Load Image
dinamalar telegram
Advertisement

ஓட்டல்ல தங்கியிருக்கிறது 'ஓசி' ரெய்டுக்கு லேடி போலீசை கூப்பிடுறாரு 'ஏ.சி.,!'

ஈச்சனாரி செல்வதற்காக, ரயில்வே ஸ்டேஷனில் பஸ்சிற்காக சித்ராவும், மித்ராவும் காத்திருந்தனர். சாதாரண பஸ் வந்ததும் ஏறப்போன சித்ராவிடம், ''அக்கா! நம்ம காசு கொடுத்து, சிகப்பு பஸ்லயே போயிருவோம். இந்த பஸ் எதையும் இப்போ நம்பி ஏற முடியலை. ஓசிக்கு ஓடுதுன்னு மெயின்டெயின் பண்றதே இல்லைன்னு, யூனியன்காரங்களே குமுறுறாங்க,'' என்றாள்.

உடனே பலமாகத் தலையாட்டி அதை ஆமோதித்த சித்ரா, ''உண்மைதான் மித்து! அங்கங்க இந்த பஸ்கள் நிக்கிறதைப் பாக்குறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி வாகராயம்பாளையம் போன டவுன்பஸ், தொட்டிபாளையம் பிரிவுல, வேகத்தடை மேல ஏறி இறங்குனதும், சுந்தரா டிராவல்ஸ் மாதிரி பஸ் கண்ணாடி அப்படியே உடைஞ்சு நொறுங்கிடுச்சு. நல்லவேளை ஒருத்தருக்கும் ஒண்ணும் ஆகலை,'' என்றாள்.சிரித்த மித்ரா, சிகப்பு பஸ் வந்ததும் வேகமாக ஏறிச் சென்று, இருவருக்கும் இடம் பிடித்தாள். பஸ் ஜி.எச்.,கடக்கும்போது, மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள் மித்ரா....''அக்கா! நம்ம ஜி.எச்.ல, துண்டான கையையே திரும்ப ஒட்ட வச்சு, சக்சஸா ஆபரேஷன் பண்ணிருக்காங்க. ஜி.எச்.,ல இந்த மாதிரி சர்ஜரி பண்றதெல்லாம் பெரிய விஷயம்...ஆனா உள்ளுக்குள்ள போனா, அங்கங்க பொருட்களை குப்பையாப் போட்டு வச்சிருக்காங்க. போன வாரம்தான், சென்னை ராஜிவ் காந்தி ஹாஸ்பிடல்ல இப்பிடி பொருட்களை குப்பையாப் போட்டதுலதான் தீ விபத்து நடந்துச்சு. இங்க ஏதாவது நடக்குறதுக்குள்ள இதெல்லாம் சுத்தம் பண்ணுனா நல்லது,''


''துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் ஏரியாக்கள்ல மறுபடியும் ஆன்லைன் லாட்டரி சக்கைப்போடு போடுதாம்...போலீசுக்கு வலுவான கவனிப்பு இருக்கிறதால கண்டுக்கிறதே இல்லை போலிருக்கு,''


''கஞ்சா போனா லாட்டரி வருது...லாட்டரி போனா பான் மசாலா வியாபாரம் களை கட்டுது...அதைப் பிடிச்சா, போதைப் பொருள் புழக்கம் அதிகமாகுது...நம்ம ஊரை நினைச்சா பயமாத்தான் இருக்கு,''


''கஞ்சா விக்கிற ஆளுங்களை நிறைய பிடிச்சாங்க...ஆனா சிட்டிக்கு நட்ட நடுவுல இருக்குற புலியகுளம், மீனா எஸ்டேட் ஏரியாவுல இன்னமும் கஞ்சா வியாபாரம் துாள் பறக்குதாம். அந்த ஏரியாவுல கஞ்சா விக்கிற வீட்டை, ரிட்டயர்டு ஏ.டி.எஸ்.பி., ஒருத்தரு கண்டுபிடிச்சு, பீளமேடு போலீசுக்குத் தகவல் சொல்லிருக்காரு. ஆனா இன்னிக்கு வரைக்கும் பிடிக்கலையாம்...எல்லாம் மாமூல் மகிமை,''மித்ரா சொல்லி முடிப்பதற்குள் அடுத்த போலீஸ் மேட்டரை ஆரம்பித்த சித்ரா,


''சிட்டிக்குள்ள இருக்குற ஒரு போலீஸ் ஆபீசர் பத்தி, லேடி போலீஸ்ட்ட இருந்து ஏகப்பட்ட கம்பிளைன்ட் குவியுது,'' என்ற 'இன்ட்ரோ'வோடு தொடர்ந்தாள்...''சிட்டியில இருக்குற ஏ.சி., ஒருத்தரு, மன்மதராசாவா வலம் வர்றாராம். அவருக்கு மகள் வயசுல இருக்குற லேடி போலீசை, லாட்ஜ்களை 'செக்' பண்ணனும்னு நைட்ல வரச் சொல்லி கூப்பிடுறாராம். அதனால அவர் கூப்பிட்டாலே, அவரைப் பாக்கப் போறப்ப, ஒரு ஆண் போலீசைக் கூப்பிட்டுதான் லேடி போலீசே போறாங்களாம்,'


'''அவரைப் பத்தி மேல யாரும் புகார் பண்ணலையா?''


''அவரால பாதிக்கப்பட்ட ஒரு லேடி போலீஸ் மட்டும் தைரியமா, சிட்டி பெரிய ஆபீசர்ட்ட கம்பிளைன்ட் பண்ணிருக்காங்க. இந்த 'அலிகேஷன்' பத்தி துணை கமிஷனர் ஒருத்தரு விசாரிக்கிறாராம். பீளமேடு, சிங்காநல்லூர்ல இவரு வேலை பாக்கிறப்பவே இப்பிடி ஒரு புகார் வந்துதான் மாத்துனாங்க. ஆனா திருந்தவே இல்லை,''


''எங்கேயாவது 'கன்னி இல்லாத காட்டுக்கு' அவரை மாத்த வேண்டியதுதானே?'' ''அவரு கோயம்புத்துாருக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்தே மூணு மாசம்தான் ஆகுது. குடும்பம் இங்க இல்லை. தனியா தங்கணும்னா பாய்ஸ் கிளப் இருக்கு. பி.ஆர்.எஸ்., இருக்கு.

அங்கெல்லாம் தங்காம, சாயிபாபா காலனியில இருக்குற ஒரு 3 ஸ்டார் ஓட்டல்லதான் ஓசியில தங்கிருக்காரு. இவருக்கான எல்லா கவனிப்பையும் 'பேட்ரோல் - 26'ல் இருக்குற ஒரு ஸ்பெஷல் எஸ்.ஐ.,தான் பாத்துக்கிறாராம்,''சித்ரா சொன்னதைக் கேட்டு தலையிலடித்துக் கொண்ட மித்ரா,


''அக்கா! ஓட்டல்னதும் ஞாபகம் வந்துச்சு. சர்க்கார் சாமக்குளம் ஏரியாவுல ஓட்டல்கள்ல எல்லாம் உள்ளூர் போலீஸ், மது விலக்கு போலீஸ் மாசாமாசம் மாமூல் வாங்குறது போதாதுன்னு ஆளும்கட்சி பிரமுகர் ஒருத்தரும், மாசாமாசம் மாமூல் வாங்கிட்டு இருக்காராம்,'' என்றாள்.


''ஆளும்கட்சியிலதான் வசூலும், வசூல்னால கோஷ்டியும் அதிகமாயிட்டே இருக்கு. இப்போ கட்சித் தேர்தல் வேற நடக்குறதால, ஆளுக்கு ஆளு மேல வரைக்கும் போட்டு எறிஞ்சிட்டு இருக்காங்க. கோவையில அஞ்சு மாவட்டத்துல நாலு மாவட்டத்தை கண்டிப்பா மாத்தப் போறாங்கன்னு பழையபடி, தகவல் பரவிட்டு இருக்கு. அதை நம்பி நிறைய புகார்களைக் குவிச்சிட்டு இருக்காங்க!'' என்றாள் சித்ரா.


டிக்கெட் எடுத்துக் கொண்டே அதற்குத் தலையாட்டிய மித்ரா, தனக்குத் தெரிந்த செய்தியைச் சொல்ல ஆரம்பித்தாள்...


''நாலு மாவட்டம் பத்தியும் நாலு விதமா புகார் இருக்கு...சீனியர் 'மாவட்டம்' ஒருத்தரு 'அந்த' விஷயத்துல ரொம்ப 'வீக்'கா இருக்காரு...இன்னொருத்தரு எதுக்கெடுத்தாலும் காசு காசுன்னு அலையுறாரு...ஒருத்தர் சதாசர்வ காலமும் சரக்குலயே மிதக்குறாரு...ஒருத்தருக்கு 'மாஜி' குடும்பத்தோட நெருக்கமான உறவு இருக்குன்னு கம்பிளைன்ட்ஸ் குவியுது...அதனால மாத்துறதுக்கு நிறையவே வாய்ப்பிருக்கு,''


''ஆனா நாலு பேருமே மாவட்ட ஆபீசுக்கே வர்றதில்லைன்னு, நாலு பேர் மேலயும் ஒரு பொதுவான புகாரும் இருக்கு...இப்போ இருக்கிறவுங்களைப் பார்க்க, அவுங்க வீட்டுக்குதான் போக வேண்டியிருக்காம்,''


''உண்மைதான்...ஆர்.எஸ்.புரத்துல இருக்குற ஒரு கட்சி நிர்வாகி, மாவட்டத்தைப் பார்க்க, மேட்டுப்பாளையம் போக வேண்டியிருக்கு. சூலுார்லயிருந்தும், சோமனுார்லயிருந்தும் அந்த மாவட்டப் பொறுப்பாளரைப் பார்க்க வடவள்ளிக்குப் போக வேண்டியிருக்குன்னு, கட்சி நிர்வாகிகள் தரப்புல அனுப்புன புகார் பத்தி எனக்கும் தகவல் வந்துச்சு...அது சரி...மண்டலத்துல எல்லாம் முதல் கூட்டத்தை நடத்திட்டாங்க போலிருக்கு,''


''ஆமாக்கா! அதுலயும் ஒரு உட்கட்சி பாலிடிக்ஸ் அரங்கேறியிருக்கு...கிழக்குலயும், மத்தியிலயும் மண்டல கூட்டத்துக்கு மேயரைக் கூப்பிடலை. மத்த மண்டலத் தலைவர்கள் கூப்பிட்டிருக்காங்க.

அவுங்க ரெண்டு பேரும் என்னை மதிக்கிறதே இல்லைன்னு, 'சிட்டி மம்மி' சிடுசிடுத்துட்டு இருக்காங்களாம்,''


''அவுங்க முதல்வரைப் பார்த்து ஆபீசர்களைப் பத்தி கம்பிளைன்ட் பண்ணப் போறதா, கார்ப்பரேஷன் கார்லயே சென்னைக்குப் போனாங்களே...என்னாச்சு?''


''முதல்வரெல்லாம் அவுங்க பார்க்கலை...செந்தில் பாலாஜியைப் பார்த்துதான், மானியக் கோரிக்கைக்கு வாழ்த்துச் சொல்லிருக்காங்க. அப்பதான், 'கார்ப்பரேஷன் ஆபீசர்கள் யாருமே என்னை மதிக்கிறதில்லை'ன்னு கண்ணீர் விட்ருக்காங்க''


''அய்யோ..பாவம்! அதுக்கு மினிஸ்டர் என்ன சொன்னாராம்?'' ''அவரு என்ன சொல்லுவாரு...வழக்கம்போல 'நான் பாத்துக்குறேன்'னு பேசி அனுப்பிருக்காரு. மாநகராட்சி ஆபீசர்கள்ட்ட அவர் விசாரிச்சப்போ, 'சார்! அவுங்க எதையும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. போன்ல கூப்பிட்டாலும் அவுங்க ஹஸ்பெண்ட்தான் பேசுறாரு. என்னதான் இருந்தாலும் அவர்ட்ட கார்ப்பரேஷன் விஷயத்தை நாங்க எப்பிடி சார் ஷேர் பண்ண முடியும்'னு கேட்ருக்காங்க''

''நியாயம்தானே''


''ஊர் முழுக்க குப்பை குவிஞ்சு கெடக்குது. பாலித்தீன் மானாவாரியா புழங்குது. குடிதண்ணிப் பிரச்னை தலை துாக்குது. வார்டுல ஒரு வேலையும் நடக்க மாட்டேங்குது...மண்டல கூட்டங்கள்ல ஆளும்கட்சி கவுன்சிலர்களே கொந்தளிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
அதனால அடுத்த கார்ப்பரேஷன் மெயின் மீட்டிங்லயே, நிர்வாகத்துக்கு எதிரா எல்லாருமே போர்க்கொடி துாக்குறதுக்கு அதிக வாய்ப்பிருக்கு''


''ஆமா மித்து! வடக்கு மண்டலக் கூட்டத்துல ஆளும்கட்சி கவுன்சிலர் ஒருத்தரே, 'துாய்மைப் பணியாளர்கள் வேலை விஷயத்துல நிறைய மனித உரிமை மீறல் நடக்குது'ன்னு பேசவும், மண்டலத் தலைவர் ஆடிப்போய், 'இதெல்லாம் நாம பேசக்கூடாது'ன்னு உட்கார வச்சிருக்காரு''''மண்டல கூட்டத்தை விடு...மாவட்ட கலெக்டர் நடத்துன விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்துல நடந்த பிரச்னை ஏதோ சீரியஸ் ஆகுதாமே?''மித்ரா கேட்ட கேள்விக்கு,


''ஆமா! உண்மைதான்'' என்று ஒப்புக் கொண்ட சித்ரா, தன்னுடைய மொபைலை எடுத்து சில வாட்ஸ்ஆப் தகவல்களைக் காண்பித்தபடி, அதை விளக்க ஆரம்பித்தாள்...''கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் கந்தசாமிக்கும், கலெக்டருக்கும் நேரடியா மோதல் நடந்திருக்கு. கந்தசாமியை வெளிய போங்கன்னு நேரடியாவே கலெக்டர் சொல்லிட்டாரு. குறை தீர்ப்புக் கூட்டத்துல, மத்தவுங்களுக்கு வாய்ப்பே தராம, கந்தசாமியே ரொம்ப நேரத்தை எடுத்துக்கிறார்ங்கிற புகாரு, ரொம்ப வருஷமாவே இருக்கு. அதனால கலெக்டர் பண்ணுனதுல பல தரப்புக்கும் சந்தோஷம்''

''ஆனா அந்த சங்கத்துக்காரங்க கலெக்டரைக் கண்டிச்சு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போறாங்களாமே?''


''ஆமா...கலெக்டரும் கண்டிப்பாத்தான் இருக்காரு. கந்தசாமியை வெளிய போகச் சொல்லிட்டு, உடனே வெளியில போன கலெக்டர், உடனே வடக்கு, தெற்கு ஆர்.டி.ஓ.,க்களை கூப்பிட்டு ஏதோ உத்தரவு போட்ருக்காரு...கந்தசாமிக்குப் பின்னால, எதிர்க்கட்சியோட வி.ஐ.பி., இருக்கார்னு ஆளும்கட்சி சந்தேகப்படுறது மாதிரி தெரியுது''


''சத்துணவுக் கூடங்களுக்கு வழக்கமா ஒவ்வொரு மாசமும் 20ம் தேதிக்குள்ள அரிசி, பருப்பு மளிகைப் பொருளெல்லாம் வந்துரும். ஆனா பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துல போன மாசம் பொருளே வரலையாம்''

''அச்சச்சோ...அதை நம்பியிருக்குற ஏழைக்குழந்தைகளுக்கு எப்பிடி சாப்பாடு போடுறாங்க?''


''சத்துணவுக்கூட ஆசிரியர்களே கடன் வாங்கி, சமைச்சுதான், குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்குறாங்களாம். இதுல என்ன கொடுமைன்னா, இதைப் பத்தி கலெக்டர்ட்ட புகார் பண்ணியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கலையாம்,'' மித்ரா சொல்லி முடிக்கும் முன்னே, ஈச்சனாரி பஸ் ஸ்டாப் வந்ததும் இருவரும் இறங்குவதற்கு எழுந்தனர்.

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement