Load Image
dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் சொத்து வரியை, 100 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர். இது, ஆரம்பம் தான். இன்னும் பஸ், பால் உள்ளிட்ட கட்டண உயர்வுகள் காத்திருக்கின்றன. அ.தி.மு.க., ஆட்சியின் போது, மக்களின் தேவையறிந்து எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினோம். தற்போது தி.மு.க., அரசு திட்டங்களை செயல்படுத்துவது போல் அறிவித்து, மக்களை ஏமாற்றி வருகிறது.


டவுட் தனபாலு: கிராமங்கள்ல சொல் பேச்சு கேட்காம முட்டிக்கிட்டு குனியுறவங்களை பார்த்து, 'உனக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்'னு பெரியவங்க சொல்லுவாங்க... அந்த மாதிரி, 'அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாம விட்டீங்கல்ல... அடுத்து பஸ், பால்கட்டணத்தை எல்லாம் உயர்த்தி, உங்களை நோக அடிக்க போறாங்க பாருங்க'ன்னு கெக்கலி கொட்டுறீங்களோன்னு, 'டவுட்' எழுது!


பத்திரிகை செய்தி:
பெண்களுக்கான உயர்கல்வி ஊக்கத் தொகையான, 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, காமராஜர் பிறந்த நாளான, ஜூலை 15ல் துவக்க அரசு திட்டமிட்டுள்ளது. பட்டப்படிப்பு படிக்க செல்லும் பெண்கள் எல்லாருக்கும் என்பதற்கு பதிலாக, அரசு பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள் மட்டுமே பயன் பெற முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


டவுட் தனபாலு: அதானே... தி.மு.க.,வினர் என்னைக்கு சொன்னதை அப்படியே செஞ்சிருக்காங்க... எங்கயாவது ஒரு இக்கன்னா வைக்காம இருக்க மாட்டாங்களே... தயவு செய்து, இனி தி.மு.க.,வினர் தர்ற வாக்குறுதிகளின் கீழே, 'நிபந்தனைகளுக்கு உட்பட்டது' என்ற வாசகத்தையும் சேர்த்து அடிச்சிடுங்க... மக்கள் எந்த, 'டவுட்'டும் படாம மனதளவுல ஏமாற்றத்துக்கு தயாரா இருப்பாங்க!


தமிழக தொழில் துறை அதிகாரிகள்: முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் கிருஷ்ணன் அடங்கிய உயர்மட்டக் குழு சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு, 13 நாட்கள் பயணமாக வரும் 21ல் கிளம்புகிறது. தமிழகத்தில் உள்ள வளங்கள், ஏற்கனவே முதலீடு செய்த நிறுவனங்கள், அவற்றுக்கு வழங்கப்படும் சலுகைகள் உட்பட பல்வேறு தகவல்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விளக்க உள்ளது.


டவுட் தனபாலு: தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துடுச்சு... இந்த தகவல்களை எல்லாம் ஒரு வீடியோவா பதிவு செய்து, அந்த நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு இணையத்தில் ஈசியா அனுப்பிட முடியுமே... அதை விட்டுட்டு, நாடு நாடா பறக்கிறது, கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்துல அமைச்சரும், அதிகாரிகளும் ஊர் சுற்றவே என்பதில், 'டவுட்'டே இல்லை!நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
: இலங்கையில் ராஜபக்சே ஆட்சி மாறி, ரணில் விக்ரமசிங்கே ஆட்சி வந்தாலும், அங்குள்ள பொருளாதார சிக்கல் தீராது. முதல்வர் ஸ்டாலின் ஈழத்தமிழர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, 'கியூ' பிராஞ்சையும், சிறப்பு முகாமையும் கலைக்க வேண்டும். இவை இரண்டையும் கலைக்காமல், ஈழத் தமிழர்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும்?டவுட் தனபாலு: இப்ப இப்படி கேட்பீங்க... அப்புறம், தமிழகத்துல, 'லாக்கப்' மரணங்களை தடுக்கணும்னா, போலீஸ் துறையை கலைச்சிட்டு, எல்லாரையும் ஆடு, மாடு மேய்க்க அனுப்புங்கன்னு குதர்க்கமா பேசுவீங்க... இப்படி எல்லாம் ஏடாகூடமா பேசிட்டு இருந்தா, எந்த தேர்தல்கள்லயும் நீங்க, 'டிபாசிட்' கூட, உங்க பாஷையில சொல்லணும்னா, 'கட்டுத்தொகை' கூட வாங்க மாட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!


பத்திரிகை செய்தி: தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், வேலைக்காக தங்கள்சான்றிதழ்களை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், ஏப்., 30 வரை, வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 76 லட்சத்து 35 ஆயிரத்து 59 பேர் வேலைக்கு பதிவு செய்துஉள்ளனர். இவர்களில், 58 வயதுக்கு மேற்பட்ட 12 ஆயிரத்து 259 பேரும் பதிவு செய்துள்ளனர்.


டவுட் தனபாலு: தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயதே 60 தான்... ஆனாலும், 58 வயதை கடந்தவங்களும் நம்பிக்கையோட வேலைக்கு பதிவு செஞ்சிட்டு காத்திருக்காங்க... எத்தனை வெளிநாட்டு பயணங்கள், முதலீட்டாளர் மாநாடுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டும், இந்த எண்ணிக்கை குறையாதது ஏன் என்ற, 'டவுட்'டுக்கு ஆட்சியாளர்கள் தான் விளக்கம் தரணும்!


பாக்., வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அசிம் இப்திக்கர்:
இந்தியாவுடனான பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்பது எங்களின் விருப்பமாக இருந்தாலும், ஆக்கப்பூர்வமான, பயனுள்ள பேச்சு நடத்தும் சூழல் தற்போது இல்லை.டவுட் தனபாலு: ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்த, இந்தியா என்றுமே திறந்த மனதுடன் தயாராகவே இருக்கிறது... ஆனா, உள்நாட்டு பிரச்னைகள்ல உருக்குலைஞ்சு போய் கிடக்கிற உங்களுக்கு தான், அண்டை நாட்டுடனான பிரச்னைகளை தீர்ப்பதில் அணுவளவும் ஆர்வமில்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஆறுமுதல் பன்னிரண்டு வகுப்புகள் பல பள்ளிகளில் முறையான ஆசிரியர்களே இல்லாமலும், அவர்கள் சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொண்டு சயிட் பிசினஸில் குறியாக இருப்பதால், மாணவர்கள் ஆனமட்டும் பள்ளிமாறினால்தான் நல்ல படிப்பு சாத்தியம் என்று ஒன்பதிலேயே மாறிவிடுவார்கள் அரசுக்கு, முதல்வருக்கெல்லாம் இது தெரிந்துதான் கண்டிஷன் சேர்த்திருக்கிறார்கள் எந்த அறிவிப்பில் தான் சொன்னதை செய்திருக்கிறார்கள் ?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement