மதுரை: அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் இடையே காதலை ஏற்படுத்துவது தேனீக்கள் தான். பூவில் அமர்ந்து தேன் எடுத்து அடுத்த பூவுக்கு செல்லும் போது தன் கால்களின் மூலம் மகரந்தத்தை எடுத்து அயல் மகரந்த சேர்க்கை பெற உதவுகின்றன.
பெரும்பாலான தாவரங்கள் அயல் மகரந்த சேர்க்கையை நம்பியே உள்ளன. உலகம் முழுதும் தேனீக்களே இல்லாத நிலை ஏற்பட்டால் அடுத்த நான்காண்டுகளில் மனித இனமே அழிந்துவிடும். அந்த அளவுக்கு மனிதனின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றன தேனீக்கள்.
ரசாயன உரங்களின் வரவால் தேனீக்கள் சமுதாய பயிர்களை விட்டு காடுகளுக்கு இடம்பெயர்ந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தும் வருகின்றன. 2018 ல் உலக தேனீ தினம் அறிவிக்கப்பட்டு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மே 20 உலக தேனீக்கள் தினம். இத்தினத்தில் தேனீக்களின் முக்கியத்துவம், வளர்ப்பது எப்படி, பயிற்சி பெறுவது, தேனீக்கள் வளர்த்து சாதித்தவர்களின் அனுபவங்களை தெரிந்து கொள்வோம்.
பூக்களை ஆட்சிசெய்யும் தேனீக்கள்
குணசேகரன், தேனி: 2010 ல் மதுரை வேளாண் அறிவியல் மையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி பெற்றேன். 2 காலிப்பெட்டிகளை வாங்கி தேனீக்கள் வளர்க்க ஆரம்பித்தேன். தேன் கிடைப்பதை விட பூக்களில் அயல் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள் அவசியம் என்பதை நிறைய மகசூல் பெற்ற அனுபவத்தில் உணர்ந்தேன்.
கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தில் ரூ.9.5 லட்சம் கடன் பெற்று தேனீக்கள் வளர்ப்பை தொழிலாக துவங்கினேன். ரூ.2.90 லட்சம் மானியம் கிடைத்தது. இப்போது 1000 தேனீ பெட்டிகள் வைத்துள்ளேன். 300 பெட்டிகள் மூலம் தேன் கிடைக்கிறது. 700 பெட்டிகளில் தேன் போக தேனீக்கள் உற்பத்திக்காக பராமரிக்கிறேன்.
தோட்டக்கலை, வேளாண் துறைகளுக்கு தேனீக்களுடன் பெட்டிகளை விற்பனை செய்கிறேன். தேன், தேன்மெழுகு, மகரந்தம் அனைத்துமே நல்ல விலைக்கு விற்கலாம். சீசனுக்கு ஏற்ப அந்தந்த மரம், செடிகளில் தேனீக்கள் தேன் சேகரிக்கும். குறிப்பிட்ட மரத்திலிருந்து தான் தேன் எடுக்கிறது என சொல்லி விற்பனை செய்யமுடியாது. ஆண்டுக்கு 2 டன் தேன் உற்பத்தி செய்கிறேன்.
தேனீக்கள் தந்த கவுரவம் தான் ஏற்றுமதி
ஜெயக்குமார், ராஜபாளையம்: தேனீக்களை ஒரே இடத்தில் வைத்து வளர்க்க முடியாது. ஒவ்வொரு மரம், செடிக்கும் பூக்கும் சீசன் மாறுபடுவதால் அதற்கேற்ப அவற்றை இடம்பெயர்த்த வேண்டும். ஜன., பிப்., ல் மாமரம் பூப்பூக்கும். அப்போது தமிழகத்தில் தேனீக்களை வளர்ப்போம். கேரளாவில் ஜன. மார்ச் வரை ரப்பர் தோட்டத்தில் சீசன் எனும் போது பாதி பெட்டிகளை அங்கு கொண்டு செல்வோம்.
இதற்கென தொழிலாளர்களை நியமித்து 10 நாட்களுக்கு ஒருமுறை பெட்டியை கண்காணிப்போம். விவசாயிகளுக்கு மகசூல் லாபம்; எங்களுக்கு தேன் லாபமாக கிடைக்கும்.வடமாநிலங்களில் இமாச்சல், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர் என பூப்பூக்கும் சீசனுக்கு ஏற்ப அந்த பகுதியிலேயே இடம் மாற்றுவோம். பகலில் அவை சுறுசுறுப்பாக தேன் எடுக்கும். இரவில் துாங்கும் என்பதால் வேறிடங்களுக்கு இரவில் கொண்டு செல்வோம். போக்குவரத்தில் அவை எந்த தொந்தரவும் செய்யாது.
அதிகபட்சமாக காலைக்குள் இடமாற்றி விடுவோம்.மழைக்காலத்தில் தேனீ கூட்டை பிரித்து ராணி தேனீயை தனியாக வைத்து புதிய கூட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுவோம். கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தில் ரூ.22 லட்சம் கடன் பெற்று தொழில் தொடங்கினேன். ரூ.7.2 லட்சம் மானியம் கிடைத்தது. சவூதி, ஜோர்டானுக்கு கடந்தாண்டு மட்டும் 250 டன் தேன் அனுப்பியுள்ளோம். சிறந்த ஏற்றுமதியாளராக ஆணையம் கவுரவப்படுத்தியது.
தேனீ வளர்க்க பயிற்சி அளிக்கிறோம்
தாஸ், பொறுப்பாளர், மாநில தேனீ வளர்ப்பு விரிவாக்க மையம், குழித்துறை : அழிந்து வரும் தேனீக்களை காப்பாற்றுவதற்காக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் மாநில தேனீ வளர்ப்பு விரிவாக்க மையம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரி தான் தேனீக்கள் அதிகம் உள்ள மாவட்டம்.
மகாராஷ்டிராவில் வெங்காய செடி பூக்கும் பருவத்தில், ஒருபகுதியை வாடகைக்கு எடுத்து தோட்டத்தில் வைப்பதுண்டு. பூப்பருவம் முடிந்ததும் எடுத்து விடுவர். இதனால் நல்ல மகசூல் கிடைக்கும். கர்நாடகாவில் கொச்சு எள்ளு செடிக்கு பயன்படுத்துகின்றனர். தேனீக்கள் குறித்த விழிப்புணர்வில் சிறந்த மாநிலமாக கேரளா உள்ளது.விவசாயிகள், தேனீ வளர்க்க விரும்புவோருக்கு மையத்தில் 5 நாட்கள் பயிற்சி அளிக்கிறோம். கட்டணம் ரூ.300. 5 வகையான தேனீக்களில் இந்திய அடுக்கு தேனீ, இத்தாலிய தேனீக்களை தான் பெட்டிகளில் காலனியாக வளர்க்க முடியும்.
ராணித்தேனீ, வேலைக்கார ஈக்கள் கூட்டம், முட்டை, புழு பருவத்துடன் கூடிய நான்கு சட்டங்களை ரூ.500 க்கு விற்பனை செய்கிறோம். பெட்டி ஒரே அளவு தான் என்பதால் வெளியில் வாங்கலாம். அல்லது சொந்தமாக தயாரிக்கலாம். தேன்மெழுகு, ரச கூழ், மகரந்தம், அரக்கு, தேன்ரொட்டி கிடைக்கிறது.
இதை குழந்தைகளுக்கும் சத்தான உணவாக தரலாம். விவசாயிகள் தான் தேனீக்கள் வளர்க்க வேண்டும் என்பதில்லை. விருப்பமுள்ள யாரும் வீட்டில் செல்லப்பிள்ளைகளாக தேனீக்களை வளர்க்கலாம் என்றார். அலைபேசி: 63693 86393.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!