Load Image
dinamalar telegram
Advertisement

ஆளுங்கட்சி புள்ளியின் அலப்பறை ஆரம்பம்!''இப்படி சின்ன தொகையா வாங்கி மாட்டிண்டுட்டாரேன்னு சக ஊழியர்கள் கேலி பேசறா ஓய்...'' என, 'பில்டர்' காபியை ருசித்தபடியே அரட்டையை ஆரம்பித்தார், குப்பண்ணா.

''எந்த துறையில, யார் மாட்டிக்கிட்டாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சேலம், ஆத்துார் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், ஒப்பந்ததாரரிடம் 3.50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கறச்சே, கரன்சியும், கையுமா மாட்டினாரோல்லியோ...

''சென்னை, கிண்டியில இருக்கற நெடுஞ்சாலைத் துறை தலைமை அலுவலகத்துல, இவரைப் பத்தி தான் ஒரே பேச்சா இருக்காம்...

''இந்த துறையில, தலைமை பொறியாளர், இணை பொறியாளர், உதவி பொறியாளர், கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர்னு அஞ்சு பிரிவு இருக்கு ஓய்...

''இதுல, பல பேருக்கு ஒப்பந்ததாரர்கள் அள்ளி அள்ளி குடுக்கறாளாம்... பல அதிகாரிகளின் வருமானத்துக்கும், ஆடம்பரமான அவா வீட்டுக்கும் சம்பந்தமே இல்லை ஓய்...

''அதனால, 'வீட்டு மொட்டை மாடியில நீச்சல் குளம் கட்டியிருக்கற அதிகாரி கூட மாட்டலை... சின்ன தொகைக்கே கோட்ட பொறியாளர் மாட்டிண்டுட்டாரே'ன்னு சக ஊழியர்கள் கேலி பேசறா...

''நெடுஞ்சாலைத் துறையின் வசூல் மன்னர்கள் சிலரை பத்தி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சூசகமா தகவல் சொல்லியும் நடவடிக்கை இல்லையாம் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''அப்பா தலையீட்டால மகளுக்கு சிக்கல் வந்துடுச்சுங்க...''என, அடுத்த தகவலை தட்டிவிட்டார் அந்தோணிசாமி.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சென்னை தாம்பரம் மாநகராட்சியில, வணக்கத்துக்கு உரிய பதவியில இருக்கிற பெண்ணின் தந்தைக்கு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பல கான்ட்ராக்டர்கள் நண்பர்களா இருக்காங்க... நண்பர்களுக்காக,
மகளிடம் அப்பா சிபாரிசு செஞ்சாருங்க...

''அவங்களும், 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை'ன்னு பல ஒப்பந்தங்களை அ.தி.மு.க.,வினருக்கு குடுத்துட்டாங்க... இது, அந்த ஏரியா ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., காதுக்கு போயிடுச்சுங்க... கடுப்பான அவர், 'டெண்டர்' தொடர்பான முடிவுகள்ல, பெண் புள்ளியை ஒதுக்கி வைக்கும்படி அதிகாரிகளுக்கு
உத்தரவு போட்டுட்டாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''ஆளுங்கட்சியினர் அலப்பறையை ஆரம்பிச்சிட்டாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர்ல, சி.எம்.டி.ஏ., அனுமதியோட, தனியார் நிறுவன கட்டடம் கட்டியிருக்காவ... அதுக்கு கழிவுநீர் இணைப்புக்கான ஒப்புதலும்
வாங்கிட்டாவ வே...

''ரோட்டோரமா கழிவுநீர் குழாய் அமைக்க மாநகராட்சியை அணுகியிருக்காவ... ஆனா, மாநகராட்சி அதிகாரிகள், 'மாவட்ட நிர்வாகியை பாருங்க'ன்னு
சொல்லிட்டாவ வே...

''மாநகராட்சி நிலைக்குழு பொறுப்புல இருக்கிற அந்த மாவட்ட நிர்வாகி, இந்தா, அந்தான்னு அலைகழிக்காராம்... மாவட்ட நிர்வாகி மேல இதுமாதிரி நிறைய புகார் குவிஞ்சிருக்கு வே...

''கடுப்பான வட்ட நிர்வாகிகள், முதல்வர் வரை விஷயத்தை கொண்டு போயிட்டாவ... இந்த மாவட்ட நிர்வாகிக்கு சிபாரிசு செஞ்ச அமைச்சரை கூப்பிட்டு முதல்வர், 'லெப்ட் அண்ட் ரைட்' வாங்கிட்டாராம் வே...

''புகார் சொன்ன வட்ட நிர்வாகிகளை கூப்பிட்ட அமைச்சர், 'இனி மாவட்ட நிர்வாகி எது செஞ்சாலும் என்கிட்ட சொல்லுங்க... நான் கண்டிக்கிறேன்'னு சொல்லி மாவட்ட நிர்வாகிக்கு ஆதரவாவே செயல்படுதாராம் வே...'' என, அண்ணாச்சி முடிக்கவும், கடைக்குள் வந்தவரை பார்த்து, ''வாங்கோ அரசு... எப்படி இருக்கேள்...'' என, குப்பண்ணா பேச்சு கொடுக்க, மற்றவர்கள் புறப்பட்டனர்.

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • sethusubramaniam - chennai,இந்தியா

    தினமலர் பத்திரிக்கைக்கு ஒரு கேள்வி. நீங்க இந்த பகுதியிலே வெளியிட்டார் ஊழல் குற்றச்சாட்டுகள் மேலே என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குன்னு ஏதாவது பாலோ அப் டைரி வச்சிருக்கீங்களா

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இப்போதுதான் புதிதாக ‘அளப்பறையை’ ஆரம்பித்திருக்கிறார்களா ? அதற்கு ஓராண்டு நிறைவே கொண்டாடி விட்டார்களே

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement