Load Image
dinamalar telegram
Advertisement

அள்ளிக்குடிக்க அண்டாவுல 'சரக்கு': அமர்க்கள விருந்துல 'கலக்கோ கலக்கு!'

''வருவாய்த்துறையில, அலுவலக உதவியாளர் (ஓ.ஏ.,) வேலைக்கு ஆள் எடுக்கிறாங்கள்ல. தண்டல்காரங்க, அரசு ஊழியர்களோட வாரிசுங்க, பொது ஜனங்கன்னு நிறைய பேரு விண்ணப்பம் கொடுத்திருக்காங்க. கலெக்டரோட நேரடி நியமனம்ங்கறதால, ஒவ்வொருத்தரும் கலெக்டர் ஆபீஸ்ல, தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள பார்த்து, பரிந்துரை செய்ய சொல்றாங்களாம். நாலு லட்சம் ரூபாய் வரைக்கும் கொடுத்திடலாம்ன்னு, சிலரு 'டீல்' கூட பேசியிருக்காங்களாம். 'இந்த கலெக்டரு இருக்கிற வரைக்கும் வாய்ப்பே இல்ல; அவரு, 'டிரான்ஸ்பர்' ஆகிட்டா வேணும்னா, கட்சிக்காரங்கள வைச்சு, 'மூவ்' பண்ணி, வேலை வாங்கிடலாம்ன்னு, வெவரமான சில அதிகாரிங்க, 'ஐடியா' கொடுக்கிறாங்களாம்,''

வீட்டுக்கு வந்தவுடனேயே சித்ரா, நேரடியாக விஷயத்துக்கு வந்ததும், வியந்து பார்த்தாள், மித்ரா.''கலெக்டரு யாரு பேச்சையும், கேட்கிறதே இல்லையாம். மனசுக்கு படறத செஞ்சுடறாராம். இப்படித்தான், அவிநாசி பெரிய கோவில் தேர்த்திருவிழா நடத்தப்போ, குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவங்க, பூட்டிக்கிடக்குற தங்களோட மடத்தை திறக்க அனுமதி கேட்டிருக்காங்க. 'அந்த மடம் இருக்கிற இடம் 'வண்டிப்பாதை'ன்னு 'ரெவின்யூ ரெக்கார்ட்'ல இருக்கு; அது, ஆக்கிரமிப்பு கணக்குல தான் வரும்'ன்னு, வருவாய்த்துறை அதிகாரிங்க சொல்ல, 'அப்படின்னா அனுமதி கொடுக்க வேண்டாம்; அவிநாசி பேரூராட்சியில சொல்லி, சட்டப்படி என்ன செய்யணுமோ செய்ய சொல்லுங்க; சர்வே செய்ற மாதிரி ஏதாவது உதவி அவங்களுக்கு தேவைப்பட்டா மட்டும் செஞ்சு கொடுங்க'ன்னு சொல்லிட்டாராம்.''அதுமட்டுமில்லாம, அவிநாசிக்குள்ள எத்தனை மடம், இப்போ மண்டபமா செயல்படுது; எத்தனை மண்டபத்துக்கு பட்டா இருக்குங்கற முழு விவரத்தையும் எடுக்க சொல்லிட்டாராம். ஒவ்வொரு சமுதாயம் சார்ந்தும், 16 மடம் இருக்காம்; அதுல, மூணு மடத்துக்கு தான் பட்டா, ஆவணம் எல்லாம் சரியா இருக்குன்னு, 'லிஸ்ட்' எடுத்தும் வச்சிட்டாங்களாம்,'' என்று சித்ரா, யதார்த்தத்தைப் போட்டுடைத்தாள்.

'கெத்து' காட்டிய போலீஸ்
''இந்தப் பிரச்னை ரொம்ப வருஷமால்ல இருக்கு; இந்த கலெக்டரு என்ன தான் பண்ண போறார்ன்னு பார்க்கலாம்'' என 'சுதி' குறைந்தவளாய் பேசிய மித்ரா, ''அந்த ஊர்ல இருக்கிற பஸ் ஸ்டாண்டுக்குள்ள 'ஆனந்த'மா பான்பராக், குட்கா வித்துக்கிட்டு இருந்த ஒருத்தர போலீஸ்காரங்க 'அரெஸ்ட்' பண்ணாங்க. அவருகிட்ட இருந்து, அஞ்சு கிலோ பான் பராக், குட்காவையும் பறிமுதல் பண்ணாங்க. நிறைய ஸ்கூல், காலேஜ் பசங்க, அவருகிட்ட இருந்து தான் வாங்கறாங்களாம். அவரை பிடிச்சு ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வர்றதுக்குள்ள, உள்ளூர்ல இருக்கிற ஆளுங்கட்சி நிர்வாகிகளும், கூட்டணி கட்சியில இருக்கிற சிலரும், போலீஸ் அதிகாரிகளை கூப்பிட்டு, 'அவர விட்டுடுங்க'ன்னு அழுத்தம் கொடுத்திருக்காங்க. 'என்னடா இது... சட்ட விரோத வியாபாரம் பண்ற ஒருத்தருக்கு, இத்தனை லோக்கல் வி.ஐ.பி.,ங்க ஆதரவா இருக்காங்களே; ஒரு வேளை அவங்களுக்கு கமிஷன் எதுவும் போகுதோ'ன்னு, 'ஷாக்' ஆகிட்டாங்களாம். இருந்தாலும், 'கேஸ்' போட்டு, அவர உள்ளே தள்ளி, கெத்து காட்டீட்டாங்களாம்,'' என்று மித்ரா கம்பீரத்துடன் கூறினாள்.''அந்த ஊருல பரவால்ல; பல்லடத்துல, திருடு போன தன்னோட பைக்கை கண்டுபிடிச்சு கொடுங்கன்னு, ஒருத்தரு போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்திருக்காரு. 'அந்த புகார் மனு காணாம போயிடுச்சு; இன்னொரு மனு கொடுங்க'ன்னு, ஸ்டேஷன்ல இருந்த ஏட்டய்யா சொல்ல, அந்த உரையாடலை அப்படியே 'ரெக்கார்டு' பண்ணி சமூக வலைதளத்துல பரப்பிவிட்டுட்டாராம், புகார் கொடுத்தவரு. பதறிப்போன ஏட்டய்யா, உடனே எப்.ஐ.ஆர்., போட்டது மட்டுமில்லாம, காணாமா போனதா சொன்ன பெட்டி ஷனையும் தேடிக்கிட்டு இருக்காராம்,'' என 'கலவரமான' நிலவரத்தை சிரித்தபடியே கூறினாள் சித்ரா.

தடபுடல் விருந்து
''கார்ப்பரேஷன்ல கவுன்சிலரா ஜெயிச்சு, முட்டி மோதி, முக்கிய பதவிய பிடிச்சு ஆளுங்கட்சியோட மாவட்ட பொறுப்புல இருக்கிற 'பத்ம' நபரு, அவரோட ஊர்ல நடந்த கோவில் விழாவையொட்டி, கிடா வெட்டி கட்சிக்காரங்களுக்கு விருந்து கொடுத்திருக்காரு. இது, எல்லாரும் பண்றதுதான்னாலும், அண்டாவுல சரக்கு ஊத்தி வச்சு, டம்ளர், டம்ளரா ஊத்தி கொடுக்கவும் ஏற்பாடு பண்ணியிருந்தாராம். 'இப்படியொரு விருந்தை வாழ்நாள்ல பார்த்தது இல்லை'ன்னு, விருந்துக்கு போய்ட்டு வந்த உடன்பிறப்புகள் புல்லரிச்சு போயிட்டாங்களாம்.''இது முடிஞ்ச கையோட, கருணாநிதி பிறந்த நாளன்னைக்கு, கார்ப்பரேஷன் ஆளுங்கட்சி வி.ஐ.பி., தன் பங்குக்கு, கட்சிக்காரங்களுக்கு சிக்கன் பிரியாணி கொடுத்து அசத்தியிருக்காரு; அண்டா கணக்குல சமைச்சு, ஊர் முழுக்க கொடுத்திருக்காருன்னா பார்த்துக்கோயேன்,'' என ஆச்சர்யம் குறையாமல் சொன்னாள் மித்ரா.

வசூல் மன்னர்கள்
''ஊத்துக்குளில, பேங்க் லோன் வாங்கி தர்றதா சொல்லி, பல லட்சம் ரூபாய் ஏமாத்தியிருக்காரு. இதுதொடர்பா பாதிக்கப்பட்டவங்க போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்திருக்காங்க. ஆனா, ஏமாத்துன ஆளு என்னடான்னா, கார்ல, 'ஹாயா' சுத்திட்டு இருக்காராம். எனக்கென்னவோ, அவரை தப்பிக்க வைக்க போலீஸ்காரங்களே உதவி பண்றாங்களோன்னு தோணுது,'' என சந்தேகம் கிளப்பினாள் சித்ரா.''அங்க அருண்னு, எனக்கு வேண்டப்பட்ட ஒருத்தரு இருக்காரு. அவருகிட்ட கேட்டா விஷயம் தெரிஞ்சுடும்,'' என்றாள் மித்ரா.''இன்னொரு வங்கி விஷயத்தையும் சொல்றேன்'' என்ற சித்ரா, ''பி.என்., ரோட்ல இருக்கிற ஒரு குடும்பத்தை சேர்ந்தவங்க, ஒரு வங்கிக்கிளையில லோன் வாங்கியிருக்காங்க. குடும்ப சூழல் காரணமா, சரியா தவணை செலுத்த முடியாம போயிருக்கு. அந்த வங்கி ஆபீசர், அந்த குடும்பத்தையே வங்கிக்கு வரச்சொல்லி, நைட் 10:00 மணி வரைக்கும் உட்கார வைச்சு, கந்து வட்டி கும்பல் மாதிரி நடத்தியிருக்காங்க. இந்த விஷயம் போலீஸ் வரைக்கும் போயிருக்கு,'' என்றாள், சித்ரா பெருமூச்சுடன்.

மிரட்டிய டாக்டர்
''உடுமலை ஜி.ெஹச்.,ல வேல பார்த்துட்டு இருந்த டாக்டர் ஒருத்தரை, ஒழுங்கு நடவடிக்கையா, காங்கயம் ஜி.ெஹச்.,க்கு மாத்தியிருக்காங்க. அவரு, அங்க போய் வேலையில சேராம, பழைய இடத்தையே கேட்டு, அதிகாரிகள நச்சரிச்சிட்டு இருக்காராம். கொஞ்ச நாள் முன்னாடி, டிரான்ஸ்பர் விஷயமா, சுகாதாரத்துறை அதிகாரி ஒருத்தர பார்க்க போனவரு, தன்னோட, சட்டை பட்டன்ல கேமராவை பொருத்தி வச்சிருந்திருக்காரு. இத, அங்க இருக்குறவங்க கண்டுபிடிக்க, பெரிய வாக்குவாதமே நடந்திருக்கு. ஒரு கட்டத்துல, பெரிய அதிகாரியோட பேசிக்கிட்டு இருக்கப்போ, அந்த டாக்டர், கத்தியை காண்பிச்சு மிரட்டியிருக்காரு. இதுசம்பந்தமா, போலீஸ்காரங்க விசாரிச்சுட்டு இருக்காங்களாம். அவரை ஏன் டிரான்ஸ்பர் பண்ணாங்க; அவரு மேல என்னென்ன புகார் இருக்குன்னு விரிவா விசாரணை பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம்'' என்று 'உள்ளதை' சொன்னாள், மித்ரா.

பேருக்கு தான் டிஜிட்டல்மயம்
''பொதுமக்கள், அலைச்சல் இல்லாம தேவைப்பட்ட அரசு துறை சார்ந்த சான்றிதழ்களை வாங்கணும்ன்னு தான், 'இ-சேவை' மையத்தை துவக்கி வச்சாங்க. ஆனா, அங்க பதிவு செஞ்சாலும், தாலுகா ஆபீசுக்கு நடையா நடந்து, வி.ஏ.ஓ., ஆர்.ஐ.,யை நேர்ல பார்த்தாதான், வேல நடக்குதாம். அதுவும் சொல்லப்போனா, திருப்பூர் தெற்கு, வடக்கு தாலுகாவுல, 'புரோக்கர்'ங்க ஆதிக்கம் தாங்கலையாம். அவங்க மூலமா, 'ஆன்லைன்'ல பதிவு செஞ்சா எந்தவொரு அலைச்சலும் இல்லாம, 'சர்டிபிகேட்' கிடைச்சுடுதாம். ஆனா, பொதுமக்களே நேரடியா பதிவு செஞ்சா, கிடப்பில போட்டுடறாங்களாம். பள்ளிக்கூடம் திறக்கப்போறாங்க; மாணவர் சேர்க்கையும் துவங்கிடுச்சு. அதனால, இந்த மாதிரி சர்டிபிகேட் தர்ற வேலைகளை சரியா செய்றாங்களான்னு, கலெக்டரு நேர்ல போய் பார்க்கணும்ன்னு மக்கள் விரும்பறாங்க,'' என மக்கள் மனசை வெளிப்படுத்தினாள் சித்ரா.''நெருப்பெரிச்சல் கிராமத்துல போலி ஆவணம் மூலமா நிலம் கிரயம் செய்த விவகாரத்துல 'சிட்டிங்' எதிர்க்கட்சி வி.ஐ.பி.,தரப்பும் சம்பந்தப்பட்டிருக்கு. இந்த விஷயம் எல்லாத்துக்கும் தெரியும். இந்த விவகாரம் தொடர்பா,ஆர்.டி.ஓ., விசாரணை முடிஞ்சதுக்கு அப்புறம் கூட, முடிவு என்னன்னு சொல்லாம, அதிகாரிங்க இழுத்தடிக்கிறாங்களாம்.
ஆளுங்கட்சியா இருந்தப்போ தான், இப்படி இழுத்தடிச்சாங்கன்னா, எதிர்க்கட்சி வரிசையில இருக்கறப்ப கூட இழுத்தடிக்கிறாங்களேன்னு, பாதிக்கப்பட்டவங்க புலம்பறாங்க. இதுசம்பந்தமா கலெக்டரு, மாவட்ட பதிவாளருன்னு மனு கொடுத்தும் பிரயோஜனம் இல்லையாம். சி.எம்., பிரிவுக்கு மனு அனுப்பியும் கூட, நடவடிக்கையும் இல்லைன்னு சொல்றாங்க,'' என விவகாரத்தை போட்டு உடைத்தாள் மித்ரா.''என்னமோ போங்கக்கா. சாமானியனுக்கு ஒரு சட்டம்; வி.ஐ.பி.,க்களுக்கு ஒரு சட்டம்ன்னு இருக்கற வரை வெளங்காது'' என சலித்துக் கொண்ட மித்ரா, ''சரிக்கா, எங்க வீட்டு காபியை குடிச்சுத்தான் பாருங்களேன்'' என்றவாறே அடுக்களைக்குள் நுழைந்தாள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement