Load Image
Advertisement

கடைசித் தொழிலாளி


காஷ்மீர் மாவட்டம்புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாம்போரின் நம்பல்பால் பகுதி
கம்பளியை ஊடுருவி பாயும் அதிகாலை குளிர், இருந்தும் அந்தக் குளிரை பொருட்படுத்தாமல் பெரியவர் ஓருவர் துாங்கியது போதும் என்று முடிவு செய்து எழுந்தவராய் படுக்கையை சுருட்டிவைத்துவிட்டு காலைக்கடமைகளை விறுவிறுவென முடித்துவிட்டு வேலைக்கு தயராகிறார்.இவர் குடியிருக்கும் வீட்டின் கீழ் தளத்தில் ஒரு காளை மாடு மரச்செக்கோடு இணைக்கப்பட்டு எஜமானின் கட்டளைக்கு உட்பட்டு செக்கை இழுக்கத்தயராக நிற்கிறது.

அலி முகமது வானி என்ற அந்தப் 77 வயது பெரியவர்தான் அந்த செக்கிற்கு முதலாளியும் தொழிலாளியும் ஆவார்.மாட்டின் உதவியுடன் மரச்செக்கில் எண்ணெய் ஆட்டி எடுத்து விற்பனை செய்யும் தொழிலில் இருக்கிறார்.காளையை முடுக்குகிறார் மரச்செக்கு சுற்றத்துவங்குகிறது எள்ளைப் போட்டு அது அரைபட்டு எண்ணெயாகும் வரை பொறுமை காக்கிறார் கொஞ்சம் கொஞ்சமாக வழியும் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கிறார்.
நீண்ட நேரம் செக்கு ஒடியதும் பெரியவரும்,காளையும் களைப்பாகிவிடுகின்றனர் இருவரும் எளிமையான உணவை எடுத்துக் கொண்டு உடனடியாக மீண்டும் செக்கை இயக்க ஆரம்பிக்கின்றனர்.எண்ணெயும், ஒய்வும் பெரியவருக்கு கொஞ்சமாகத்தான் கிடைக்கிறது அந்த ஒய்வு நேரத்தில் தனது கதையை சொல்கிறார்.
நானே இப்போது தாத்தா, என் தாத்தா காலத்தில் இருந்து இதுதான் எங்களுக்கு தொழில், இந்த செக்கில் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய்தான் எங்களுக்கு வாழ்வதாரம். நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தனர் அவர்கள் மரச்செக்கு எண்ணெய்தான் வேண்டும் என்று கேட்டு வாங்குவர் கிட்டத்தட்ட இருநுாறு வருடமாக நடந்துவந்த இந்த தொழில் இனி தொடராது என்னோடு இந்த தொழில் முடிவிற்கு வருகிறது என்று சொல்லிவிட்டு கண்ணீர்வழியும் கண்களுடனும் கனத்த இதயத்துடனும் ஏறிட்டுப் பார்த்தார்.
இப்போது எந்திரத்தின் மூலம் பிரித்தெடுக்கும் எண்ணெய் விலை குறைவாக இருப்பதால் மக்கள் அந்தப்பக்கம் போய்விட்டனர் செக்கு எண்ணெய்தான் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு எந்திரம் பொருத்தி மரச்செக்கில் இருந்து எண்ணயெ் எடுத்து தருகின்றனர் மாடுகட்டிய மரச்செக்கில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை வாங்க வெகு சிலரே வருகின்றனர் அவர்கள் மூலமாக வரும் வருமானம் மாட்டின் தீவனத்தி்ற்கே சரியாகப் போய்விடுகிறது மிஞ்சிப்போனால் எனக்கு கொஞ்சம் கஞ்சிக்கு கிடைக்கும்.
என் குடும்பத்தார் எல்லாம் இந்த இடத்தையும் என்னையும் விட்டு விலகிப்போய்விட்டனர், இதை தலைமுழுகிவிட்டு வா என்கின்றனர். இந்த இடம் என் தாத்தாவும் அப்பாவும் உலாவிய இடமாயிற்றே சட்டென உதறிவிட முடியாதே இது வெறும் மரச்செக்கு இல்லையே எங்களுக்கு எல்லாம் ஒரு காலத்தில் நல்ல உணவு வழங்கிய மூத்த குடும்பத்து உறவினராயிற்றே எப்படி உதறிவிட முடியும் அது மட்டுமின்றி என்னையே நம்பியுள்ள இந்த வாயில்லா ஜீவனுக்கு இதை இழுப்பதை தவிர வேறு எதுவும் தெரியாதே .
எனக்கு நீ துணை உனக்கு நான் துணை என்று நானும் மாடும் நாள் முழுவதும் மவுனமாகப் பேசிக் கொள்வோம்,எப்போதவாது என்னையும் எனது எண்ணெயையும் தேடிவரும் வாடிக்கையாளர்களால் ஒவ்வொருநாளும் பொழுது கழிந்து கொண்டு இருக்கிறது,எனக்கு தெரியும் நான்தான் இந்த மரச்செக்கின் கடைசி தொழிலாளி என்று.
அரசு பராம்பரியத்தைக் காக்க நிறைய செலவு செய்கிறது என்கின்றனர் என்னைப் பற்றி கேள்விப்பட்டு வரும்போது நான் உயிரோடு இருக்க வேண்டும் சொல்லுங்க சார் நான் அதுவரை உயிரோடு இருப்பேனா என்று கேட்கிறார்..
பெரியவரின் கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
-எல்,முருகராஜ்.-படங்கள்/எஸ்.இர்பான்.வாசகர் கருத்து (7)

 • Sankar - Madurai,இந்தியா

  மனதை என்னவோ செய்வது உண்மை. இவர் போன்றவர்களை கடவுளுக்கு பிடிக்கும் என்றால், அவர் சீக்கிரம் அழைத்துக் கொள்ளட்டும், அந்த மாட்டையும் கூட. இது போன்ற தொழிலாளிகளிடம் வாங்கும் பழக்கம் அதிகரிக்கவேண்டும். எவ்வளவோ செலவு செய்யும் இந்த தலைமுறைக்கு, இவ்வாறானவர்களிடம் பேரம் பேசாமல் வாங்குவது கடினமல்ல. சிறிது காலமாக சாலையோரத்தில் வறுத்த (ஓட்டோடு) வேர்க்கடலை விற்கும் ஒரு முதிய பெண்மணியிடம் வாங்கும் வழக்கம் வைத்திருந்தேன், சில நாட்களாக அவரை அந்த இடத்தில பார்க்க முடியவில்லை. என்ன ஆயிற்று என்று விசாரிக்க மனம் துணியவில்லை.

 • seenivasan - singapore,சிங்கப்பூர்

  மக்களே, இந்த பெரியவரை போன்று நாடு முழுவதும் உழைக்கும் கரங்களுக்கு, பேரம் பேசாமல் கரம் கொடுத்திடுவோம். உழைப்பவன் அழுதால் இப்பூவுலகம் தாங்காது

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  படிப்பதற்கு வேதனையா இருக்கு , ஆனாலும் இவரை போன்றோருக்கு நல்வாய்ப்பு என்பது நம்மை போன்றோரால் தான் முடியும் சிறிது மேலும் அதிக தகவல் கொடுப்பீர்களா?

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  காஷ்மீரில் மட்டுமா இந்த நிலை? இந்தியா எங்கும் இதே நிலைதான். மாற்றம் ஓன்று மட்டுமே மாறாதது.

 • Anand Attavane - Edison,யூ.எஸ்.ஏ

  எப்படி இவருக்கு உதவமுடியும் என எனக்கு தெரியப்படுத்தவும், நன்றி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement