துள்ளி எழுகிறேன், தள்ளிப்போ நீரிழிவே...
ரோஷன் பாஞ்சா
சிறந்த ஆடிட்டர்,பாடுவதில் வல்லவர்,இசை கோர்ப்பாளர்,நடிகை என்று பன்முகம் கொண்டவர்.
இப்போது 48 வயதாகும் இவர் தனது இரண்டாவது வயதில் இருந்து டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்.
மும்பையில் பிறந்த ரோஷனிற்கு இரண்டு வயதாகும் போது அவர் நீரிழிவு நோய் பாதிப்பிற்கு உள்ளானது தெரியவந்தது.ரோஷனின் பெற்றோர் முதலில் கவலைப்பட்டாலும் தங்களது கவலை மகளை பாதித்துவிடக்கூடாது என்பதற்காக ‛அடுத்து என்ன'? என்பதை நோக்கி சிந்தித்தனர்.தினமும் இன்சுலின் ஊசி போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் ரோஷனின் தந்தை மகளுக்கு ஊசி போட்டார் அந்தக் காலகட்டத்தில் ஊசியின் அளவு பெரிதாக இருக்கும் இரண்டு வயது மகளுக்கு வலிக்காமல் ஒவ்வொரு நாள் காலையிலும் ஊசி போட்டு பழகினார் மகளின் வலியை எல்லாம் மனதளவில் தான்வாங்கிக் கொண்டார்.
டிஸ்போஷபிள் ஊசி இல்லாத காலம் என்பதால் தடிமனான ஊசியை கொதி நீரில் போட்டு தயார் செய்வது, அந்த ஊசியில் சரியான அளவு மருந்து ஏற்றுவது என்பது ரோஷனின் தாயின் வேலை, மருந்து ஏற்றப்பட்ட ஊசியை மகளுக்கு கதை சொல்லி சிரிக்கவைத்தபடி போடவேண்டியது தந்தையின் கடமை.
இந்த கடமைக்காக ரோஷனின் பெற்றோர் எந்த ஊருக்கும் சென்றதில்லை அதே போல சர்க்கரை நோயாளிக்கான கட்டுப்பாடான வாழ்க்கை மற்றும் உணவை மகளுக்காக தங்கள் வீட்டு உணவாகமாற்றிக்கொண்டனர், ரோஷனுக்கு இனிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தார்.ஒரு முறை பள்ளியில் சக மாணவியின் பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்ட சாக்லெட்டை சாப்பிட்டுவிட்டு வீட்டில் வந்து சிரமப்பட்டார், விஷயமறிந்த ரோஷனின் தாய் மறுநாள் பள்ளிக்கூடம் சென்று ரோஷனின் ஆசிரியையிடம் மகளின் பிரச்னைபற்றி கூறி அங்கும் இனிப்பு சாப்பிட விடாமல் பார்த்துக் கொண்டார்.
எட்டு வயதான போது ரோஷன் தனக்கு தானே இன்சுலின் போட்டுக் கொள்ளும் அளவிற்கு முன்னேறினார்,கட்டுப்பாடான உணவு மற்றும் வாழ்க்கை இவருக்கு பலவிஷயங்களை கற்றுக்கொள்ள நிறையவே கைகொடுத்தது.
படிப்பில் கெட்டிக்காரரான இவர் ஆடிட்டர் படிப்பை முடித்த கையோடு மும்பையில் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது,அலுவலக ரீதியாக சைரஸ் பாஞ்சா என்பவரை அடுத்தடுத்து சந்திக்க நேர்ந்த போது சைரஸ் தன் காதலை தெரிவித்தார்.
தான் யார்? தனக்கு என்ன பிரச்னை? என்பதை ரோஷன் தெரிவித்தார்.
அதனால் தனக்கு பிரச்னை எதுவும் இல்லை தான் இப்போதுதான் இன்னும் தீவிரமாக காதலிப்பதாக தெரிவித்தார்.ஒரு விஷயம் மட்டும் நெருடல் தந்தது.காதலர் சைரஸ் சென்னை வாசி, தானோ மும்பை வாசி எப்படி ஒன்றாக குடும்பம் நடத்துவது என்று எண்ணினார்,தனது ‛பாஸை' சந்தித்து விவரம் சொன்னார் ‛அதனால் என்ன? நீ சென்னை அலுவலகத்திற்கு மாற்றல் வாங்கிக் கொள்' என்று சொல்லி, உடனே மாறுதலும் கொடுத்துவிட்டார்.
மும்பையைக் காலி செய்துவிட்டு சென்னை வந்தவருக்கு அடுத்த பிரச்னை, தன்னையும் தனது சர்க்கரை நோய் பிரச்னையையும் சிறுவயது முதலே அறிந்த டாக்டர்களை விட்டு வரவேண்டுமே என்று நினைத்தார், அங்கு இருந்தவர்கள் சென்னையில் உள்ள டாக்டர்கள் சிலரை சிபாரிசு செய்தனர்.
அந்த டாக்டர்களை ரோஷன் சென்று சந்தித்தார், அவர்கள் ஒரு டோஸ் போதாது தினமும் மூன்று நான்கு டோஸ் ஊசி போடவேண்டும் என்றனர் ஆனால் அதற்கு ரோஷனுக்கு உடன்பாடில்லை இந்த நிலையில்தான் கோபாலபுரத்தில் உள்ள பிரபல நீரிழிவு மருத்துவரான டாக்டர் மோகனை சந்தித்தார்.
அவர் ரோஷனின் மருத்துவ அறிக்கையைப் பார்த்துவிட்டு மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை முறையை கொண்டு இருக்கிறீர்கள் ஆகவே நீங்கள் இதுவரை போட்டுக்கொண்டது போலவே தினமும் ஒரு டோஸ் போட்டுக் கொண்டால் போதும் என்று சொல்லியிருக்கிறார் அது முதல் டாக்டர் மோகன் இவரது குடும்ப டாக்டராகவும் நண்பராகவும் வழிகாட்டியாகவும் மாறிவிட்டார்.
நான் உங்களை மாற்றவில்லை நீங்கள்தான் நீரிழிவால் பாதிக்கப்பட்ட பலரது மனதை மாற்றி நம்பிக்கை கொடுத்து இருக்கிறீர்கள் சாதாரண மக்கள் செய்யும் வேலைகளை விட அதிக வேலைகளையும் திறமைகளையும் நீங்கள் கொண்டுள்ளீர்கள் நீரிழிவை வென்ற உங்கள் வாழ்க்கை கதையை எனது புத்தகத்தில் இடம் பெறச்செய்வேன் அந்த புத்தகத்தை நீங்களே வந்து வெளியிடுங்கள் என்று டாக்டர் மோகன் கூறியிருந்தார்.
அந்த நாளும் கடந்த வாரம் வந்தது ‛பாண்டிங் போஸ் அண்ட் பியாண்ட்' என்ற நீரிழிவை வென்ற பலரின் நிஜக்கதையைக் கொண்ட ஆங்கில நுால் வெளியீட்டு விழா நடைபெற்றது.நுாலை எழுதிய டாக்டர் மோகன் பேசுகையில் நீரிழிவு நோயுடன் நுாறு வயதைக்கடந்து வாழும் பலரின் சான்றுகளும் எங்களிடம் உள்ளது என்றார்.
நுாலைப் பெற்றுக் கொண்ட ரோஷன் பாஞ்சா,‛டாக்டர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார், எனது தலைக்கு மேல் வளர்ந்த இரண்டு குழந்தைகள்,வேலைகள்,இசை ஆல்பம் தயாரிப்பு நடிப்பு என்று ரொம்பவே பிசியாக இருக்கிறேன். இதற்கெல்லாம் காரணமான டாக்டர் மோகனுக்கு நன்றி கூடுதலாகவும் இந்த இடத்தில் அவருக்கு இந்த இடத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன், காரணம் எனக்கு பிரியமான மாம்பழம் சாப்பிடவும் இப்போது அளவுடன் அனுமதித்திருக்கிறார்' என்றபோது அரங்கம் புன்னகை பூத்தது.
-எல்.முருகராஜ்
அருமையான பதிவு, தற்போது மோகன் மருத்துவர் மற்றும் அவரது மனைவி அசுபன்ச்சர் மருத்துவம் பயின்று அதையும் பின்பற்றுறீகார்கள், கமலஹாசன் , இம்ரான்கான் ஆகியோரும் டைப் ஒன்னு சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்கள்தான், இதற்க்கு காரணம் சிறுவயதில் பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமாக உணவு கொடுப்பது மேலும் உள்ளுக்குள் கொடுக்கப்படும் மருந்துகளின் அலர்ஜி . சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை வெள்ளிக்கிழங்கைக்கு சாப்பிடக்கூடாது என்று மூறுகிறார்கள் ஆனால் அந்த கிழங்கை உண்டால் உடலுக்கு எந்த ஊரும் விளைவிக்காது, பின்விளைவுகளும் இல்லை என்கிறார்கள், அதே போன்று பலாப்பழம் சாப்பிடலாம் அதனால் சர்க்கரை அளவு உயராது உடலில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது என்றும் மாற்றுமருத்துவர்கள் கூறிவருகிறார்கள், இதையும் ஐயா திரு முருகராஜ் அவர்கள் ஒரு கட்டுரை வரையுமாறு கேட்டுக்கொள்கிறோம், காரணம் இன்று திரும்பும் இடமெல்லாம் மருத்துவர்கள் உட்பட சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், மாற்றுமருந்துகளில் பல அற்புதங்கள் அடங்கி இருக்கிறது, மிக அருமையான கருத்தும், நன்றி, வந்தே மாதரம்