Load Image
Advertisement

கடவுளை ஆற்றில் போடலாமா?

கடவுள் சிலைகளுக்குச் சேதம் ஏற்பட்டாலோ, பராமரிக்க முடியவில்லை என்றாலோ, கிணற்றிலோ, ஆற்றிலோ தூக்கி எறிகிறார்கள், இது எதனால்? சத்குரு சொல்கிறார்...

கேள்வி
கடவுள் சிலைகளுக்குச் சேதம் ஏற்பட்டாலோ, பராமரிக்க முடியவில்லை என்றாலோ, கிணற்றிலோ, ஆற்றிலோ தூக்கி எறிகிறார்கள், இது எதனால்?

சத்குரு

நீங்கள் வீட்டில் கடவுள் சிலைகள் வைத்திருந்தால் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்று இந்தக் கலாச்சாரத்தில் மிகவும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பெரும்பாலான வீடுகளில் கடவுள் படங்கள்தான் வைத்திருப்பார்கள், சிலைகளை வைத்திருக்க மாட்டார்கள். அதுவும் சரியான முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கடவுள் சிலைகளை மிகச் சிலர்தான் வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருப்பவர்கள் அந்த சிலைகள் உயிர்த்தன்மையுடன் இருக்க தினசரி அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். கடவுளையே உருவாக்கக்கூடிய தொழில்நுட்பம் இந்தக் கலாச்சாரத்தில்தான் இருக்கிறது.

இந்தக் கலாச்சாரத்தில் 33 கோடிக்கும் மேற்பட்ட கடவுள்கள் இருக்கிறார்கள். இந்த ஒரு கலாச்சாரம் மட்டுமே கடவுள் அற்ற கலாச்சாரம். 33 கோடி கடவுளர்கள் இருந்தாலும் இது கடவுளற்ற கலாச்சாரம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், கடவுள் பற்றிய திட்டவட்டமான ஒரு கருத்து என்பது இங்கு கிடையாது. ஒரே குடும்பத்தில் 5 பேர் 5 விதமான கடவுள்களைக் கும்பிடுவார்கள். ஒருவர் ஆண் கடவுளை வழிபடுவார். ஒருவர் அம்மனை வழிபடுவார். ஒருவர் யானைக் கடவுளை வழிபடுவார். ஒருவர் குரங்குக் கடவுளை வழிபடுவார். உங்களுக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றால், நீங்களே ஒரு கடவுளை இஷ்ட தேவதை என்று உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு மரத்தைக்கூட நீங்கள் கடவுளாக வழிபட முடியும். இந்த ஒரு கலாச்சாரத்தில் மட்டும்தான் கடவுள் நமது உருவாக்கம் என்று பார்க்கப்படுகிறது. மற்ற கலாச்சாரங்களில் அவர்கள் கடவுளின் உருவாக்கம் என்று பார்க்கிறார்கள். இங்கு நாம்தான் கடவுளை உருவாக்குகிறோம். அதற்கான விரிவான தொழில்நுட்பமே இருக்கிறது.

ஒரு கல்லை சில நாட்களில் கடவுளாக மாற்றக்கூடிய தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. ஆனால், அப்படி ஓர் உருவத்தை உருவாக்கி சரியான முறையில் பிரதிஷ்டை செய்துவிட்டால், பிறகு அதை ஒரு குறிப்பிட்ட முறையில் பராமரித்து வர வேண்டும். இந்த உருவச் சிலைகளுக்கு, நோக்கங்களுக்கு ஏற்றவாறு பல விதங்களில் சக்திநிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. நம் கலாச்சாரத்தில், கோவில்கள் என்பது வழிபடும் இடமாக இல்லாமல், சக்தி மையமாக, சக்திநிலை பெறுவதற்கு ஏற்றபடிதான் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. அதனால்தான் கோவிலுக்குச் சென்றால் சிறிது நேரமாவது கோவிலில் உட்கார்ந்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று உங்களுக்கு சொல்லப்படுகிறது. சக்தியைத் தரும் மையமாகத்தான் நமது கோவில்கள் இருக்கின்றன.

இன்றைய உலகில் ஒவ்வோர் உறவிலும், செயலிலும் போராட்டம் நிறைந்திருக்கிறது. எனவே மனதளவில், உணர்ச்சி அளவில் நமக்கு நிறைய சக்தி தேவைப்படுகிறது. எனவேதான், காலையில் எழுந்தவுடன், முதல் வேலையாக குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்லும்படி நாம் பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறோம்.

இப்படி சக்தியை வழங்கும்படியாகவே கடவுள் உருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட உருவச் சிலைகளுக்கு சேதம் ஏற்படும்போது, அதிலிருந்து சக்தி விலகத் தொடங்குகிறது. அப்போது அது சுற்றி இருப்பவர்களுக்கு கெடுதலை ஏற்படுத்தலாம். எனவே, அந்த உருவத்துக்குச் சிறிது சேதம் ஏற்பட்டாலும், சரியாகப் பராமரிக்க முடியவில்லை என்றாலும், அதைக் கிணற்றிலோ, ஆற்றிலோ, வேறு யார் கையிலும் கிடைக்காதபடி அப்புறப்படுத்தி விடுகிறோம். ஒரு கருவியை நமக்காக நாமே உருவாக்கினோம். இன்று அது நமக்கு உதவியாக இல்லை, மேலும் கெடுதலும் ஏற்படலாம். எனவேதான் தயங்காமல், மேலும் இன்னொருவர் கைக்குக் கிடைக்காத தூரத்துக்கு அப்புறப்படுத்திவிடுகிறோம்!



வாசகர் கருத்து (2)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    எல்லாம் சரிதா சாமீ . முதலில் ரிக் வேடத்தில் உள்ளது ருத்திரன் யாரு? ரிக் வேதத்தில் உள்ள சிவனை திருடர்களின் தலைவன் என்று கூற காரணம் என்ன என்று நான் கேட்கவில்லை அண்ணல் அம்பேத்கர் கேட்டு உள்ளார் இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை ஏங்கே நீக்க சொல்லுங்க பார்க்கலாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement