இன்றைய தேதிக்கு நான்கு பேர் பழகினால் போதும் உடனே வாட்ஸ் அப்பில் ஒரு குரூப் ஆரம்பித்து ‛குட்மார்னிங்'கில் ஆரம்பித்து ‛குட்நைட்' வரை வெட்டியாக சாட் செய்து நேரத்தை கொன்றுவிடுவர்.
இதில் இருந்து வேறுபட்டு ‛நன்மா சாரிடபிள் டிரஸ்ட் 'என்ற வாட்ஸ் அப் குழு வித்தியாசமாக செயல்பட்டு வருகிறது.
நீலகரி மாவட்டம் பந்தலுார் பக்கம் உள்ள உப்பட்டி பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் கடந்த 2020 ம் ஆண்டு தங்களுக்காக நன்மா..வாட்ஸ் அப் குழுவை உருவாக்கினர்.இதற்கு உதயகுமார்,அஸ்ரப்,மற்றும் பாலன் ஆகியோர் முனைப்பாக இருந்தனர்.
இந்த குழுவில் அங்கம் வகித்த உறுப்பினரான சிவக்குமார் கிட்னி பாதிப்பால் தான் செயலற்று இருப்பதாகவும் தனக்கு வாழ்நாளில் உள்ள ஒரே ஒரு ஆசை சொந்தமாக வீடு கட்டி கூடிபோகவேண்டும் என்பதாக பதிவிட்டிருந்தார்.
இதைப் படித்த நன்மா குழு நண்பர்கள் நாம் ஒன்று கூடி ஏன் சிவக்குமாருக்கு வீடு கட்டித்தரக்கூடாது என்று எண்ணினர் தங்களுக்குள் முடிந்தளவு பணத்தை திரட்டி ஆறு லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு வீட்டைகட்டி சிவக்குமாருக்கு வழங்கினர்.புதிய வீடு கிடைத்த சிவகுமாருக்கு கிடைத்த சந்தோஷத்தை விட முயற்சித்தால் எதுவும் முடியும் என்ற தங்கள் எண்ணத்திற்கு கிடைத்த வெற்றியை நினைத்து குழு உறுப்பினர்கள் அடைந்த சந்தோஷம்தான் அதிகம்.இப்படி சிரமப்படும் மக்களுக்கு உதவி செய்து அதன்மூலம் கிடைக்கும் சந்தோஷத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு வறுமையில் வாடும் மக்களுக்கு முடிந்த அளவு மருத்துவ உதவி வழங்கிவந்தனர், முப்பது பேர்களின் அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளனர்.கிட்னி பாதித்த சுரேஷ் என்பவருக்கு நிதி உதவி செய்த போது சிவக்குமாருக்கு வழங்கியது போல தனக்கும் ஒரு வீடு வழங்கினால் நிம்மதியாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.
இதைக்கேட்டு நன்மா குழு நண்பர்கள் தங்களது நண்பர்களிடம் பணஉதவி பெற்றும் தங்களது உடல் உழைப்பை வழங்கியும் சுரேஷ் ஆசைப்பட்டபடி சுமார் ஏழு லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீட்டை சுரேஷ்க்கு வழங்கினர்.
நண்பர்களின் இந்த நல்ல நிகழ்வினை பாராட்டும் விதத்தில் கூடலுார் எம்எல்ஏ.,ஜெயசீலன்,இவர்களுக்கு பாடம் நடத்திய பள்ளி தலைமைஆசிரியர் மத்தாய் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
எங்களில் பெரும்பாலோருக்கு சொந்த வீடு கிடையாது , சொந்த வீடு கட்டமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது, ஆனால் சொந்த வீடு கட்டும் வாய்ப்பே இல்லாதவர்களின் கனவை நனவாக்கிட உழைத்தோம் வெற்றி பெற்றோம் எங்களின் இந்த தொண்டு முடிந்த அளவு தொடரும் என்றனர்.எவ்வளவு பாராட்டினாலும் அதற்கு தகுதியானவர்கள் இந்த நன்மா குழு உறுப்பினர்கள்,வாழ்த்துக்கள்!
-எல்.முருகராஜ்-படம்,தகவல்:பந்தலுார்,ராஜேந்திரன்.
மிக மிக அருமையான பதிவு, இன்றைக்கு பல தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன அப்படி இருந்தும் எல்லோருக்கும் இவர்களது சேவை போய்சேராதது வருத்தம் அளிக்கும் இந்நிலையில் தனியார்கள் ஒன்று சேர்ந்து இப்படி ஒரு சேவையை செய்வது பாராட்டப்படவேண்டும், இந்த செய்தியை தேனீக்களைப்போல் சேகரித்து உலகுக்கு அரியச் செய்த தினமலருக்கு பாராட்டுக்கள், இந்த தொண்டில் ஈடுபடுபவர்கள் அரசியல் கட்சியில் சேராமல் மத இதர அமைப்புகளில் சேராமல் இருந்தால் இன்னமும் இவர்களது சேவை வளரும், உண்மையான சேவையை அடுத்த கைக்கு தெரியாமல் செய்யும் இவர்களது சேவை மென்மேலும் வளர் வாழ்த்துக்கள், வந்தே மாதரம்