நடப்பாண்டு பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ல், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் துவங்கியது. மறுநாளான பிப்ரவரி 1ல், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022 - 23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தக் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, பிப்ரவரி 11ல் முடிவடைந்தது. இரண்டாவது அமர்வு, மார்ச் 14ல் துவங்கி, நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாளுக்கு முன்னதாக, ஏப்ரல் 7ல் முடிவடைந்தது.
கடந்த 2020ல், கொரோனா பரவல் காரணமாக, பார்லிமென்டின் இரு கூட்டத்தொடர்கள் நிர்ணயிக்கப் பட்ட தேதிக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டன. 2021லும், கொரோனா 2வது அலை காரணமாக, பட்ஜெட் கூட்டத்தொடரும், மழைக்கால கூட்டத்தொடரும் குறைவான நாட்களே நடந்தன.
கடந்த ஆண்டின் குளிர்கால கூட்டத்தொடரும், நிர்ணயிக்கப்பட்டதற்கு ஒரு நாள் முன்னதாகவே முடிக்கப்பட்டது. இந்த, 17வது லோக்சபாவில் ஆறாவது முறையாக, சமீபத்திய பட்ஜெட் கூட்டத் தொடரும் ஒரு நாள் முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளது.
லோக்சபாவில், நிதி மசோதா, டில்லி மாநகராட்சி திருத்த சட்ட மசோதா, குற்றவியல் நடைமுறை மசோதா உட்பட, 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல, ராஜ்யசபாவில், 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போதைய லோக்சபா, 2019 ஜூன் 23ல் துவங்கியது. அதன்பின், இந்த மூன்று ஆண்டுகளில், 134 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதில், 114 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆறு மசோதாக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதுதவிர, 35 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அவற்றில், 21 மசோதாக்கள் தற்போதைய லோக்சபா துவங்குவதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்டவை மற்றும் 1992ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ளவை.
இதற்கு முன், 15வது லோக்சபாவில், 71 சதவீத மசோதாக்களும், 16வது லோக்சபாவில், 27 சதவீத மசோதாக்களும், பார்லிமென்ட் நிலைக்குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. ஆனால், தற்போதைய லோக்சபாவில் அறிமுகமான மசோதாக்களில் 13 சதவீதமே, பார்லிமென்ட் நிலைக்குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், சமீபத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகமான எந்த மசோதாவும், நிலைக்குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படவில்லை.'தற்போதைய லோக்சபாவின், 8வது அமர்வின், ஒட்டுமொத்த செயல்பாட்டு திறன், 129 சதவீதமாக இருந்தது. சபை, 27 அமர்வுகளை கொண்டிருந்தது' என்று, சபாநாயகர் ஓம் பிர்லா பெருமையாக குறிப்பிட்டுள்ளார். மார்ச் 15ம் தேதி, லோக்சபாவில் 13 மணி நேரம் விவாதம் நடைபெற்றுள்ளது. அதில், ரயில்வே அமைச்சக பட்ஜெட் மீது மட்டும், 11 மணி நேரம், 50 நிமிடங்கள் விவாதம் நடந்துள்ளது.
அதேபோல, மார்ச் 30ல், ராஜ்யசபா, ஏழு மணி நேரம், 50 நிமிடங்கள் செயல்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் எம்.பி.,க்களின் அமளி காரணமாக, ஒன்பது மணி நேரம், 30 நிமிடங்கள் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டாலும், கூடுதல் மணி நேரம் இயங்கியதன் வாயிலாக, அதன் செயல்பாட்டு திறன் 98 சதவீதமாகி உள்ளது.
விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உட்பட பல பிரச்னைகள் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சிகள் பல முறை முயன்றும், அதற்கு சபாநாயகரும், ராஜ்யசபா தலைவரும் அனுமதி அளிக்கவில்லை. மேலும், பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு நாள் முன்னதாக முடிக்கப்பட்டதன் வாயிலாக, எதிர்க்கட்சிகள் தங்களுக்குரிய வாய்ப்பை இழந்து விட்டன என்று, அக்கட்சிகளின் தலைவர்கள் வழக்கம் போல, ஆளுங்கட்சி மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
இருந்தாலும், இந்தக் கூட்டத்தொடரில், பட்டியலிடப்பட்ட அனைத்து மசோதாக்களும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் சம்மதத்துடன் நிறைவேறின. எந்த அலுவலும் நிலுவையில் இல்லை என, பார்லிமென்ட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. மொத்தத்தில், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமானதாகவும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தன என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய சுமுக நிலை அடுத்தடுத்த கூட்டத்தொடர்களிலும் தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
அதேநேரத்தில், மூன்றாண்டுகளாகியும், தற்போதைய லோக்சபாவில் துணை சபாநாயகர் தேர்தல் இதுவரை நடைபெறவில்லை என்பது குறையாகவே உள்ளது. அடுத்த தொடரிலாவது, அந்த குறை நிவர்த்தியாகும் என நம்புவோமாக.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!