தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், சமீப நாட்களாக அதிகரித்து வருவதாலும், கொரோனாவில் உருமாறிய வைரஸ்களான, 'பிஏ - 4, பிஏ - 5' போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாலும், தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, 'இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்களை போடும்படி செய்ய வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.
கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணி, கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி துவங்கியது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், தமிழகத்தில் இன்னும், 43 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.20 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடாமல் இருக்கின்றனர் என்பது கவலை தரும் விஷயம். அதனால், தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து, தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைத்து, அவர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளச் செய்ய வேண்டும் என, அதிகாரிகளை முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுதும், 17 மாவட்டங்களில், கொரோனா பரவல் வேகம், 10 சதவீதத்திற்கு மேல் உள்ளதாலும், தமிழக அரசு தரப்பில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலின் முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் போது, ஏராளமானவர்கள் தங்களின் இனிய உறவுகளை இழக்க நேரிட்டது. குழந்தைகள் பலர் தங்களின் பெற்றோரை இழந்து, ஆதரவற்றவர்களாகினர். தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், ஏராளமானோர் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். வசதியாக வாழ்ந்த குடும்பங்கள் பல ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்பட்டன.
அத்துடன், கொரோனா தொற்று பரவல் காலத்தில், ஒட்டுமொத்த சுகாதாரத் துறையும், தொற்று பரவலை தடுப்பதிலேயே கவனம் செலுத்தியதால், ரத்த அழுத்தம், இதய கோளாறு உள்ளிட்ட வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கான சிகிச்சை பெற முடியாத நிலைமை உருவானது. அதனாலும், ஏராளமானோர் உயிரிழக்க நேரிட்டது. மொத்தத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளை மட்டுமின்றி, வளர்ச்சி அடையாத நாடுகளையும், கொரோனா தொற்று பரவல் பெருமளவு பாதித்தது.
தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, டில்லி மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில், இரு வாரங்களாக கொரோனா பரவல், அதாவது உருமாறிய ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் ஒரு முறை பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும், தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்பதால், பணிபுரியும் இடங்கள் உட்பட அனைத்து இடங்களுக்கும், பொதுமக்கள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சானிடைசர்கள் வாயிலாக, அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதை, மக்கள் மீண்டும் வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். பொதுக்கூட்டங்கள், திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இன்னும் கொஞ்ச நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தாலும் தப்பில்லை. கோடை விடுமுறைக்குப் பின், இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதனால், வகுப்பறைகளுக்கு மாணவர்கள் முக கவசம் அணிந்து வரும்படி உத்தரவிட்டாலும் நல்லதே. அத்துடன், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில், குறிப்பாக சர்வதேச விமானங்கள் வாயிலாக வருபவர்களுக்கு தொற்று அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறியும் பணியை மேற்கொண்டாலும் தப்பில்லை.
ஒமைக்ரான் மற்றும் உருமாறிய வைரஸ்கள், கொரோனா தடுப்பூசி போடாதவர்களை மட்டுமின்றி, போட்டவர்களையும் பாதிக்கலாம் என்பதால், சளி, காய்ச்சல், இருமல் போன்றவை ஓரிரு நாட்களுக்கு மேல் தொடர்ந்தாலே டாக்டர்களை அணுகுவது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குறிப்பாக, நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சில நாட்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சிறு சிறு வேலைகளுக்காக வெளியே சென்றாலும், முக கவசம் அணிந்து செல்வதை வழக்கமாக்க வேண்டும். நோய் வருமுன் காப்பதே சிறந்தது என்பதால், கொரோனா அலை பரவல் மீண்டும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடாமல் இருக்க, பொதுமக்கள் நமக்கு நாமே சுய கட்டுப்பாட்டோடு இருப்பது அவசியம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!