முதல்வர் பதவி மீது மீண்டும் ஆசை!
'துறவியாக இருந்தாலும், அதிகாரம் என்றால் ஆசை இருக்கத் தானே செய்யும்...' என பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான உமா பாரதியை பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்தாண்டு மத்தியில், இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதை அடுத்து, அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன. பா.ஜ.,வில் தற்போதைய முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகானே, மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்த நிலையில் தான், முன்னாள் முதல்வரான உமா பாரதி, மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளார். இவர், பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசில் அமைச்சராக பதவி வகித்தார்.
உடல்நிலையை காரணமாக கூறி, 2019 லோக்சபா தேர்தலில், இவருக்கு, 'சீட்' வழங்கப்படவில்லை. இதனால், அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாமல், சொந்த மாநிலமான ம.பி.,யில் முடங்கி கிடந்தார். 'நான் துறவி; எனக்கு எந்தப் பதவி மீதும் ஆசை இல்லை. அமைதியான வாழ்க்கை வாழ்கிறேன்...' என்று கூறி வந்தார். ஆனால், சில மாதங்களாக, இவரது
நடவடிக்கைகளில் மாற்றம் தென்படுகிறது. சமீபத்தில் போபால் நகரில் உள்ள மதுக் கடை மீது, கற்களை வீசி எறிந்து போராட்டம் நடத்தினார். 'மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்; இல்லையெனில், தொடர்ந்து போராட்டம் நடத்துவேன்...' என ஆவேசத்துடன் கூறினார் உமா.
ம.பி.,யைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகளோ, 'மீண்டும் முதல்வராகும் ஆசை, உமா பாரதிக்கு வந்து விட்டது. அதனால் தான், கல் வீசும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்' என, கிண்டலடிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!