'தேசிய கட்சிகளாக இருந்து என்ன பயன்; 'லெட்டர் பேடு' கட்சிகள் எல்லாம் எங்களைப் பார்த்து கிண்டலடிக்கின்றனவே...' என்று புலம்புகின்றனர், கேரளாவில் உள்ள காங்., மற்றும் பா.ஜ., கட்சியினர்.
இங்கு, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பா.ஜ.,வினர், மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்த சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். அவரை தடபுடலாக வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
கடைசி நேரத்தில் அமித் ஷா, தன் பயணத்தை ரத்து செய்து விட்டார். இதைக் கேள்விப்பட்ட காங்., கட்சியினர், 'செலவழித்த பணம் எல்லாம் வீணாகிப் போச்சா...' என்று கிண்டலடித்தனர். அடுத்த சில நாட்களில் காங்., - எம்.பி., ராகுலை, கேரளாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை, அந்த கட்சியினர் செய்தனர்.
தெருவெங்கும் போஸ்டர்கள், வாழைமர அலங்காரம் என ஏற்பாடுகள் துாள் பறந்தன. ஆனால், ராகுலும் தன் பயணத்தை ரத்து செய்து விட்டார். இதற்காகவே காத்திருந்த பா.ஜ.,வினர், தங்கள் பங்கிற்கு செமத்தியாக காங்., கட்சியினரை கிண்டலடித்தனர்.
கேரளாவில் உள்ள மற்ற குட்டி கட்சியினரோ, 'தங்கள் கட்சி தலைவரின் பயண திட்டத்தை உறுதி செய்யாமலேயே ஆட்டம் போட்டனர். இப்போது பேந்த பேந்த விழிக்கின்றனர்...' என காங்., மற்றும் பா.ஜ.,வினரை கிண்டலடிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!