Load Image
dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: சென்னை முதல் குமரி வரை கள்ளச்சாராய விற்பனை, ஒரு சில காவல் துறையினர் மற்றும் ஆளுங்கட்சியினர் ஆதரவோடு கனஜோராக நடக்கிறது. கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், தாமதம் ஏற்பட்டால், பெண்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராடுவோம். மக்களின் உயிரையும், உடைமையையும் காக்க, அ.தி.மு.க., எந்த தியாகத்தையும் செய்யத் தயார்.

டவுட் தனபாலு: கள்ளச்சாராயத்தையும், போலி மதுவையும் பற்றி இவ்வளவு ஆவேசமாக பேசும் நீங்க, 'டாஸ்மாக்'கை மூடுவது பற்றி எதுவும் பேச மாட்டேன் என்கிறீர்களே... மக்கள் உயிர் மீது உங்களுக்கு நிஜமாகவே அக்கறை இருந்தால், மதுக்கடைகளை மூடும் வரை, மாபெரும் தொடர் போராட்டத்தை அறிவித்து நடத்தினால், ஒட்டுமொத்த பெண்களும் உங்களின் பின் நிற்பர் என்பதில், 'டவுட்'டே இல்லை!


பத்திரிகை செய்தி: காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே உள்ள சின்னமதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 40; கூலி தொழிலாளி. இவர், குடி போதையில், 16 - 10 வயதுடைய தன் இரண்டு மகள்களையும் கட்டையால் அடித்துக் கொலை செய்து விட்டு, போதை தெளிந்ததும், போலீசில் சரண் அடைந்தார்.


டவுட் தனபாலு: பெற்ற மகள்களையே, அதுவும் இளம் பிஞ்சுகளை அடித்தே கொலை செய்யும் அளவுக்கு கொடூர குணத்தை தர்ற இந்த மதுவை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கலாமே... பத்து, இருபது சாராய முதலாளிகள் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சம்பாதிக்க, இன்னும் எத்தனை அப்பாவிகளின் உயிர்கள் பலியாகப் போகுதோ


தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்: ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் சிந்தனையாளர்கள் கூட்டத்தில், அர்த்தமுள்ள முடிவு எதுவும் எட்டப்படவில்லை. காங்., தலைமைக்கு சிறிது அவகாசம் அளித்து, தற்போதைய நிலை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வரவிருக்கும் குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் காங்., படுதோல்வி அடையும்.

டவுட் தனபாலு: உங்க கருத்தைப் பார்த்தால், தேர்தல் வியூக நிபுணர் கருத்தா தெரியலை... 'என்னை கட்சியில சேர்த்து, கவுரவமான பதவி தராம நட்டாத்துல விட்டீங்களே... அதனால, வர்ற சட்டசபை தேர்தல்கள்ல தோத்துடுவீங்க பாருங்க'ன்னு மறைமுகமா சாபம் விடுறீங்களோன்னு, 'டவுட்' எழுது!


போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்: அரசு டவுன் பஸ்களில், பெண்களுக்கான இலவச பயண திட்டத்தில், துவக்கத்தில், 40 சதவீதம் பேர் பயணம் செய்தனர். தற்போது இது, 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. போக்குவரத்து கழகங்களின் நிதி நிலையை கருத்தில் கொண்டு, இதற்குரிய நிதியை தமிழக அரசு வழங்குகிறது.


டவுட் தனபாலு: மகளிருக்கு பஸ்களில் இலவச பயணம் தரும் நீங்க, அதற்கான தொகையை அரசு தருவதாக பெருமை அடிச்சுக்குறீங்களே... அரசு தரும் பணம் எங்க இருந்து வருது தெரியுமா... அந்த மகளிரின் கணவர்கள், சகோதரர்கள், மகன்கள் மதுக் கடைகள்ல குடித்து இழக்கிற பணம் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!


பத்திரிகை செய்தி: தமிழகத்தில் இரண்டு மாத மீன்பிடி தடையால் பாதிக்கப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கு, அரசு சார்பில் தலா, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. 2021ல், 1.71 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு, 85.6 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பாண்டு பயனாளிகள் பட்டியலில், 18 ஆயிரத்து 740 மீனவ குடும்பங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இவர்களுக்கும் சேர்த்து விரைவில், 95 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.


டவுட் தனபாலு: பயனாளிகள் பட்டியலில் நிஜமாகவே மீனவர்கள் குடும்பங்கள் இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு பலமுறை அதிகாரிகள், 'கிராஸ் செக்' செய்துக்கிறது நல்லது... ஆளுங்கட்சியின் வட்ட, குட்டச் செயலர்கள் தலையிட்டு, தங்களது அடிப்பொடிகளை பட்டியலில் சேர்த்திருந்தா, நாளைக்கு மாட்டப் போறது அதிகாரிகள் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கள்ளச்சாராயத்தால் நம் இரு கட்சிகளின் ஆலைகளின் சொந்தக்காரர்கள் பாதிக்கப்படுவதை கவனித்து 'அதை' - அதை மட்டும் '- தடுக்க நடவடிக்கை எடுங்கள் என்கிறார். புரியவில்லையா?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement