'பா.ஜ., மேலிடம் போல, காங்கிரஸ் தலைமையும் அதிரடியில் இறங்கப் போவதாக தகவல் கிடைத்ததுமே, இவர் சுதாரித்து விட்டார்...' என சத்தீஸ்கர் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல் பற்றி பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் எல்லாம், அதிரடியாக முதல்வர்களை மாற்றி வருகிறது, பா.ஜ., மேலிடம். உத்தரகண்ட், குஜராத், திரிபுரா மாநிலங்களின் முதல்வர்கள் மாற்றப்பட்டு, புதுமுகங்கள் முதல்வர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். காங்., தலைமையும், தங்கள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில், இதுபோன்ற அதிரடியில் இறங்கப் போவதாக, சமீபத்தில் நடந்த அக்கட்சியின் சிந்தனையாளர்கள் கூட்டத்தில் பேச்சு எழுந்தது.
இதைக் கேள்விப்பட்டதும், சத்தீஸ்கர் முதல்வரான பூபேஷ் பாகேலுக்கு பயம் வந்து விட்டது. இம்மாநிலத்தில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.கட்சி மேலிடத்தை சமாளிக்க, மாநிலம் தழுவிய சுற்றுப் பயணத்தை சமீபத்தில் துவக்கினார். முதற்கட்டமாக சிறுவர்களை கவர்ந்து, அவர்கள் வாயிலாக பெற்றோர்களின் ஓட்டுகளை வளைக்க திட்டமிட்டுள்ளார்.
சுற்றுப் பயணத்தின் போது, சிறுவர்களுடன் கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி, அவர்களை குஷிப்படுத்துகிறார். பாகேலின் அதிருப்தியாளர்களோ, 'ஆட்சி காலத்தில் நல்ல திட்டங்களை செயல்படுத்தியிருந்தால், இப்படி சிறுவர்களுடன் விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. கபடி விளையாட்டு, அவருக்கு கை கொடுக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்...' என்று கிண்டலடிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!