பிரச்னைகள் வரும்போது பகவானை நெருங்கி,எனக்கு பெரிய பிரச்னை இருக்கிறது நீங்கள்தான் தீர்த்துவைக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கின்றனர், இனிமேல் அப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது அந்தப் பிரச்னையிடம் சொல்லுங்கள் என்னிடம் பகவான் இருக்கிறார் என்று அப்போது அந்த பிரச்னைகள் யாவும் பயந்து ஒடிவிடும் என்று ஆர்.ஜே.ரத்னாகர் பேசினார்.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சத்யசாய்பாபா கோவிலான சுந்தரத்தில் சாய்பாபாவின் பளிங்கினலான பாத வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இந்த பாத வடிவமானது ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியில் உருவாக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக நடைபெற்ற யாகம் மற்றும் அபிசேக நிகழ்வுகளில் சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும்,மகாசமாதியாகிவிட்ட பகவான் சத்ய சாய்பாபாவின் இளைய சகோதரர் ஆர்.வி.ஜானகிராமையாவின் மகனுமான ஆர்.ஜெ.ரத்னாகர் கலந்து கொண்டார்.
இதற்காக நடைபெற்ற விழாவில் அவரது பேச்சு பலரது கருத்தையும் கவர்ந்தது..
பாதம் என்பது சாதாரணமானது அல்ல
ராமனின் பாதம் பட்டு அகலிகை மோட்சம் பெற்றாள்
ராவணனால் துாக்கி செல்லப்பட்ட சீதை தான் செல்லும் திசையை மற்றவர் அறிவதற்காக அணிந்திருந்த ஆபரணங்களை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக கழட்டி போட்டுக் கொண்டே போனாள், அந்த ஆபரணங்களை எல்லாம் சேகரித்து ராமர் முன் கொண்டு வந்தனர், அப்போது ராமன், தன் அருகேயிருந்த தம்பி லட்சுமணனை பார்த்து, ‛இவை எல்லாம் சீதையின் ஆபரணங்கள்தான் என்பதை உன்னால் உறுதிப்படுத்த முடியுமா?' என்று கேட்டார்தலையில் , கழுத்தில் அணியும் ஆபரணங்களை எல்லாம் பார்த்த லட்சுமணன், ‛என்னால் இந்த ஆபரணங்களை பார்த்து உறுதிப்படுத்த முடியவில்லை' என்று சற்றே விசனத்துடன் கூறியவன் கால் கொலுசை பார்த்தவுடன் ‛இது சீதாதேவியின் ஆபரணமேதான்' என்று உறுதிபடக்கூறினான். ‛எதை வைத்து சொல்கிறாய் லட்சுமணா? என்று கேட்ட போது நான் சீதாதேவியை அனுதினமும் அவரது பாதத்தை பார்த்து வணங்கியே ஆசீர்வாதம் பெறுவேன் ஆகவே அந்த பாதமும் பாதத்தில் இருந்த இந்த கொலுசையும் என்னால் எப்படி மறக்கமுடியும் என்றார்.
ஆகவேதான் இன்றும் பக்தர்கள் பலர் தெய்வங்கள், மகான்களின் பாததரிசனம் பெறவே பெரிதும் விரும்புவர் ,பகவான் சத்யசாய் பாபாவை பார்க்கவரும் பக்தர்கள் சிலரிடம் பாபா பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு பக்தரை பார்த்து,‛ உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார் அவரோ ‛எனக்கு வேறு எதுவும் வேண்டாம் ஒரே ஒரு முறை உங்கள் பாத தரிசனம் கிடைத்தால் போதும்' என்றார்.
பாதத்தை கேட்ட உன் போன்ற பக்தர்களுக்கு என்னையே நான் முழுமையாக தருகிறேன் என்றார் பாபா அவரின் பாதம் அங்குலம் அங்குலமாக பட்ட புனிதமான இடம் ‛சுந்தரமாகும்' ஆகவே அரூபமாக உள்ள அவரது பாதம் இப்போது தரிசிக்கும் வகையில் சொரூபமாக வைக்கப்பட்டுள்ளது.அன்பைக் கொடு என்பதை மட்டுமே தனது தாராக மந்திரமாகக் கொண்டிருந்த பகவான் பாபாவின் குட்டியான பாதத்தை கெட்டியாக பிடித்துக் கொள்வோம் அன்பைத் தேடித்தேடி கொடுப்போம் ஏனேனில் நம்நாட்டில் ஒருவேளை உணவு கூட இல்லாமல் முப்பது கோடி பேர் இப்போதும் இருக்கின்றனர் என்ற புள்ளி விவரங்கள் எல்லாம் நமது சேவை தன்மையை இன்னும் துரிதப்படுத்துகிறது கூடுதலாக விரிவுபடுத்துகிறது.
நைஜீரியாவில் இருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை புட்டபர்த்திக்கு ஒரு பக்தர் வந்து கொண்டிருக்கிறார் வந்து இரண்டு வாரங்கள் தங்கியிருந்து பாபாவை தரிசனம் செய்வார் அவர் ஒரு தொழிலதிபரும் கூட அவரிடம் நான் பேசியபோது, தான் சிறுவயதிலேயே பெற்றோரை பறிகொடுத்தவன், ஏதோ ஒரு ஈர்ப்பு காரணமாக புட்டபர்த்திக்கு வந்தேன், சுவாமியை தரிசித்தேன் நான் பறிகொடுத்த பெற்றோரை திரும்ப பெற்றது போல உணர்ந்தேன் அது முதல் என் தாயும் தந்தையுமாக இருக்கும் சுவாமியை பார்க்க வந்துகொண்டிருக்கிறேன் என்றார்.
நீங்கள் ஒரு தொழிலதிபர் என்கிறீர்களே? இரண்டு வாரகாலம் தொழிலை விட்டுவிட்டு வந்தால் எப்படி தொழில் தொய்வின்றி நடக்கும் என்று கேட்டேன் அவர் சிரி்ததுக் கொண்டே ‛அந்த இரண்டு வாரகாலம்தான் என் தொழில் வெகு சிறப்புடன் நடக்கும், ஏனேனில் நான் இங்கு வந்த உடனேயை என் தொழிலை கவனிக்க பாபா அங்கு போய்விடுவார்' என்றார், இப்படி பல லட்சம் பக்தர்களை நாடு மொழி இனம் கடந்து ரட்சித்துவரும் வருபவரான பகவான் சத்ய சாய்பாபாவின் பாதக்கமலத்தை தரிசித்து இன்னும் நம்மை மேன்மைப்படுத்திக் கொள்வோம்.
-எல்.முருகராஜ்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!