சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
ஆரம்பத்தில் இவற்றின் விலையானது, மாதம் ஒரு முறை என்ற ரீதியில் மாற்றி அமைக்கப் பட்டது; ௨௦௨௦ டிசம்பர் முதல், ௧௫ நாட்களுக்கு ஒரு முறை என, மாற்றி அமைக்கப்படுகிறது. உத்தர பிரதேசம், பஞ்சாப் உட்பட ஐந்து மாநிலங்களில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதனால், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை, 137 நாட்களுக்கு மேலாக மாற்றி அமைக்கப்படாமல் இருந்தது.
அதே நேரத்தில், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை மட்டும் அவ்வப்போது உயர்த்தப்பட்டது. ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பின், பெட்ரோல், டீசல், காஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன்படி, 2021 அக்டோபருக்கு பின், உயர்த்தப்படாமல் இருந்த வீட்டு உபயோகத்திற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை, இந்த ஆண்டு மார்ச் 22ல், 50ரூபாய் உயர்த்தப்பட்டு, 965.50 ரூபாய் ஆனது.இந்நிலையில், இந்த விலை நேற்று முன்தினம் மீண்டும் 50 அதிகரித்து, 1015.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 17 மாதங்களில் மட்டும் காஸ் விலை, 305 ரூபாய் உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு குடும்பத்தினரும், ஆண்டுக்கு 12 காஸ் சிலிண்டர்களை மானிய விலையில் பெறலாம். அதற்கு மேல் சிலிண்டர் வாங்கினால், அதற்கு சந்தை விலையே கொடுக்க நேரிடும். அதே நேரத்தில், அரசு வழங்கும் மானியமானது, அன்னிய செலாவணி விகிதம் மற்றும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் உட்பட, பல காரணிகளை பொறுத்தே வழங்கப்படுகிறது.
கடந்த2021 நவம்பர் 4ல், சென்னையில் பெட்ரோல் விலை ௧௦௧.௪௦; டீசல் விலை 91.43ரூபாயாக இருந்தது. இதையடுத்து, 137நாட்களுக்கு பின், இந்தாண்டு மார்ச் 22ல், 102.16 மற்றும் ௯௨.௧௯ ஆக இருந்த பெட்ரோல், டீசல் விலை நேற்றைய நிலவரப்படி, 110.85 மற்றும் 100.94ரூபாயாக உயர்ந்துள்ளது. இரண்டு எரிபொருட்களின் விலையும் தலா, 8.50ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளன.
ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே போர் மூண்டதாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து வருவதாலும், பெட்ரோல், டீசல், காஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், காஸ் விலை உயர்வு, சாதாரண மக்களை மட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்தினரின் மாதாந்திர பட்ஜெட்டிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. காஸ் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 'மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், காஸ் சிலிண்டர் விலை, 414ரூபாயாக இருந்தது. அரசு சிலிண்டர் ஒன்றுக்கு, 827 ரூபாய் வரை மானியம் வழங்கியது.
அந்த மானியத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு வாபஸ் பெற்று விட்டது. சாதாரண மக்களை காப்பாற்ற, காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியிருந்த அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் வாபஸ் பெற்று விட்டது' என்று குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின் புகார் ஒரு புறம் இருந்தாலும், சமையல் காஸ் விலை உயர்வு, மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனால், மக்களின் சுமையை குறைக்க, அரசு வழங்கும் மானியத் தொகையை குறிப்பிட்ட காலத்திற்காவது, அதாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரங்கள் சீராகும் வரையிலாவது, மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.
இல்லையெனில், காஸ் விலையை குறிப்பிட்ட அளவுக்கு குறைக்க வேண்டும். 'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' என்ற திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது, 2016 மே 1ல் துவக்கப்பட்டது. அதன்பின், இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்படுத்தும் குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை, 29.11 கோடியாக உயர்ந்துள்ளது. அதனால், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்துவதில், மத்திய அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!