வீட்டு வசதி திட்டத்தில் 'மெகா' முறைகேடு!
''டில்லி தலைமையிடம் தமிழக காங்கிரசார் அவகாசம் கேட்டிருக்காவ வே...'' என, மசால் வடையை கடித்தபடியே அரட்டையை ஆரம்பித்தார்,
அண்ணாச்சி.
''எதுக்கு ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''காங்கிரஸ் கட்சியில மாநில வாரியா, 'டிஜிட்டல்' முறையில உறுப்பினர்களை சேர்த்துட்டு இருக்காவ... தமிழகத்துல, 25 லட்சம் பேரையாவது சேர்க்கணும்னு கறாரா சொல்லிட்டாவ வே...
''ஆனா, எதிர்பார்த்த அளவு இல்லாம சில மாவட்டங்கள்ல, 'டிஜிட்டல்' சேர்க்கை, 'டல்' அடிக்காம்... அதனால, டில்லி தலைமையிடம் ஒரு மாசம் அவகாசம்
கேட்டிருக்காவ வே...
''அவங்க, 'என்ன செய்வீயளோ தெரியாது... ஒரு மாசத்துல மாவட்ட வாரியா, 'டிஜிட்டல்' உறுப்பினர்களை நிறைய சேர்த்து தமிழக காங்கிரசின், 'கெத்தை' நிரூபிக்கணும்'னு உத்தரவு போட்டிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''தலைவர்களே ஓட்டம் பிடிக்கிற கட்சியில ஆட்கள் சேருவாங்களா பா...'' என சந்தேகம் கேட்ட அன்வர்பாயே, அடுத்த தகவலை பேச ஆரம்பித்தார்...
''பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத் துறை சார்பா, தனித்தனியா விடுதிகள் செயல்படுது... விடுதி காப்பாளர்கள் பலர், ஊழல்ல ஊறி திளைக்கிறதா புகார் கிளம்புச்சு பா...
''சுதாரிச்ச அரசு, ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்களை, விடுதி காப்பாளர்களாவும், விடுதி காப்பாளர்கள் பலரை, ஆசிரியர்களாகவும் துாக்கி அடிச்சுது பா...
''பொறுப்பை குடுத்த பழைய காப்பாளர்கள், கணக்கை ஒப்படைக்கலை... இப்ப, சென்னை ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குனர் அலுவலகத்துல இருந்து தணிக்கைக்கு வந்த அதிகாரிகள், 'மூணு வருஷ கணக்கை எடுங்க'ன்னு, நோண்டி நொங்கெடுக்கிறாங்க பா...
''குறிப்பா, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள்ல இருக்கிற விடுதிகளின் பழைய காப்பாளர்கள், கணக்கு விபரங்களை சமர்ப்பிக்காததால, புதிய காப்பாளர்கள் முழிபிதுங்கி நிற்கிறாங்க... 'பழைய கணக்கை கேட்டு வாங்கி தர அவகாசம் கொடுங்க'ன்னு தணிக்கை அதிகாரிகளிடம் கோரிக்கை வச்சிருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''வீட்டு வசதி திட்டத்தை, அ.தி.மு.க.,காரா அவா வசதிக்கு வளைச்சிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''விபரமா எடுத்து விடுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''மத்திய அரசின் பிரதமர் வீடு கட்டும் திட்டத்துல, வறுமை கோட்டுக்கு கீழே இருக்கறவா, 300 சதுர அடியில வீடு கட்டிக்க 2.20 லட்சம் ரூபாய் குடுத்தால்லியோ...
''இதுக்கு, தனியா வீட்டோட, 'பிளான்' கொடுக்கணும்னு அவசியமில்லை... இதை சாதகமா பயன்படுத்திண்ட சில பணம் படைச்சவா, போன அ.தி.மு.க., ஆட்சியில கட்சிக்காராள, 'வெயிட்டா' கவனிச்சு உள்ளாட்சி அனுமதி வாங்கி, 2,500 சதுர அடி வரை விதியை மீறி வீட்டை கட்டினுட்டா ஓய்...
''பல வீடுகளுக்கு பட்டாவே இல்லையாம்... உண்மையா பயன் அடைய வேண்டிய ஏழைகளுக்கு இந்த திட்டம் போய் சேரலை ஓய்...
''தமிழகத்துல கடந்த 10 வருஷத்துல, பிரதமர் வீட்டு வசதி திட்டத்துல கட்டப்பட்ட வீடுகளை பட்டியல் எடுக்க தொடங்கியிருக்கா... உள்ளாட்சி துறை சார்புல, தனி கமிட்டி அமைச்சு ஆய்வு செய்யவும் போறாளாம் ஓய்... இதுல, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
மைய அரசுத்திட்டத்தில் தங்கள் பங்கு போகதானே மக்களுக்கு கிள்ளிக்கொடுப்பார்கள் அப்பாவி ஜனங்களுக்கு இதெல்லாம் எட்டாமல் ஊழல் செய்வதில் கில்லாடிகளாயிற்றே