இன்று பரவலாக பயன்படுத்தப்படும் மரச் சட்டம் கொண்ட தேன்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு 170 ஆண்டுகள் ஆகின்றன. இது இத்தனை ஆண்டுகளில் மாறாவிட்டாலும், தேனீ வளர்ப்பும், தேனீக்களும் வெகுவாக மாறிவிட்டன.
பல புறக்காரணிகளால் தேனீக்களின் இனமே மெல்ல அழிந்து வருகின்றன.இதனால், தேனீக்களால் நடக்கும் அயல் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு, விவசாயம் தத்தளிக்கிறது.
தேனீக்களுக்கு நேரும் கேடுகளை உடனே அறிய, தேன் கூடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதற்கென துனிசியாவின் துனிஸ் நகரைச் சேர்ந்த ஐரிஸ் டெக்னாலஜீஸ் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் 'ஸ்மார்ட் பீ பிளஸ்' என்ற உணரிகள் நிறைந்த கருவியை தேன் கூடுகளுக்குள் பொருத்தவேண்டும். அக்கருவி கூட்டுக்குள் இருக்கும் வெப்பநிலை, ஈரப்பதம், தேனீக்களின் போக்குவரத்து போன்ற பல தகவல்களை சேகரித்து ஒரு மொபைல் செயலி அல்லது இணைய தளத்திற்கு அனுப்பிவிடும்.
அங்கு தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு, தேனீப் பண்ணையின் உரிமையாளருக்கு கிடைக்கும். அதை வைத்து அவர் தேன் கூடு மற்றும் தேனீக்களின் நலனை மேம்படுத்த முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக, பண்ணையில் தேனீக்களுக்கு பெரிய தொற்று போன்றவை வருமுன் காக்கவும் இக் கருவி உதவும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!