Load Image
dinamalar telegram
Advertisement

எழுத எழுத தீராத வாழ்க்கை: எழுத்தாளர் பாண்டியக்கண்ணனும் எழுத்தும்

கரிசல் மண் எத்தனையோ எழுத்தாளர்களை தன் வசமாக கொண்டுள்ளது. கி.ராஜநாராயணன், சோ.தர்மன், எஸ்.ராமகிருஷ்ணன், நரன் என பல எழுத்தாளர்கள் உருவான வரிசையில் விருதுநகரை சேர்ந்த எழுத்தாளர் பாண்டியக்கண்ணனும் எளியவர்களைப் பற்றி எழுதுகிறார். வாழ்வியல் சம்பவங்கள், மக்களின் கருத்துக்களை கூறும் விதத்தில் 'சலவான், மழைப்பாறை, நுகத்தடி' என மூன்று முக்கிய நாவல்களை எழுதி உள்ளார். இவர் கூறியதாவது...

உங்களை பற்றி...சொந்த ஊர் விருதுநகர் கூரைக்குண்டு. இயற்பெயர் ஆர்.பி.கண்ணன். புனைப்பெயர் பாண்டியக்கண்ணன். விருதுநகர் சுகாதார போக்குவரத்து துறையில் பணியாற்றுகிறேன்.

இலக்கிய ஆர்வம் எப்போதுதுப்புரவு தொழிலாளியான என் தந்தை நாடக கலைஞர். அவர் எழுத படிக்க தெரியாதவர் என்பதால் நாளிதழ்களை வாசிக்க சொல்லி கேட்பார். அப்படி துவங்கிய என் வாசிப்பு இலக்கியத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது.

எழுத்தாளர் சுந்தரராமசாமி உடன் இருந்த நாட்கள்அரசு பணிக்கு வந்த பின் கலைத்தாகம் குறையவில்லை. 1997ல் நாகர்கோவிலுக்கு பணியிடமாற்றம் ஆனேன். காலச்சுவடு பதிப்பக எழுத்தாளர் சுந்தரராமசாமியின் தொடர்பு கிடைத்தது. அவர் லியோ டால்ஸ்டாய், தஸ்தாவோஸ்கி, சிங்கிஸ் ஐத்மாத்தாவ் போன்றோரின் ரஷ்ய இலக்கியங்களை வாசிக்க தந்தார். இந்திய இலக்கியத்தில் மேற்கு வங்க நாவலான 'நீலகண்ட பறவையை தேடி' நாவல் என் வாழ்க்கையையும், வாசிப்பு கோணத்தையும் மாற்றியது. சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை, ஜே.ஜே.,சில குறிப்புகள், ஜி.நாகராஜன் இலக்கிய கூட்டங்கள் என்னை முழு இலக்கியவாதியாக மாற்றியது. அப்போது தான் நாமும் ஏன் எழுத கூடாது என்ற எண்ணம் வந்தது.

முதல் நாவல் பற்றிஎழுத்து இருவகைப்படும். திட்டமிட்டு எழுத கூடிய எழுத்து. ஏற்கனவே இருப்பதை எழுதும் எழுத்து. நான் உள்ளிருந்து என் வாழ்வியலில் ஏற்கனவே இருந்ததை எழுதுகிறேன். என் வாழ்க்கை எழுத எழுத தீராத வாழ்க்கை. என் தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பும், இரண்டாம் உலகப்போரில் ரஷ்ய பிரிவினையை சீரமைத்து அரசியலில் பெரும்பங்காற்றியவர் மருமகளால் விரட்டியக்கப்பட்டு பின் குல்சாரி என்ற குதிரையிடம் தன் வாழ்க்கை குறித்து பேசும் சிங்கிஸ் ஐத்மாத்தாவ்வின் 'குல்சாரி' நாவலின் பாதிப்பும் தான் என் முதல் புத்தகமான சலவான் நாவலுக்கு அடித்தளம். 1998ல் எழுத துவங்கி கிட்டதட்ட 10 ஆண்டு தொடர் முயற்சிக்கு பின் தான் 2008ல் வெளியானது. திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லுாரியில் என்னுடைய புத்தகத்தை ஆய்வு செய்து மாணவர் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளுமைகள்உலக அளவில் எழுத்தாளுமை என்றால் லியோ டால்ஸ்டாய், தஸ்தவோஸ்கி, தமிழில் சுந்தரராமசாமி, எஸ்.ராமகிருஷ்ணன்.

இலக்கிய களத்திற்கு வர விரும்புபவர்களுக்கும் கூற விரும்பும் அறிவுரைஇந்த புத்தகம் படிக்க வேண்டும் என்றில்லாமல் எல்லா புத்தகங்களையும் படிக்க வேண்டும். வாசிப்பு... வாசிப்பு... வாசிப்பு மட்டும் தான் இலக்கியத்தில் தடம் பதிக்க உதவும்.

தற்போது ஒருவர் முழு நேர எழுத்தாளராக இயங்கும் சூழல் இல்லை. அது எப்போது அமையும்.வேறு பணியில் இல்லாமல் முழுநேரமும் புத்தகம் எழுதும் எழுத்தாளனுக்கு உரிய வாழ்வாதார சூழல் அமைவதில்லை. வாசகர்கள் வாசிக்கும் போது தான் எழுத்தாளனின் பொருளாதார நிலை உயரும். வாசிப்பு அதிகரிக்கும் போது எல்லாம் மாறும். பெரிய ஆளுமையாக இருந்த பாரதியார், புதுமைப்பித்தன் வறுமையில் தான் இறந்தனர். அரசு எழுத்தாளர்களை கொண்டாட வேண்டாம். அவர்களின் புத்தகங்களை எல்லோரும் வாங்கி வாசிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

அடுத்தடுத்த படைப்புகள், அடுத்த கட்ட நகர்வுஎன்னுடைய அடுத்த நாவல் 'மேடை' விரைவில் வெளியாக உள்ளது. நான் சினிமாவை கூரான ஆயுதமாக கருதுகிறேன். பணி ஓய்வுக்கு பின் நிச்சயம் அதில் பங்காற்றுவேன்.
இவரை பாராட்ட 70102 04940

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    கரிசல் மண் படைப்பாளிகள் என்று சிலரை வகை படுத்தி கொள்ளுகிறார்கள் .பாரதி, எட்டயபுரத்தில் .வா .வு .சி ஒட்டப்பிடாரத்தில் .குருமலை சுந்தரம் பிள்ளை போன்றவர்களும் கரிசல் மண்ணில் வசித்து தான் படைப்பாளியானார்கள் .இவர்கள்நூற்று ஐம்பது ஆண்டு களுக்கு முன்பு தோன்றியதால் இந்த வேறுபாடா

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement