''இதை வச்சுக்கிட்டு டீ கூட குடிக்க முடியாதுன்னு புலம்புதாவவே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''காவல் துறை மானியக் கோரிக்கை விவாதம் முடிஞ்சு, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்ல, 'இரவு ரோந்து போலீசாருக்கு மாதம் 300 ரூபாய் படி வழங்கப்படும்'னு சொன்னாருல்லா...
''இதுக்கு தான் போலீசார் அதிருப்தி தெரிவிச்சிருக்காவ... 'தினமும் 10 ரூபாய் வீதம், 300 ரூபாய் தர்றதா சொல்லுதாவ... ஆனா, இன்னைக்கு சின்ன ஊர்கள்லயே டீ 12 ரூபாய்க்கும், பெரிய நகரங்கள்ல, 15 ரூபாய்க்கும் விக்குது... அதனால, அரசு தர்ற படியை வச்சு, ஒரு சிங்கிள் டீ கூட குடிக்க முடியாது'ன்னு குமுறிட்டு இருக்காவவே...'' என்றார், அண்ணாச்சி.
''அப்பாவுக்கும், மகனுக்கும் பதவி குடுத்துட்டா ஓய்...'' என, அடுத்த தகவலை சொன்னார், குப்பண்ணா.
''தி.மு.க.,வுலயா, அ.தி.மு.க.,வுலயா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஏன், மத்த கட்சிகள்ல வாரிசு அரசியல் இருக்கப்டாதா...? தமிழக பா.ஜ.,வுல 25க்கும் மேற்பட்ட மாவட்டங்கள்ல பழைய நிர்வாகிகளை ஓரங்கட்டிட்டு, புது நிர்வாகிகளை அறிவிச்சிருக்காளோல்லியோ...
''மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல, 'மாஜி' தலைவரான ஜெயவேலு, அ.தி.மு.க.,வுல இருந்து சமீபத்துல பா.ஜ.,வுக்கு வந்தார்... அதே சூட்டோட, அவருக்கு நகர துணைத் தலைவர் பதவியை துாக்கி குடுத்துட்டா ஓய்...
''அடுத்த ஒரே மாசத்துல, அவரது மகன் பாரி, நகர பா.ஜ., இளைஞரணி செயலராகிட்டார்... 'வாரிசு அரசியலை எதிர்க்கற பா.ஜ.,வும் ரூட் மாறிடுத்தே'ன்னு பழைய நிர்வாகிகள் வருத்தப்படறா... அதே நேரம், 'பா.ஜ.,வுல சேர்ந்தாலே பதவின்னு ஆசைகாட்டி ஆள் பிடிக்கறா'ன்னு திராவிட கட்சியினர் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார்.
''டிரான்ஸ்பருக்காக ஆலா பறக்குறாங்க...'' என, கடைசி தகவலை கையில் எடுத்தார், அந்தோணிசாமி.
''எந்தத் துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''பத்திரப்பதிவு துறையில தான் இந்த கூத்து... சார் - பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு, வழக்கமா ஏப்ரல்ல இடமாறுதல் போடுவாங்க... கொரோனாவால ரெண்டு வருஷமா நடக்காத இடமாற்றம், இப்ப துவங்கிடுச்சுங்க...
''வழக்கமா, 'சீனியாரிட்டி' அடிப்படையில, தகுதி பட்டியல் தயாரிச்சு, ஐ.ஜி., ஆபீஸ் மூலமா தான் இடமாறுதல் போடுவாங்க... இந்த முறை ரகசிய பேரம் நடக்குதுங்க...
''பதிவுத்துறையில இருக்கிற சில மூத்த அதிகாரிகளே பேரத்துல இறங்கிட்டாங்க... 'பசை'யான இடத்துக்கு எப்படியாவது போயிடணும்னு துடிக்கிற சார் - பதிவாளர்களிடம் 1 கோடி ரூபாய் வரை பேரம் நடக்குதுங்க...
''வெளிப்படையான நிர்வாகம் இருக்கும்னு அடிக்கடி சொல்ற முதல்வர் தலையிட்டா மட்டும் தான் இதை தடுக்க முடியும்னு, பதிவுத் துறையில நேர்மையான அதிகாரிகள் பேசிக்கிறாங்க...''என்றார், அந்தோணிசாமி.
''இடமாறுதலுக்கே கோடிகளை அள்ளிவிடறான்னா, அவாளுக்கு கிடைக்கப் போற வருமானத்தை நெனச்சு பாரும் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
,,,,,,