Load Image
dinamalar telegram
Advertisement

வீட்டுக்குள்ள கஞ்சா வளர்க்கிறாங்க 'தில்லா': அதிகாரிங்க அஞ்சாம 'வாங்குறாங்க நல்லா'

வெயில் கொளுத்தி வருவதால், சித்ரா, மித்ராவும் சற்று இளைப்பாற, அருகிலுள்ள பூங்காவுக்கு சென்று அமர்ந்தனர்.

''மே தினத்தன்று, கம்யூனிஸ்ட்காரங்க நடத்தின, ஊர்வலம் களை கட்டிடுச்சு. நிறைய பேரு கலந்துகிட்டாங்க மித்து,'' என ஆரம்பித்தாள் சித்ரா.

''ஆமாங்க்கா, உண்மை தான். சண்டேவா இருந்தாலும் கூட, கூட்டம் களை கட்டுச்சு. அந்தன்னைக்கு, 'டாஸ்மாக்' கடைகளுக்கு லீவு விட்டாலும், ஏகப்பட்ட இடங்கள்ல 'சில்லிங்' சக்கை போடு போட்டுச்சாம்,''

''சிட்டிக்குள்ள, காந்திநகர் பக்கம் இருக்க ஒரு 'டாஸ்மாக்' கடை பார்ல, இல்லீகலா, சரக்கு வித்திருக்காங்க. அதை 'வீடியோ' எடுக்கப்போன ஒரு மீடியா நிருபரை, 'பார்'க்காரங்க மிரட்ட, விவகாரம் போலீஸ் வரைக்கும் புகார் போய், ரெண்டு பேரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...''

''அந்த கடை இருக்கிற அ.பாளையம் போலீசின் பரிபூரண ஆசி, இருக்கறதால, எப்போதும் இப்படிதானாம். லீவு நாட்கள்லயும் சரக்கு அமோகமா கிடைக்குமாம். 'மாமூல்' வாழ்க்கை பாதிக்காததால, போலீஸ்காரங்களும் கண்டுக்கறது இல்லையாம்,'' என்றாள் மித்ரா.

வீட்டுக்குள் 'பார்'''இதே மாதிரி தாங்க்கா, இரண்டு வாரத்துக்கு முன்னாடி, சேவூர் பக்கம், ஒரு வீட்ல இருந்து, 600 மதுபாட்டில் போலீஸ்காரங்க பறிமுதல் பண்ணாங்க. பிடிபட்டவரோட வீட்ல இருக்கற ஒரு அறை, 'பார்' செட்டப்ல தான் இருந்துச்சாம்,''

''டேபிள், சேர், சைடு டிஷ்ன்னு, அசத்தல் ஏற்பாடாம். அந்த ஊர்ல 'டாஸ்மாக்' பார்ங்க குறைவாத்தான் இருக்கு. அதனால, இந்த மாதிரி வீட்டுக்குள்ளேயே 'பார்' வைச்சு, நிறைய பேரு சம்பாதிக்கிறாங்களாம். அப்பப்போ, போலீஸ்காரங்களும் அவங்கள பிடிக்கிறாங்க; இனியும் பிடிப்பாங்கன்னு எதிர்பார்க்கலாம்,'' என்ற நம்பிக்கையுடன் சற்று எமோஷனலாக பேசினாள் மித்ரா.

''அவிநாசி சப்-டிவிஷன்ல, 'க்ரைம் ரேட்' கூடிகிட்டே போகுதாம். கட்டுப்படுத்தறதுக்கு, பெரிய ஆபீசர் 'ஸ்பெஷல் டீம்' போட்டிருக்கார். ஆனால, அந்த டீம்ல இருக்கறவங்க, ரேஷன் அரிசியை கடத்திட்டு வந்த ஒரு வாலிபரை பிடிச்சு, ஊருக்கு ஒதுக்குப்புறமா கூட்டிட்டு போய், 'அரிசியை எங்கிருந்த வாங்கற; எங்க எடுத்துட்டு போற'ன்னு விசாரிச்சு இருக்காங்க,''

''பக்கத்தில அரிசி ஆலைக்கு வித்துடுவேன்' அந்த வாலிபர் சொல்லவே, சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளரை வரச்சொல்லி, ஒன்றரை லட்சம் ரூபா கேட்டு, 25 ஆயிரம் வாங்கிட்டு தான் விட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''ஸ்பெஷல் டீமே இப்படி இருந்தா, வெளங்கிடுங்க்கா'' என சலித்து கொண்ட மித்ரா, ''காலேஜ் ரோட்ல, கவர்மென்ட் காலேஜ்க்கு எதிரிலுள்ள ஒரு வீட்டு பக்கத்துல கஞ்சா செடி வளர்க்கறது பத்தி, பொதுமக்கள் போலீசுக்கு தகவல் சொல்லியிருக்காங்க,''

''போலீஸ்காரங்க கண்டுக்கவே இல்லையாம். அசெம்பிளி நடக்குறப்ப, நடவடிக்கை எடுத்தா, அரசாங்கத்துக்கு கெட்ட பேரு வரும்னு சொல்லி ஒதுங்கிட்டாங்களாம்,'' என, அடுத்த தகவல் சொன்னாள்.

உடனே, சித்ரா ''ரயில் மூலமா, நிறைய பேரு, கஞ்சா கொண்டு வர்றாங்க. கஞ்சாவை மட்டும் தான் போலீஸ்காரங்க பிடிக்கிறாங்க; அதை கொண்டு வர்ற ஆட்கள் பிடிபடறது இல்லை. கஞ்சாவை மட்டும் விட்டுட்டு, 'எஸ்கேப்' ஆகிடறாங்க'ன்னு போலீஸ்காரங்க ஒரு கதை சொல்றாங்களாம்,''

''கஞ்சா கொண்டு வர்றவங்கள, ரயில்வே போலீஸ் மோப்பம் பிடிச்ச, அவங்ளோட 'டீல்' பேசி, தகவல் முன் கூட்டியே குடுத்திடறாங்க. இதனால, போலீஸ் வர்ற சமயத்துக்கு, பாத்ரூம்க்குள்ள போய் ஒளிஞ்சுக்குறாங்களாம்,'' என்றாள்.

'தில்'லான அதிகாரி...''அரசியல் தலையீடே இல்லாம, கால்நடை பராமரிப்புத்துறைல உதவியாளர் வேலைக்கு ஆட்களை நியமிச்சுட்டாங்களாம்,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.


''அடடே... அதிசயமா இருக்கே. தெளிவா சொல்லுங்க''


''கால்நடைத்துறைல பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணலில், தகுதியான நபர்களை மட்டும், சரியான முறையில தேர்வு செய்யணும்ன்னு, கலெக்டர் கண்டிப்பா சொல்லிட்டாராம். ஆனா, 'வழக்கம் போல' ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கள் வசூல் வேட்டை நடத்தி, சிலரது பெயரை ரெகமண்ட் பண்ணியிருக்காங்க,''

''நேர்காணல் நடத்தறதுக்கு அஞ்சு நாள் இருந்த அதிகாரி, மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' பண்ணி வைச்சிட்டாராம். ஒரே நாள்ல பயனாளிகளை தேர்வு பண்ணி, அவங்க வீடு தேடி போய் 'அப்பாயின்மென்ட் ஆர்டரை'யும் கொடுத்து, அடுத்த நாளே, வேலையில வந்த சேர்ந்துடணும்ன்னு சொல்லிட்டாங்களாம். இந்த விஷயம் தெரிஞ்சு, கல்லா கட்டின கட்சிக்காரங்க, அப்படியே 'ஷாக்' ஆயிட்டாங்களாம்'' விளக்கினாள் சித்ரா.


''அப்புறம் என்னக்கா... வாங்குனதை திருப்பி கொடுத்துட வேண்டியது தானே. இந்த மாதிரி, தண்ணி காட்ற மாதிரி வேல பார்க்குறதுக்கும், அதிகாரிகளுக்கு ஒரு 'தில்' வேணும்,'' என பாராட்டினாள் மித்ரா.

வேலையில 'கில்லி'''டிரான்ஸ்பர்க்கு பயந்து, 200 டன் குப்பையை அதிகமா அள்ளி கணக்கு காண்பிச்சுட்டாங்களாம் அதிகாரிங்க,'' என, கார்ப்பரேஷன் மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

''என்னக்கா... புரியலையே?''

''மாநகராட்சி பகுதியில, தினமும், 500 மெட்ரிக் டன் குப்பை அள்றாங்க. இருந்தாலும், எங்க பார்த்தாலும் குப்பை, மலை போல தேங்கி கிடக்கு. இதப்பத்தி மேயர் ஆய்வு செஞ்சதில், நிறைய ஊழியர்ங்க, சரியா வேல செய்யாம 'டிமிக்கி' கொடுத்ததுதான் காரணம்ன்னு தெரிஞ்சு, 'வேலையை சரியா செய்ய முடியலைன்னா, எங்க விருப்பமோ அங்க டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடுங்க'ன்னு, மேயர் சொல்லிட்டாராம்,''

''எங்கே, நம்மை துாக்கியடிச்சுடுவாங்களோன்னு பயந்த ஊழியர்கள், 200 டன் குப்பையை கூடுதலா அள்ளி அதிகாரிங்க நல்லா பேரு வாங்கிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''அக்கா, சிட்டிக்குள்ள இருக்கற 'அம்மா' உணவகத்துக்கு, சமைக்கறதுக்கு, தேவையான அளவு பொருட்களை கொடுக்கறது இல் லையாம். இதனால, போதுமான அளவு சமைக்க முடியாம, ஊழியர்கள் கஷ்டப்படறாங்களாம். உணவகத்தை மூடறதுக்கு தான், இந்த மாதிரி 'பிளான்' பண்றாங்கன்னு ஒரு டாக் ஓடுது,'' என்றாள் மித்ரா.

ஆன்மிக 'அரசியல்'''மித்து, எல்லா பக்கமும் கோவில் விழா களை கட்டுது போல...''

''ஆமாங்க்கா. மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி, பணத்தை சுருட்டற ஆட்கள் அட்டகாசம் குறையல. சாமளாபுரத்துக்கு பக்கத்துல இருக்கற வாழை தோட்டத்து அய்யன் கோவிலுக்கு சாமி கும்பிட என்னோட பிரண்ட் போயிருக்கா. அபிேஷகம் பண்ண பணம் கட்டிட்டு, ரசீது கேட்டப்போ, ஒரு புத்தகத்தை கொடுத்தாங்களாம்,''


''ரசீதுக்கு பதிலா தான், இந்த புத்தகம்ன்னு கதை சொல்லியிருக்காங்க. ஏதோ 'கோல்மால்' நடக்குதுன்னு மட்டும் உள்மனசு சொல்லுச்சு. 'எல்லாத்தையும் நீயே பாத்துக்கப்பா, அய்யனே'ன்னு, அவரு மேல பாரத்தை போட்டுட்டு வந்துட்டாளாம்,'' என்றாள் மித்ரா.


''மித்து அதே ஊர்ல, சில இடங்கள்ல, மாசு ஏற்படுத்தற மாதிரி சில தொழிற்சாலைகள்ல இருந்து புகை வருது, சாய தண்ணீர் வருதுன்னு, மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு, புகார் சொல்லிட்டே இருக்காங்களாம். அதுல ஆய்வு பண்ணி, நடவடிக்கை எடுக்கறதுக்கு பதிலா, 'டீல்' பேசி, அமவுன்ட்டை அதிகாரிங்க வாங்கிட்டு 'கப்சிப்'னு போயிடறாங்களாம்,''


''இல்லக்கா, அங்கிருக்கற சாமிநாதன் அங்கிள்கிட்ட கேட்டா, விஷயம் என்னென்னு தெரிஞ்சிடும்,'' என்றாள் மித்ரா.''இதே மாதிரி தான்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்லயும் நிறைய பிரச்னை.
சித்திரை தேர்த்திருவிழா துவங்க ரெண்டு நாள் தான் இருக்கு. அழைப்பிதழ் அச்சடிச்ச விவகாரத்துலயே, ஏகப்பட்ட அரசியல் ஓடுதாம். கோவில்ல குடிநீர் வசதி செய்றது; சுத்தம் பண்றதுன்னு, பேரூராட்சி நிர்வாகம் தான். அதுக்காக ஒரு 'லெட்டர்' கூட கொடுக்கலையாம்,''


''இப்படி, ஒவ்வொரு விஷயத்திலயும், அதிகாரி, கண்டுக்காம இருக்றாராம். எத கேட்டாலும், ஏதோ ஒரு பதில சொல்லி மழுப்பிடறாராம். இவர வெச்சிட்டு எப்படி தேரோட்டத்தை நடத்துற துன்னு, ஊழியர்கள், கட்டளைதாரர்கள் புலம்பறாங்க...'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.''சரிடி... மழை வர்ற மாதிரி இருக்கு. கெளம்பலாம்,'' என சித்ரா எழுந்ததும், மித்ரா பின் தொடர்ந்தாள்.

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement