Load Image
Advertisement

அரசியல்வாதிகளின் ஊழல் ஒழிய மாற்றங்கள் தேவை!தலையங்கம்

ஹரியானா மாநிலத்தில், நான்கு முறை முதல்வராக பதவி வகித்தவரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவருமான, முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு, சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைத் தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவர், 1999 - 2005ம் ஆண்டுகளில் முதல்வராக பதவி வகித்த போது, வருமானத்திற்கு அதிகமாக, ௬.௦௯ கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் வாங்கிக் குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், குற்றம் உறுதியானதை அடுத்து, சி.பி.ஐ., கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அதில் தான் தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ௫௦ லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, அவருக்கு சொந்தமான நான்கு சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சவுதாலாவுக்கு எதிரான வழக்கில், விசாரணையின் போது, சி.பி.ஐ.,க்கு ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்ட, 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகனான இவர், ஏற்கனவே ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில், 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில், 86 வயதான சவுதாலா, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காக, முன்னாள் முதல்வர்கள், பதவியில் இருந்த முதல்வர்கள் என, ஏராளமான அரசியல்வாதிகள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகவும், முன்னாள் முதல்வர்கள் சிலர் சிறை சென்றுள்ளனர். பீஹார் மாநில முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், ஜெகந்நாத் மிஸ்ரா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அந்த வரிசையில் ஏற்கனவே இடம் பிடித்திருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, தற்போது இரண்டாவது முறையாக தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஊழல் வழக்கில் சிறை சென்ற முன்னாள் முதல்வர்களில் முதல் நபர் லாலு பிரசாத் யாதவ். கால்நடை தீவன ஊழல் வழக்கில், ௧௯௯௭ல், இவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின், அவர் மீது தொடரப்பட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வழக்குகளில், அவர் பல முறை சிறை சென்றுள்ளார். இவரைப் போலவே, பீஹாரில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்த ஜெகந்நாத் மிஸ்ராவும், 1997ல் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றார்.

இருப்பினும், முதல்வர் பதவி வகிக்கும் போதே, ஊழல் வழக்கில் சிறை சென்றவர் எனில், அது தமிழக முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா தான்.


சவுதாலாவுக்கான தண்டனையை அறிவித்த நீதிபதி, முதல்வராக பதவி வகித்த சவுதாலா, தன் பதவிக்கு ஏற்ப நேர்மையாக செயல்படுவதற்கு பதிலாக, சுயநலனை கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பழமொழி. அதற்கேற்ற வகையில், பதவிக்காலத்தில் செய்த தவறுக்காக இந்த தள்ளாத வயதில், தண்டனை அனுபவிக்கும் துயரமான நிலைமைக்கு ஆளாகியுள்ளார் சவுதாலா.

முன்னாள் முதல்வர்கள் உட்பட, பல அரசியல்வாதிகளுக்கு நீதிமன்றங்கள் தண்டனை விதித்தாலும், அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சில மாநிலங்களில் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், ஊழல் குறைந்தபாடில்லை. அதற்கு காரணம், நீதிமன்ற நடைமுறைகளால், அரசியல்வாதி களுக்கு எதிரான வழக்குகள் எல்லாம் மெதுவாக நடைபெறுவதே. செல்வாக்குள்ள அரசியல்வாதிகள், தங்கள் மீதான வழக்குகளை எவ்வளவு நாட்களுக்கு தள்ளிப்போட முடியுமோ, அவ்வளவு காலத்திற்கு தள்ளிப்போட முற்படுகின்றனர். அதுமட்டுமின்றி, தங்கள் மீதான ஊழல் வழக்குகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கூறி, மக்களை ஏமாற்றுகின்றனர்.

அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், எந்த வழக்கிலும் இது சாத்தியமானதாக தெரியவில்லை. எனவே, ஊழலில் ஈடுபட்டால், நீதிமன்றம் தங்களை விரைவில் சிறையில் தள்ளிவிடும் என்ற பயம் அரசியல்வாதிகள் மத்தியில் உருவாக வேண்டும். அதற்கேற்ற வகையில் நீதிமன்றங்களில், ஊழல் வழக்குகளின் விசாரணைகள் துரிதமாக நடைபெற வேண்டும். நிர்வாக சீர்திருத்தம் மற்றும் சட்ட விதிகளிலும் திருத்தங்களை செய்ய வேண்டும். ஊழல் செய்தால் தண்டனை நிச்சயம் என்ற நிலைமை உருவானால் தான், அரசியல்வாதிகளின் ஊழல் குறையும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement