கேள்விக்குறியாகும் அரசியல் வாழ்க்கை!
'ஒரு காலத்தில் உத்தர பிரதேச மாநிலத்தையே ஆட்டிப் படைத்தவர்; இப்போது இப்படி முடங்கி கிடப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது...' என, முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியைப் பற்றி கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள். மாயாவதி நான்கு முறை உ.பி.,யின் முதல்வராக பதவி வகித்தவர். இதில் ஒருமுறை மட்டுமே ஐந்து ஆண்டுகள் முழுமையாக பதவியில் இருந்தார்; மற்ற முறை எல்லாம் குறுகிய காலங்கள் தான். உ.பி., அரசியலில் இவருக்கு தனி செல்வாக்கு இருந்தது. இவரது ஆட்சி காலத்தில், உ.பி.,யின் முக்கிய நகரங்களில் எங்கு பார்த்தாலும் மாயாவதியின் சிலைகள் அமைக்கப்பட்டன; ஆடம்பரத்துக்கும் குறைச்சல் இல்லை; இவரது கட்சி நிர்வாகிகள் ஊழலில் புகுந்து விளையாடினர். இவை எல்லாம் சேர்ந்து மாயாவதியை அரசியலில் பாதாளத்தில் தள்ளி விட்டன. தொடர்ச்சியான வழக்கு, விசாரணைகளால் அவரால் தீவிர அரசியலில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது உ.பி.,யில் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டுகிறது; எல்லா அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளன.பகுஜன் சமாஜ் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்; ஆனால், அவர்கள் பெயரளவுக்கே பிரசாரம் செய்கின்றனர்.பிரசாரத்தை முன்னின்று நடத்த வேண்டிய மாயாவதியோ, வெறும் அறிக்கைகள் வாயிலாகவே அரசியல் நடத்துகிறார்.
'இந்த தேர்தலுக்குப் பின் மாயாவதியின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகலாம்...' என்கின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.
இவருடைய அரசியல் வாழ்வு முடிவது உ பி மக்களுக்கு நல்லது