அவரு, 'நான் அ.தி.மு.க.,வின் உண்மை விசுவாசி; எம்.ஜி.ஆர்., காலத்துல இருந்து கட்சியில இருக்கேன்; கட்சியெல்லாம் மாற மாட்டேன்னு, சொல்லிட்டு போனாரு,'' என்று பழையதைக் கிளறினாள், சித்ரா.

அரிசி கடத்தல் அம்பலம்
''அவிநாசில போலீஸ் ஸ்டேஷன் பக்கம் இருக்கிற, ஒரு ஊராட்சி ஒன்றிய பள்ளி சமையல் கூடத்துல இருந்து, ரெண்டு மூட்டை அரிசியை மொபட்ல ஏத்திக்கிட்டு ஒருத்தரு வெளிய வந்திருக்காரு. அந்த நேரம் பார்த்து அங்க இருந்த சில பத்திரிகைகாரங்க, போலீஸ்காரங்க கண்ணுல இது பட, 'எதுக்கு அரிசியை வெளியே தர்றீங்க'ன்னு அங்க இருந்த ஊழியருங்க கிட்ட கேட்டிருக்காங்க. 'அது வந்து…அரிசியெல்லாம் பூச்சி பிடிச்சு போச்சு; அதனால தான் வெளியே கொடுத்தோம்'ன்னு, அவங்க சொல்லியிருக்காங்க.''ஆனா, அரிசியை எடுத்துட்டு போனவரு, பல இடங்கள்ல இருந்தும் ரேஷன் அரிசியை வாங்கிட்டு போய், மில்களுக்கு தர்ற தொழில்ல கொடி கட்டி பறக்கிறவராம். அவரு மேல ஏற்கனவே, போலீஸ் கேஸ் இருக்காம்; ஜெயிலுக்கு வேற போய்ட்டு வந்திருக்காராம். இந்த விஷயம் கல்வி அதிகாரிங்க காதுக்கு போக, 'இப்படியே விட்டா, ஸ்கூல் பேரு தான் கெட்டுப்போகும்'ன்னு, அந்த ஊழியரை 'கருணை' காட்டாம வேற இடத்துக்கு மாத்திட்டாங்களாம்,'' என்று அடுக்கினாள் மித்ரா.

காணாமல் போகும்கனிமவளம்
''தாராபுரத்துல பல இடங்கள்ல மண், மணல் கடத்தறாங்களாம். பல்லடத்துல லைசென்ஸ் இல்லாம நிறைய கல் குவாரிங்க இருக்காம். இந்த விஷயமா, பொது ஜனங்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து புகார் பண்ணியும், அதிகாரிங்க நடவடிக்கை எடுக்காம ஆய்வுங்ற பேர்ல போய், பாக்கெட்டை நிரப்பிட்டு வந்துடறாங்களாம்,'' என, விஷயத்தை போட்டு உடைத்தாள் சித்ரா.''கனிம வளம் சுரண்டப்படற விவகாரத்துல, நம்ம கலெக்டரு ரொம்ப கண்டிப்பு காட்றாரு. இது விஷயமா என்ன பண்ண போறார்ன்னு பார்க்கலாம்,'' என எதிர்பார்ப்பை சொன்னாள் மித்ரா.''அதிகாரிங்க கண்டிப்பு காட்டி என்ன பிரயோஜனம்? அரசியல்வாதிங்க தலையிடாம இருக்கணுமே!'' என, பெருமூச்சுவிட்ட சித்ரா, ''இடுவாய்ல, நெசவாளர்ங்க பாவு சுத்த பயன்படுத்திட்டு இருந்த நிலத்த, ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க ரொம்ப நாளா ஆக்கிரமிச்சு வச்சிருந்தாங்க. விவகாரம் கோர்ட் வரைக்கும் போக, ஆக்கிரமிப்பை எடுக்கணும்ன்னு கோர்ட் உத்தரவு போட்ருச்சு; ஆனா, நடவடிக்கை எடுக்க விடாம, மாநகராட்சி நான்காவது மண்டல ஆளுங்கட்சி வி.ஐ.பி., ஒருத்தரு, தடுத்துக்கிட்டே இருக்காராம். 'கோர்ட் உத்தரவை கூட அமல்படுத்த விட மாட்டேங்கறாங்களே; கோர்ட் அவமதிப்பு வழக்கு, அப்படி, இப்படின்னு யாராவது எங்க மேல புகார் கொடுத்தா என்ன பண்றது? அவங்களா வந்து எங்கள காப்பாத்துவாங்க'ன்னு, அதிகாரிங்க புலம்பறாங்களாம்,'' என்றாள்.

சேதி சொல்றஅதிகாரிக்கே 'சேதி'
''அதிகாரிங்க சொல்றதும் ஒரு வகையில சரிதானே'' என 'உச்' கொட்டிய மித்ரா, ''சேதி சொல்ற அதிகாரிங்களுக்கே 'சேதி' சொல்லிட்டாராம், நம்ம சவுத் வி.ஐ.பி.,'' என்றவள் தொடர்ந்தாள்.''திருப்பூர் குமரன் நினைவிடத்துல, தியாகிகள் படம் திறப்பு விழா நடந்துச்சு. விழா சம்மந்தப்பட்ட பேனர்ல, ரெண்டு உள்ளூர் அமைச்சருங்க போட்டோ மட்டும் தான் இருந்துச்சாம். இதபார்த்து, நிகழ்ச்சிக்கு வந்த சவுத் வி.ஐ.பி., டென்ஷன் ஆகிட்டாராம். சால்வை போடறப்போ கூட, அவர மறந்துட்டாங்களாம். நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ண சேதி சொல்ற அதிகாரிகள பார்த்து, 'போன ஆட்சியில செஞ்ச மாதிரியே பண்ணிட்டு இருக்கீங்க; தலைமைகிட்ட சொல்லி தொலைச்சுப்புடுவேன்''னு மிரட்டாத குறையா சத்தம் போட்டிருக்காராம்'' என கலவரமான நிலவரத்தை விளக்கினாள்.''அது என்ன போன ஆட்சியில பண்ண மாதிரி…?'' என புரியாதவளாய் கேட்டாள் சித்ரா.''சேதி சொல்ற அதிகாரி, உதவி அதிகாரிங்க பணியிடம்ங்கறது, கட்சி சார்ந்தது. அந்தந்த கட்சிக்கு விசுவாசமா இருந்தவங்களோட வாரிசுங்க, உறவுக்காரங்களுக்காக உருவாக்கப்பட்ட பணியிடம் அது. எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அந்த கட்சி சார்ந்த அதிகாரிங்க தான், சேதி சொல்ற அதிகாரிங்களா வருவாங்க. நம்ம ஊர்ல இருக்கிற ரெண்டு அதிகாரிங்களும், அ.தி.மு.க., குடும்பத்தை சேர்ந்தவங்க. ஆனாலும், அந்த துறையை கவனிக்கிற உள்ளூர் அமைச்சரோட ஆதரவு இருக்கிறதால, அவங்க எதுக்கும் பயப்படறது இல்லையாம். 'சாமி'யே சரணாகதின்னு, அவருக்கு மட்டும் தான் விசுவாசமா இருக்காங்களாம். இதனால் சவுத் வி.ஐ.பி.,யோட மனச இது காயப்படுத்திடுச்சாம்'' என்றாள் மித்ரா.''ஓ… அதனாலதான், சவுத் வி.ஐ.பி., அவ்வளவு டென்ஷன் ஆனாரா? இந்த விவகாரத்துல, தன்னோட செல்வாக்கை காண்பிக்க தயாராகிட்டார்ன்னு, 'செல்வராஜ்' அங்கிள் சொன்னதுக்கான காரணம் இப்பத்தான் புரியுது'' என தெளிவானாள் சித்ரா.

அசட்டை அதிகாரிகளுக்கு 'செக்'
''பாண்டியன் நகர்ல இருக்கிற ஒரு குடும்பத்தை சேர்ந்தவங்க, தங்களோட உறவுக்காரருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, சிறுநீரகத்தை தானமா கொடுக்கிறது சம்பந்தமா, சான்றிதழ் கேட்டு, வடக்கு தாலுகா அலுவலகத்துல விண்ணப்பிச்சிருக்காங்க. அதிகாரிங்க ஒரு மாசமா இழுத்தடிக்க, சமூக ஆர்வலர் மூலமா, நேரா கலெக்டரு ஆபீஸூக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல, உடனடியாக சான்றிதழ் கைக்கு வந்து சேர்ந்துடுச்சாம். ஆனா, அந்த சான்றிதழை முன்தேதியிட்டு கொடுத்து, தான் சரியா வேல பார்க்கிறதா காண்பிச்சுக்கிட்டாராம், அந்த அதிகாரி. இருந்தாலும், 'எப்ப சான்றிதழ் கொடுத்தீங்களோ, அந்த தேதியை போட்டு தான் சான்றிதழ் தரணும்'ன்னு, அந்த சமூக ஆர்வலர் சொல்ல, 'வாங்க, மாத்தி கொடுத்துடறேன்'னு அதிகாரி சொல்லிட்டாராம்'' என்றாள் மித்ரா.''தங்களோட வேலைய செய்றதுக்கே, சலிச்சுக்கிட்டா என்னதான் பண்றது! இப்படிதான், கிராமப்புறங்கள்ல வளர்ச்சிப்பணிகள கவனிக்கிற பெரிய அதிகாரி, எப்போ பார்த்தாலும் ஆபீஸ்லயே இருப்பாராம். 'இப்படியெல்லாம் நேரத்தை வீணடிக்கக்கூடாது; 'பீல்டு ஒர்க்' பண்ணணும்'ன்னு கலெக்டர் சொல்ல, 'இப்ப, ஆபீஸ்லேயே இருக்கறது இல்லையாம்; எப்ப பார்த்தாலும், 'கேம்ப்'புக்கு போயிட்டார்ன்னே சொல்றாங்களாம். இதனால, ஊருக்குள்ல இருக்கற பிரச்னைகளை சொல்றதுக்காக வர மக்கள், அவரை பார்க்க முடியாம போகுதாம்'' என, நிலவரத்தை புட்டுவைத்தாள் சித்ரா.

மறுபடியும் முதல்ல இருந்து!
''தாராபுரத்துல போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துலேயே சட்ட விரோதமா சரக்கு விக்கிறாங்களாம். இந்த மாதிரி, பல இடங்கள்ல கிளை அமைச்சு, சரக்கு விக்கிற வேலைய, ஆளுங்கட்சி பெண் கவுன்சிலரோட வீட்டுக்காரர் ஒருத்தருதான் செய்றாராம். போலீஸ்காரங்களும் கண்டுக்கவே மாட்டேங்கறாங்களாம். எல்லாம் அந்த ஐயப்பனுக்கே வெளிச்சம்ன்னு, அங்க இருக்கற மக்கள் புலம்பறாங்க. அதே மாதிரி, பல்லடத்துலயும் கொரோனா சமயத்துல கட்டுக்குள் இருந்த சட்டவிரோத சரக்கு விற்பனை திரும்பவும் தலைதுாக்கிடுச்சாம்,'' என்று சித்ரா ஆதங்கப்பட்டாள்.''நம்ம சிட்டி போலீஸ் இப்ப ரொம்ப சுறுசுறுப்பா இருக்காங்க. ஸ்டேஷனுக்கு புகார் தர்ற வர்றவங்க, எவ்வளவு நேரம் ஸ்டேஷன்ல இருக்காங்க; எத்தனை மணிக்கு போனாங்க, அப்படிங்கற எல்லா விஷயத்தையும் பெரிய அதிகாரிக்கு 'அப்டேட்' பண்றாங்களாம்,'' என்றாள் மித்ரா, விஷயம் தெரிந்தவளாக.''அதெல்லாம் சரிதான், ஆனா, மூணு வருஷத்துக்கு மேல ஒரே ஸ்டேஷன்ல வேல பார்க்குறவங்களுக்கு டிரான்ஸ்பர் தர்றதா சொல்லி, விருப்ப மனு வாங்கினாங்களாம். ஆனா, இதுவரை டிரான்ஸ்பர் போடாததால போலீஸ்காரங்க கொஞ்சம் 'அப்செட்'ல இருக்காங்காளாமே,'' என கேள்விப்பட்டதை சொன்னாள் சித்ரா.சமையலறைக்குள் நுழைந்த சித்ரா, சூடாக காபியும், மெதுவடையும் எடுத்து வர, ருசித்து விடை பெற்றாள் மித்ரா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement