ஒரே நேரத்தில் இரு முழுநேர பட்டப்படிப்புகளை மாணவர்கள் படிக்கலாம் என, பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது. புதிய கல்வி கொள்கை அடிப்படையிலும், மாணவர்கள் தங்களின் பன்முக திறனை வளர்த்துக் கொள்ள அனுமதிக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, மாணவர்கள் இரு வேறு பட்டப்படிப்புகளை, ஒரு பல்கலைக் கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக் கழகங்களிலோ மேற்கொள்ள முடியும். அதாவது, இரு இளநிலை பட்டப் படிப்புகள் அல்லது இரு முதுநிலை பட்டப் படிப்புகள் அல்லது இரண்டு பட்டயப் படிப்புகளை, ஒரே நேரத்தில் மாணவர்கள் படிக்க முடியும்.இந்தப் பட்டப் படிப்புகளை மாணவர்கள் நேரடியாக கல்லுாரிகளுக்கு சென்றோ, தொலைதுார கல்வி வாயிலாக, 'ஆன்லைன்' வாயிலாகவோ மேற்கொள்ளலாம். கல்லுாரிகளுக்கு சென்று படித்தால், இரண்டு பட்டப்படிப்புகளையும் பயிலும் நேரமானது மாறுபட்டு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.அதே நேரத்தில், மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர நடத்தப்பட உள்ள, 'கியூட்' நுழைவுத் தேர்வு அல்லது ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பின்பற்றும் சேர்க்கை நடைமுறைகளின்படி, இந்த இரட்டை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம். இதன் வாயிலாக, இயற்பியல் அல்லது வேதியியலில் பி.எஸ்சி., சேரும் தகுதியான மாணவர், இனி, பி.ஏ., ஆங்கிலமோ, வரலாறோ, தமிழோ அல்லது பி.காம்., பட்டப்படிப்பையோ ஒரே நேரத்தில் படிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஒரு பட்டப்படிப்பை காலை நேர கல்லுாரியிலும், மற்றொரு பட்டப்படிப்பை மாலை நேர கல்லுாரியிலும் படிக்கலாம். உயர்கல்வியில் இதுவரை இருந்த விதிமுறைப்படி, ஒரு மாணவர் ஒரு பட்டப்படிப்பை முடித்த பிறகே, மற்றொரு பட்டப்படிப்பை படிக்கலாம். இதனால், ஒரு பாடப்பிரிவை படிக்கும் மாணவர்கள், மற்ற பாடப்பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த முடியாத நிலை இருந்தது. அது, தற்போது மாறியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் வேலை வாய்ப்பை பெற, இன்று கடுமையான போட்டி சூழ்நிலை நிலவுகிறது. அதனால், மாணவர்கள் ஒரு பாடப்பிரிவில் மட்டுமின்றி, பல பாடங்களையும், பாடங்களுக்கு அப்பாற்பட்டு, தொழில் புரிய தேவையான சில பயிற்சிகளையும் பெறுவது அவசியமாக உள்ளது. அத்துடன் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போர், ஒரு பாடத்தில் மட்டுமின்றி, பல பாடங்கள் குறித்த பரவலான அறிவையும் பெற்றிருப்பது அவசியம். அதற்கு, இந்த இரட்டை பட்டம் பெறும் முறை பெரும் உதவியாக இருக்கும். அதேநேரத்தில், இப்புதிய முறையால், மாணவர்கள் முழு நேர பட்டப்படிப்பில் போதிய கவனம் செலுத்துவது குறையும்.
அத்துடன் பட்டப்படிப்பிற்கு உள்ள மதிப்பும் குறையும். மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் பெறுவதிலேயே அக்கறை காட்டுவரே தவிர, அறிவுப்பூர்வமான விஷயங்களை அறிந்து கொள்வதில் அக்கறை காட்ட மாட்டார்கள். ஒரே நேரத்தில் இரு வேறு கல்வி நிறுவனங்களில், வெவ்வேறு பட்டப்படிப்பு படிக்கும் போது, பாடவகுப்புகளுக்கு சரியான நேரத்திற்கு செல்வது, ஒரே நேரத்தில் பல தேர்வுகளை எழுதுவது உட்பட பல பிரச்னைகளை சந்திக்கவும் நேரிடும். அதனால், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகவும் வாய்ப்பு உள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களும் லாப நோக்கத்தில்செயல்பட முற்படலாம். ஆதாயத்தை கருத்தில் கொண்டு ஏராளமான பட்டப்படிப்புகளை நடத்த அனுமதி கோரலாம். அந்தப் படிப்புகளை நடத்த போதிய ஆசிரியர்களை நியமிக்காமல், இருக்கிற ஆசிரியர்களுக்கு கூடுதல் வேலை கொடுத்து, அவர்களையே பாடம் எடுக்க சொல்லலாம்.
மாணவர்கள் பணம் கட்டினால் போதும், கல்லுாரிக்கோ, மாலை நேர வகுப்புக்கோ வரவேண்டிய தேவையில்லை என்ற முறைகேடுகளிலும் ஈடுபடலாம். அதனால், மாணவர்களுக்கு தரமான கல்வி போதிப்பது குறையும் என்ற குற்றச்சாட்டுகளும் கூறப்படுகின்றன. எந்த ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும், அதில், ஆரம்பத்தில் பிரச்னைகள், குளறுபடிகள் உருவாகலாம். அவற்றை சரி செய்யும் வகையில், இந்த விஷயத்தில், தெளிவான வழிகாட்டி குறிப்புகள் மற்றும் விதிமுறைகளை யு.ஜி.சி., வெளியிட வேண்டும்.
அத்துடன், இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து அடிக்கடி கள ஆய்வு நடத்தி, அதற்கேற்ற வகையில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அப்போது தான், திட்டத்தின் பலன் சிறப்பாக இருக்கும். எது எப்படியோ, ஒரே நேரத்தில் இரு பட்டங்கள் பெற மாணவர்களுக்கு அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்க முடிவே.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!