''நான் முதல்வன் திட்டமே சொதப்பலாகிட்டுன்னு அதிகாரிகள் புலம்புதாவ வே...'' என, வந்த வேகத்தில் அரட்டையை ஆரம்பித்தார், அண்ணாச்சி.
''என்ன ஆச்சு பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கி, வேலை வாய்ப்பு உருவாக்கி தர்ற நோக்கத்துல, தமிழக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகத்தின் கீழ், திறன் மேம்பாட்டு கழகத்தை உருவாக்கினாவ... ''இதுல தான், முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமான, 'நான் முதல்வன்' திட்டம் செயல்படுது... இந்த கழகத்தின் உயர் பதவியில இருக்கிற, 'அப்பாவி' பெண் அதிகாரி, முன்னாள் முதல்வருக்கு வேண்டியவங்க... இந்த ஆட்சியிலயும், முதல்வரின் செயலர் ஒருத்தரிடம் செல்வாக்கா இருக்காங்க வே...
''அதனால, துறை அமைச்சர், செயலர் பேச்சை கேட்காம, தன்னிச்சையா செயல்படுறதா சொல்லுதாவ... திறன் மேம்பாட்டு கழகத்துல, பயிற்சி அளிச்சிட்டு வந்த சின்ன நிறுவனங்களை வெளிய அனுப்பிட்டு, தனக்கு நெருக்கமான பெரிய நிறுவனங்களை உள்ள நுழைக்க முயற்சிக்கிறதாகவும் அதிகாரிகள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
மொபைல் போனில் பேசியபடியே வந்த குப்பண்ணா, ''அவாள்லாம் ரொம்பவும், 'இன்னசன்ட்' ஆட்கள்... அதனால, திவ்யா மேடம் பார்த்துப்பாங்க...'' என, 'கட்' செய்தபடியே, ''எல்லா வசதியும் இருந்தும், எதுவுமே இல்லைன்னு சொல்றா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார்.
''எங்கன்னு விபரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை இருக்கோல்லியோ... அங்கே பல் மருத்துவத்துக்கு தனி பிரிவு இயங்கறது... இங்க, வாய், முக அறுவை சிகிச்சைக்கு எல்லா வசதி இருந்தும், செய்றதில்லை ஓய்... ''குறிப்பா, தாடை எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு வரவாளிடம், 'இங்க முடியாது... பல் மருத்துவக் கல்லுாரிக்கு போங்கோ'ன்னு அந்த துறையோட உயர் அதிகாரியம்மா திருப்பி அனுப்பிடறாங்க... இத்தனைக்கும், அந்தம்மாவே அறுவை சிகிச்சை நிபுணர் தான் ஓய்...
''மாசம் எத்தனை அறுவை சிகிச்சைகள் நடந்ததுன்னு கணக்கு கொடுக்க வேண்டிய நிபந்தனை இருக்கு... அதனால, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்துல இந்த பல் மருத்துவப் பிரிவை சேர்க்காம விட்டுட்டாங்களாம் அந்த அதிகாரி... ''அவங்களுக்கு ஆளுங்கட்சி அமைச்சர் நெருக்கம்கறதால, டீனும் கண்டுக்கறது இல்லை ஓய்...'' என்ற குப்பண்ணா, மீண்டும் ஒலித்த மொபைல் போனை எடுத்து, ''சொல்லுங்க புஷ்பா...'' என, நகர்ந்து சென்று பேச ஆரம்பித்தார்.
''அமைச்சரையே வேவு பார்க்கிறாருங்க...'' என, கடைசி தகவலுக்கு தாவிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்... ''அரியலுார் மாவட்டம், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கரின் கடின உழைப்பை பார்த்து தான், அவரை போக்குவரத்துத் துறை அமைச்சரா முதல்வர் நியமிச்சாருங்க... ''இவரது வளர்ச்சியை ரசிக்காத ஆளுங்கட்சி எம்.பி., ஒருத்தர், தனக்கு வேண்டிய எம்.எல்.ஏ.,வை அமைச்சரின் நிழலா உலவவிட்டு உளவு பார்க்கிறாருங்க...
''ஏதாவது சின்ன தப்பு நடந்தா கூட தலைமைக்கு, 'போட்டு' குடுத்து, அமைச்சர் பதவியை காலி செய்றது தான் அவரது நோக்கம்னு அமைச்சருக்கு நெருக்கமானவங்க வருத்தப்படுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
மொபைல் போனை ஆப் செய்தபடி வந்த குப்பண்ணா, ''கண்ணன், ஜெயங்கொண்டத்துல இருந்து எப்ப வந்தீர்... ராஜா உங்களை தேடிண்டு இருந்தாரே... பார்த்தீரா...'' என நண்பரிடம் வம்பளக்க, மற்றவர்கள் கிளம்பினர்.
பாம்பின் கால் பாம்பறியும்