அறிக்கை கொடுப்பர்,ஆர்ப்பாட்டம் செய்வர்,அதிகம் போனால் உண்ணாவிரதம் இருப்பர்,அகிம்சையே வலிமை என்பார்கள் இதுதானே அடிமை இந்தியர்களின் அடையாளம் என்று அலட்சியமாக இருந்த பிரிட்டிஷ் அரசுக்கு துப்பாக்கி குண்டை அறிமுகப்படுத்தி அச்சத்தை ஏற்படுத்தியவர்தான் வீரவாஞ்சிநாதன்.
அவரின் 111 வது நினைவு நாள் இன்று.
இன்றைய தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பிறந்து வளர்ந்தவரான வாஞ்சிநாதன் நாட்டுப்பற்று காரணமாக தான் பார்த்துவந்த அரசு வேலையையும் உதறித்தள்ளினார்.நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற புரட்சியாளர்களுடன் சேர்ந்து நாட்டு சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தும் பாதையில் பயணித்தார்.
நாட்டிற்காக சகலத்தையும் இழந்த தியாகி வஉசியை, கைது செய்ததும் அல்லாமல் செக்கிழுக்கவைத்து மேலும் கொடுமைப் படுத்திய பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக திருநெல்வேலியில் திரண்டு எழுந்த இளைஞர்களை கண்மூடித்தனமாக போலீசார் சுட்டதில் நான்கு பேர் இறந்தனர்.இந்த துப்பாக்கி சூட்டிற்கு பின்னனியில் அன்றைய திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரைதான் இருந்தார் என்பதால் அவருக்கு மரணத்தின் வலி எத்தகையது என்பதை உணர்த்த அன்றைய புரட்டசியாளர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக நள்ளிரவில் காளியின் முன்கூடிய இளைஞர்கள் கலெக்டர் ஆஷ் துரையை யார் சுடுவது என்பதை காளிமுன் சீட்டு எழுதிப்போட்டு எடுக்க முடிவு செய்தனர் அந்த சீட்டில் வாஞ்சிநாதன் பெயரை சேர்க்க வேண்டாம் என்றும் எண்ணினர் காரணம் அப்போதுதான் வாஞ்சிநாதனுக்கு திருமணமாகியிருந்தது.
ஆனால் என் பெயரை கட்டாயம் எழுத வேண்டும் என்று சொல்லி தனது பெயரை அவரே எழுதிக் கொடுத்தார் கடைசியில் அவரது பெயரே தேர்வும் செய்யப்பட்டது ‛ஆகா! காளியின் ஆணை இது' என்று அங்கேயே அப்போதே ஆர்ப்பரித்தார்.
கலெக்டர் ஆஷ் துரை கொடைக்கானல் செல்வதற்காக மணியாச்சி ரயில் நிலையத்தில் உள்ள ரயிலில் காத்திருந்தார் ஒரு பயணி போல அவரது பெட்டியில் ஏறியவர் கொஞ்சமும் பதட்டப்படாமல் ஆஷ்துரையின் நெஞ்சைக்குறிவைத்து மூன்று முறை சுட்டு அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தபின் ரயில் பெட்டியை விட்டு இறங்கினார்.
துப்பாக்கிசுடும் சத்தம், ஆஷ்துரையின் மனைவியின் அலறல் சத்தம் இதைஎல்லாம் கேட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த நடந்ததை அறிந்து வாஞ்சியை பிடிக்க நெருங்கினர்.அவரோ பிடிகொடுக்காமல் ஒடி ரயில் நிலையித்தில் இருந்த ஒரு கட்டிடத்திற்குள் சென்று பதுங்கினார், போலீசார் சுற்றிவளைத்தனர், அடுத்த சில நொடியில் வாஞ்சி இருந்த அறைக்குள் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டது,அறைக்குள் விரைந்து சென்ற போலீசார் பார்த்தது கையில் துப்பாக்கியுடன் நெற்றியில் சுட்டுக் கொண்டு இறந்துகிடந்த வாஞ்சிநாதன் உடலைத்தான்.
போலீசார் கையில் பிடிபட்டு சாவதை விட தன்னைத்தானே மாய்த்துக் கொள்வது என்று முன்கூட்டியே தீர்மானித்து இருந்தார் என்பதை அவரது சட்டைப்பையில் இருந்த கடிதத்தைக் கொண்டு அறிந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது பிரிட்டிஷ் அதிகாரிகள் பலருக்கு உயிர்பயம் ஏற்பட்டது வெளியில் நடமாடவே உதறல் கொடுத்தது பலர் சொந்த ஊருக்கு கிளம்பினர்,சுதந்திரத்திற்காக எந்த தியாகதிற்கும் இந்தியர்கள் செல்வர் என்பதை உணர்ந்தனர். இனி நாம் இங்கு காலம்தள்ளமுடியாது என்பதை உணர்ந்தனர்.
இதற்கெல்லாம் வழிவகுத்த தியாகிகளில் வாஞ்சிநாதனின் தியாகமும் மகத்தானது அவரின் நினைவு நாளான இன்று அவரது நினைவை போற்றுவோம்.
-எல்.முருகராஜ்
வீரன் வாஞ்சி நாதனுக்கு வீர வணக்கங்கள்....