Load Image
dinamalar telegram
Advertisement

நாடகம் இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது!

காசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும் திருப்பூர் பெருமாள் கோவில் களைகட்டி கொண்டிருந்தது. வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில், ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் என்ற தலைப்பில் நாடகம் அரங்கேறியது.

பஞ்ச பாண்டவர்களின், பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உரையாடும் காட்சியை, பக்தர்கள் வெகுவாக ரசித்து கொண்டிருந்தனர். துரியோதனனிடம் துாது செல்வது குறித்த காட்சியில், சகாதேவன் வேமிட்ட கலைஞர், மிகவும் சாந்தமாக, தெளிவான வார்த்தைகளால் வசனங்களை உச்சரித்து கொண்டிருந்தார்.அவரின் உடல் நடை, முகபாவம், பேச்சு ஆகியவற்றை ரசித்த பக்தர்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். அந்த காட்சி முடிந்ததும், அந்த கலைஞரிடம் பேச்சு கொடுத்தோம்...

அறிவானந்தம் எனது பெயர். இப்போது வயது, 81 ஆகிறது. 12 வயதில் இருந்து நாடகத்தில் நடிக்கிறேன். பிரபல நாடக நடிகர், ஆர்.எஸ்.மனோகருடன் பல நாடகங்களில் நடித்துள்ளேன். அவருக்காக, இந்திரஜித், பரசுராமர், துர்வாசர், நரகாசுரன், திருநாவுக்கரசர் ஆகிய நாடகங்களுக்கு வசனம் எழுதி கொடுத்ததற்கு அவர் பாராட்டியதை எப்போதும் மறக்கவே முடியாது.

நாடகங்களின் நலிவு குறித்து...ம்ம்... அதொரு காலம் (பெருமூச்சு விடுகிறார்). அப்போதெல்லாம், ஆயிரம் பேர் வரை வருவர். சினிமா வந்தது; கூட்டம் குறைந்தது; டிவி வந்தது; அதை விட குறைந்தது. இப்போது, டிஜிட்டல் யுகத்தில் நாடகம் நடப்பது அரிதாக விட்டது. இருந்தாலும், யூடியூப், வெப்சீரிஸ் என நாடகம் உயிர்ப்போடு தான் இருக்கிறது.

நாடக நடிகர்களுக்கு வருமானம்?அதில், பிரச்னை இருப்பதாக தெரியவில்லை. பலரும் நடிகர், துணை நடிகர்களாக 'டிவி' சீரியலில் நடித்து வருகின்றனர். என்ன பிரச்னை என்றால், தொடர்ந்து வாய்ப்பு வருவதில்லை. இதனால், பலரும் வெவ்வேறு தொழில் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இந்த வயதிலும் நடிக்க முடிகிறதா...எனது மூன்று மகன்களும், நடித்தது போதும். வெளியில் போகாதீர்கள் என்று சொல்கின்றனர். நானும் சரி போதும் என்று நினைப்பேன். இருந்தாலும் இந்த முறை மட்டும் போகலாம் என்று மேடையேறுவேன். காட்சி முடிந்ததும் மக்களின் கைதட்டல் என்னை மேலும் உற்சாக மூட்டும். அதனால், நடிப்பதை கைவிட முடியவில்லை. எந்த தொழிலாக இருந்தாலும், ஈடுபாட்டுடன் செய்தால், வயது ஒரு தடையல்ல.

சினிமா பக்கம் போனீங்களா...?அதெல்லாம் நடித்தாயிற்று. முப்பெரும் தேவியர், மீனாட்சி திருவிளையாடல், வெற்றி விநாயகர் ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதி, நடித்தும் உள்ளேன். 10 படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளேன். இதுதவிர, தமிழ்க்கடவுள் முருகன், அறுபத்து மூவர், பக்த விஜயம் ஆகிய 'டிவி' தொடர்களுக்கு வசனம் எழுதியுள்ளேன். சிறுவேடத்திலும் நடித்துள்ளேன்.

நாடக அனுபவம் குறித்து...இந்திரஜித் நாடகம், 500 முறை அரங்கேறியது. அனைத்திலும் நடித்துள்ளேன். அன்றைய காலகட்டத்திதல் சினிமாவில் நடிக்க வருவோர், நாடகத்தில் நடித்து அனுபவம் பெற்றனர். இன்று, 'டிவி' மிகப்பெரிய மீடியமாக மாறி விட்டதால், பல கலைஞர்கள் வருகின்றனர். நடிகர்களுக்கு, 'டிவி' ஒரு விசிட்டிங் கார்டு என்றும் சொல்லலாம்.என பேசி கொண்டிருக்கையில், நீல நிறத்தில், புல்லாங்குழல் சகிதமாக, ஸ்ரீகிருஷ்ணர் வேடமிட்ட தமிழ்நாடு தியேட்டர்ஸ் நாடக இயக்குனர் துரை பாலசுந்தரம், ''ஐயா, அடுத்த காட்சியில் நீங்களும் நடிக்கணும்,'' என்றார். உடனே, நம்மை பார்த்து, 'ஓ.கே., வர்றேன்,' என விடைபெற்றார் கலைமாமணி, கலைச்செல்வம், முத்தமிழ் பேரரறிஞர் என பல விருதுகளைப் பெற்ற நாடக கலைஞர் அறிவானந்தம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement