dinamalar telegram
Advertisement

நிஜக்கதை நாயகன் கோவை முகமது ரபிக்கு கோட்டை அமீர் விருது

Share

தனது மனைவியின் நகைகளை விற்று அன்னதானம் செய்த கோவை முகமது ரபிக்கு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கி கவுரவித்துள்ளார், இதற்கு பிரதான காரணம் தன்னைப்பற்றி ‛ நிஜக்கதை'யில் வந்த கட்டுரை குறிப்புதான் என்று சொல்லி முகமது ரபி மனம் நிறைந்த நன்றி கூறினார்.
கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் முகமது ரபி,நிலம் வாங்கி விற்பதன் மூலம் வரும் வருமானத்தில் பெரும் பகுதியை சமூக சேவைகளுக்கு பயன்படுத்துபவர்.அந்தப்பகுதியில் உள்ள இந்துக்கோவில்களை புதுப்பிக்கும் பணிக்கு பண உதவி செய்வார் ஏழை இந்துப் பெண்களுக்கு தன் சொந்த செலவில் வளைகாப்பு நடத்துவார் ஆதரவற்ற குடும்பங்களை ஒருங்கிணைத்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவார் ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு, உடைக்கு செலவிடுவார்.கொரோனா காலத்தில் கோவையில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊருக்கும் போகமுடியாமல்,இருக்கும் இடத்தில் சாப்பிடவும் வழியில்லாமல் தவித்தனர். சக மனிதன் வயிறு பசித்திருக்கும் போது தான் சாப்பிடுவதை அவமானமாகக் கருதிய முகமது ரபி தனது வருமானம், சேமிப்பு என்று எல்லாவற்றையும் எடுத்து வடமாநில தொழிலாளர்களின் சாப்பாட்டிற்கு செலவிட்டார்.பின் பலரின் வேண்டுகோள் காரணமாக கோவை முழுவதும் உள்ள தெருவோர மக்கள் பலருக்கு சாப்பாடு வழங்கினார்.அன்றாடம் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கியதால் இவர் ‛பிரியாணி பாய்' என்றே அழைக்கப்பட்டார்.
நன்கொடை வாங்குவதில்லை தனது சொந்த பணத்தில் இருந்து மட்டுமே செலவு செய்வது என்பதில் உறுதியாக இருந்த முகமது ரபி ஒரு கட்டத்தில் கையில் பணம் இல்லாமல் தவித்தார்அந்த நேரம் அவரது மனைவி பாத்திமா தன்னிடம் இருந்த நுாற்று ஏழு பவுன் நகையை கொஞ்சமும் தயக்கமின்றி கொடுத்து,‛ இதை விற்று வரும் பணத்தில் அன்னதானம் செய்யுங்கள்' என்று சொல்லிவிட்டார். அவரது சகோதரர்கள் அக்பர் அலி,அசேன் ஆகியோர் உதவியும்அமோகமாக கிடைத்தது.
இப்படி தன்னால் முடிந்த உதவிகளை விளம்பரம் இல்லாமல் நடத்திக் கொண்டிருந்த முகமது ரபியைப் பற்றி கேள்விப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் இவரைப்பற்றி விரிவாக தினமலர் நிஜக்கதையில் பிரசுரமாகியிருந்தது.
இந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் நினைவாக வழங்கப்படும் தமிழக அரசின் இந்த ஆண்டிற்கான விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டார்.
அரசு விருந்தினராக மனைவி பாத்திமாவுடன் சென்னை வந்த முகமது ரபிக்கு இன்று காலை முதல்வர் கோட்டை அமீர் நினைவு மதநல்லிணக்க விருதினை வழங்கி கவுரவித்தார்.
விருது தனக்கு பெரும் மகிழ்ச்சியையும் இந்த சமூகத்திற்கு இன்னும் உதவிட, உழைத்திட உத்வேகத்தையும் தந்துள்ளதாகவும் முகமது ரபி குறிப்பிட்டார்.
-எல்.முருகராஜ்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து (4)

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  நன்றி நிறைந்த வாழ்த்துக்கள் ......... இவர் குலம் செழிக்கட்டும்

 • raja - Cotonou,பெனின்

  வாழ்த்துக்கள் சகோதரரே.....

 • velimalaya - Chennai,இந்தியா

  நல்ல விஷயம் தான் .ஆனால் எத்தனையோ இந்து அமைப்புகளும் இதில் இதேபெற்றுள்ளன' அவற்றை பாராட்ட மனம் இல்லை நம் முதல்வருக்கு ..

 • RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்

  அன்னமிட்ட கை , தர்மம் தலை காக்கும் , நீடுழி வாழ்க வாழ்கவே நீவீர்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement