மாணவர்களே
உங்கள் வாழ்க்கையில் முடிவெடுக்க வேண்டிய முக்கிய தருணத்தில் இருக்கிறீர்கள்
இந்த நேரத்தில் இதைப்படி அதைப்படி என்று சொல்ல நுாறு பேர் உங்கள் முன் வலம்வருவார்கள் நான் அப்படி சொல்ல வரவில்லை,‛ என்னைப்படி' எல்லாபடிப்பு படிப்பதற்கும் தன்னம்பிக்கை வரும் என்றே சொல்ல வந்திருக்கிறேன்.
சொல்லட்டுமா?-என்று கேட்டு நிறுத்தினார் வேலுமணி
யார் இந்த வேலுமணி
பள்ளிப்படிப்பு முடியும் வரை செருப்பு வாங்கக்கூட வசதியில்லாத சூழலில் வளர்ந்த இவரின் நிறுவனம் சமீபத்தில் சுமார் 4,500 கோடிக்கு விற்பனையாகியுள்ளது என்பது ஒன்றே போதும் இவரது முயற்சியையும் வளர்ச்சியையும் சொல்ல.
இதோ அவரே தனது நிஜக்கதையை சொல்கிறார்...
கோவை அருகே இருக்கும் அப்பனாயக்கன்பட்டிபூதூர் என்ற கிராமத்தில் ஏழை விவசாயிக்கு பிறந்தவன்தான் இந்த வேலுமணி,சாப்பாடு கிடைக்கும் என்பதற்காகவே பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார்கள் ஆகவே நான் என் காலத்திற்கும் முன்னாள் முதல்வர் காமராஜருக்கு நன்றி கூறுவேன் பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை செருப்பணிந்தது கிடையாது காரணம் வாங்க காசில்லை.
பள்ளிப்படிப்பை நன்கு படித்து முடித்தேன் அடுத்து கல்லுாரியில் சேரவேண்டும் எனது மார்க்குக்கு பி.எஸ்சி கொடுத்தனர் ஆனால் நான் பி.காம் கொடுங்கள் என்றேன் ஏன் என்று கேட்டனர் பி.எஸ்சியைவிட பி.காம் படிக்க நுாறு ரூபாய் கட்டணம் குறைவு அதற்காக என்றேன்
இந்தா அந்த வித்தியாசப்பணம் நுாறு ரூபாய் என்று எனது ஆசிரியர் பையில் இருந்து எடுத்துக்கொடுத்து என்னை பிஎஸ்சியே படிக்கவைத்தார்.படித்து முடித்ததும் உள்ளூரில் வேலை பார்க்கவே பலரும் விருப்பப்பட்ட நிலையில் நான் வெளியூரில் படிக்க விரும்பினேன் காரணம் ‛ரிஸ்க்' எடுப்பது என் வாழ்க்கையின் எனக்கு பிடித்தமான ஒன்று.இந்தியும் தெரியாது மராத்தியும் தெரியாது ஆனாலும் மும்பையில் வேலைக்கு விண்ணப்பித்தேன், மத்திய அரசு வேலை வரச்சொன்னார்கள், பையில் 500 ரூபாயுடன் ரயிலேறினேன்,அப்போது மழைக்காலம் என்பதால் ரயில் தாமதத்தை மனதில் வைத்து ஒரு நாள் முன்னதாகவே போய் இறங்கினேன் அன்று முழுவதும் கிடைத்ததை சாப்பிட்டு ரயில் நிலையத்திலேயே காலத்தை கடத்தினேன் மறுநாள் தேர்வுக்கு சென்றேன்,தேர்வானேன்
அது மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் எனது பாஸ் கொஞ்சம் முடியாதவர் அவருக்கு நான் எல்லா விதத்திலும் உதவியாக இருந்தேன் இதன் காரணமாக நீ எம்எஸ்சி படி என்று சொல்லி என்னை படிக்கவைத்தார்,படித்து முடித்த நான் மருந்து ஆராய்ச்சியாளன் ஆனேன்.
வயது 37, நல்ல வேலை, நல்ல சம்பளம்,சம்பளம் வாங்கக்கூடிய மனைவி என்று எல்லாமே சுகமாக, சுபமாக இருந்தது இருந்தும் இப்படியே சராசரி மனிதனாக நீ இருக்கப் போகிறாயா? என்று மனது கேட்டது.
வேண்டாம் கிடைத்த அனுபவத்தை வைத்து ஒரு தொழில் துவங்குவோம் என்று இரவு முடிவெடுத்தேன், மனைவியின் சம்பளம் வரும் என்பதால் தொழிலில் வரும் வருமானத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்பது என் எண்ணம், என் எண்ணத்தை மனைவியிடம் சொன்னேன் அவரோ,2 நீங்கள் வேலைக்கு போகாவிட்டால் நானும் வேலைக்கு போகமாட்டேன்3 என்றார்.
ஏதோ மிரட்டலுக்கு சொல்கிறார் போல என்று எண்ணிக் கொண்டு காலையில் அலுவலத்திற்கு போய் வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வருகிறேன் எனக்கு முன்பாக என் மனைவி தன் வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு வந்து நின்றார்.
இப்போது சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம், கையில் இரண்டு லட்ச ரூபாய் இருந்தது அதை வைத்து தைரோகேர் நிறுவனத்தை என் மனைவியுடன் சேர்ந்து துவங்கினேன்.
தைரோகேர் நிறுவனம் என்பது ரத்த பரிசோதனை மையமாகும்.பொதுவாக ரத்தம் பரிசோதனை செய்ய ஐநுாறு ரூபாய் என்றால் நான் நுாறு ரூபாய் மட்டுமே கட்டணமாக வைத்தேன் நல்ல வரவேற்பு இருந்தது.நாட்டில் எங்கே ரத்த பரிசோதனை நடத்தினாலும் அது ரிசல்ட்டுக்காக மும்பை வரவேண்டும் இதற்கு இரண்டு மூன்று நாளாகியது நோயின் தன்மையும் நோயாளியின் நிலைமையும் கையை மீறியது பார்தேன் நாடு முழுவதும முக்கியமான இடங்களில் பரிசோதனை மையத்தை நிறுவி உடனுக்குடன் சோதனை முடிவுகளை கொடுத்தேன்,இன்னும் வரவேற்பு கூடியது.
வேலை கொடுக்கும் நிறுவனத்தில் முன் அனுபவம் இருக்கிறதா என்று கேட்பர் நாம் வேலை கொடுத்தால்தானே முன் அனுபவம் கிடைக்கும் என்று முடிவெடுத்து 15 ஆயிரம் பிரஷ்ஷர்ஸ்க்கு வேலை கொடுத்தேன் அதாவது கல்லுாரியில் படித்து முடித்து வந்து எனது நிறுவனத்தின் கதவை தட்டியவர்களுக்கு எல்லாம் முடிந்த வரை வேலை கொடுத்தேன்..
அதே போல ஆங்கிலம் பேசுவதற்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் ஆங்கிலம் பேசுபவர்களைவிட அறிவானவர்களையே முக்கிய இடத்தில் வைத்தேன் நிறுவனர் கிடுகிடுவென வளர்ந்தது.
பங்கு சந்தையில் நமது நிறுவனத்தின் மதிப்பு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள பத்து சதவீத பங்குகளை விற்பதாக கூறினேன் ஒரு மார்வாடி வந்தார் காபி சாப்பிட்டார் பத்து சத வீத பங்குகளின் விலை என்னவென்று கேட்டார் 400 கோடி ரூபாய் என்று குத்துமதிப்பாக சொன்னேன் அடுத்தவாரம் வந்து பதில் தருவதாக சொன்னார் ஆனால் அடுத்த வாரம் வரவில்லை அடுத்த மாதம் வந்தார் நான் அவருக்கு காபி கூட தரவில்லை பதிலுக்கு இப்போது அந்த பங்கின் விலை 500 கோடி என்றேன் ஒன்றுமே சொல்லவில்லை ஒரு சில நாளில் வந்தார் வாங்கிக் கொள்கிறேன் என்றார் இல்லை இப்போது பங்குகளின் விலை 600 கோடி ரூபாய் என்றேன் அவர் அந்த இடத்தைவிட்டு போகவே இல்லை 600 கோடிரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டார்.
சரி நாம் முறுக்கான சரக்கைத்தான் வைத்திருக்கிறோம் என்று முடிவு செய்து மேலும் பல விஷயங்களை அதில் கொண்டுவந்தேன் இதன் காரணமாக எனது நிறுவனத்திற்கு மேலும் சந்தை மதிப்பு கூடியது.
குறைந்த விலையில் தரமான மருத்துவ பரிசோதனை தரும் தைரோகேர் நிறுவனத்தை எடுத்து நடத்த எனது பிள்ளைகள் முன்வருவார்கள் என்று எண்ணினேன் ஆனால் அவர்கள் அவர்களாகவே சுயமாக முன்னேற விரும்பினார்களே தவிர என் நிழலில் வளரவிரும்பவில்லை எனக்கு அது சரியாகவும் பட்டது அதே நேரம் எனக்கு துணைவியாக மட்டுமின்றி தோழியாகவும் இருந்த என் மனைவியின் மறைவிற்கு பிறகு எனது ஒட்டத்திற்கு ஒய்வு கொடுக்க விரும்பினேன்.
எனது நிறுவனத்தை அதன் தன்மை மாறாமல் எடுத்து நடத்துவார்கள் என்று நம்பிக்கை தந்த பார்ம்ஈஸி என்ற நிறுவனத்திற்கு 4 ஆயிரத்து 546 கோடி ரூபாய்க்கு விற்றேன்.
இப்போது மனைவியின் நினைவுகளோடு மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை பேச்சாளனாக உலா வருகிறேன் எனது அடுத்த கட்டத்தை காலம் தீர்மானிக்கும்.
மாணவர்களே ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் ஏழையாக பிறந்து விட்டோமோ என்று எப்போதும் கவலை கொள்ளாதீர்கள் அது ஒரு அதிர்ஷ்டம் என்று எண்ணிக் கொள்ளுங்கள் ஏன் எனில் வறுமைதான் உங்களை வளமான பாதைக்கு கொண்டு செல்லும்.
ஆலோசனைக்கு பிறக முடிவெடுங்கள் முடிவெடுத்த பிறகு ஆலோசிக்காதீர்கள்
இஎம்ஐ.,யில் உங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள்,
நீ இந்த பூமியில் வாழவந்தாயா? இல்லை பூமியை ஆளவந்தாயா?என்பதை முதலில் தீர்மானி.
ரிஸ்க் எடுக்க ஒரு போதும் தயங்காதீர்கள்,
வாழ்த்துக்கள் என்று தனது வரலாறை கூறி முடித்த வேலுமணியைப் பாராட்டி அரங்கில் எழுந்த கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று..
-எல்.முருகராஜ்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!