Load Image
Advertisement

தலைதுாக்கும் பயங்கரவாதம் நசுக்க வேண்டியது அவசியம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பல ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் அட்டகாசம் நீடித்ததாலும், எல்லையில் பாக்., பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்ததாலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மாநிலத்தை, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக, ௨௦௧௯ல் பிரித்தது. அத்துடன், அரசியல் சட்டப்படி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது.

இதனால், சட்டம் - ஒழுங்கு மற்றும் போலீஸ் துறையானது, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்கு வந்தது. எனவே, பல மாதங்களாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் அட்டகாசம் குறைந்திருந்தது. இந்த ஆண்டில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும், நாடு முழுதும் இருந்து 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் காஷ்மீருக்கு விஜயம் செய்துள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் நிலைமை, இந்த அளவுக்கு மாறியிருப்பதை பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் விரும்பவில்லை. காஷ்மீரானது நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து எப்போதும் பிரிந்திருக்க வேண்டும். மற்ற மாநில மக்கள் காஷ்மீர் வருவதற்கே அஞ்ச வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் அவர்கள். அதனால், மே, ௧ம் தேதி முதல், காஷ்மீரில் அப்பாவி பொதுமக்களையும், அரசு ஊழியர்களையும், ராணுவத்தினரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காஷ்மீரில் பண்டிட் இனத்தைச் சேர்ந்த, ராகுல்பட் என்பவர், மே, ௧௨ல் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று முதல் இம்மாதம், ௨ம் தேதி வரை ௧௦க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இறந்தவர்களில், அரசு பள்ளி ஆசிரியை, போலீஸ்காரர், வங்கி ஊழியர்களும் அடக்கம்.
இந்த தாக்குதல் வாயிலாக, காஷ்மீரி பண்டிட்கள், ஹிந்து மற்றும் சீக்கிய சமூகத்தினர் மற்றும் வேலைக்காக இடம் பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் போன்றோரை அச்சுறுத்தும் வேலையில் பயங்கரவாதிகள் இறங்கியுள்ளனர். குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வசிக்க வேண்டும். சிறுபான்மை சமூகத்தினருக்கு காஷ்மீரில் இடமில்லை என்ற எண்ணத்தில் இவ்வாறு செயல்படுகின்றனர்.
அத்துடன், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர். மேலும், காஷ்மீர் பகுதியில் மாமூல் நிலைமை திரும்பி விட்டது என, போலீசார் தெரிவித்து வருவதையும் பொய்யாக்க முற்பட்டுள்ளனர். அதற்கேற்ற வகையில், சமீப நாட்களாக நடைபெறும் தொடர் தாக்குதல்களை பார்க்கும் போது, அங்கு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோ என்ற கவலையும், பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
அதே நேரத்தில், கடந்த சில மாதங்களில் பல பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டது, பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் சிலர் சுட்டு வீழ்த்தப் பட்டது, பயங்கரவாதிகளுக்கு ஆதரவான கட்டமைப்புகள் அழிக்கப்பட்டது, உள்ளூர் மக்கள் அவர்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாதது போன்ற காரணங்களாலும், அதனால் உருவான விரக்தியாலுமே, ஆயுதம் ஏந்தாத போலீஸ்காரர்கள், அப்பாவி பொதுமக்கள் குறிப்பாக, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாக சில தரப்பில் கூறப்படுகிறது.
எது எப்படியோ, காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதம் தலைதுாக்க துவங்கியிருப்பதை, நடைபெறும் சம்பவங்களும், வன்முறைகளும் நமக்கு உணர்த்திஉள்ளன. எனவே, மத்திய அரசும், பாதுகாப்புப் படையினரும் இந்த விஷயத்தில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, மக்களிடையே சமீப நாட்களாக உருவாகியுள்ள அச்ச உணர்வை போக்க வேண்டும். இதற்காக, எப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டாலும் தவறில்லை.
பயங்கரவாதத்தில் ஒரு உயிர் பறிபோனாலும், அது தேசிய இழப்பே. எனவே, அதற்கு ஆதரவு தரும் எந்த ஒரு சக்தியையும் ஒழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். காஷ்மீரில் அமர்நாத் குகையில் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, விரைவில் யாத்திரை துவங்க உள்ளது. அதனால், பாதுகாப்பு அம்சங்களை, மத்திய, மாநில அரசுகள் மறுபடியும் பரிசீலித்து, யாத்திரை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் அமைதி நிலவுவதே நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லது.



வாசகர் கருத்து (1)

  • K.Muthuraj - Sivakasi,இந்தியா

    மாநிலத்துக்கு மாநிலம் (மொழி மத அடிப்படையில்) மாநில சுயாட்சி, கூட்டாட்சி பேசுபவர்களை உருவாக்குவது. அவ்வாறு (தமிழ்நாட்டில் சீமான் வைகோ திமுக திருமா) போன்றவர்களை கைதட்டி ஆதரிப்பது. அவர்களை ஆரம்ப நிலையிலேயே புறக்கணிக்காமல் திரும்ப திரும்ப அவர்களையே ஆட்சியில் வைப்பது. பின்பு அவர்களே நன்கு வளர்ந்த பின்பு தனி ஆட்சி கேட்பார்கள். அப்புறம் இவர்களை போன்றவர்களை நசுக்கணும்னு கூப்பாடு போட வேண்டியது. (இது தான் காஷ்மீரில் மிசோராமில் நடக்கின்றது.)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement