dinamalar telegram
Advertisement

மாநகராட்சி பதவிக்கு ரூ.2.50 'சி' தந்த அதிகாரி!

Share

மாநகராட்சி பதவிக்கு ரூ.2.50 'சி' தந்த அதிகாரி!பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள், குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். நாயர் தந்த சுக்கு காபியை பருகியபடியே, ''கட்சிக்குள்ளயும் மூக்கை நுழைக்கறாருங்க பா...'' என, விவாதத்தை ஆரம்பித்தார், அன்வர்பாய்.
''எந்தக் கட்சியில, யாரை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, ராணிப்பேட்டை மாவட்டத்துல, தி.மு.க., சார்புல விருப்ப மனுக்களை வாங்குறாங்க... மாவட்ட முக்கிய புள்ளியின் மகன், 'யார்கிட்ட வேணும்னாலும், மனுக்களை வாங்குங்க... ஆனா, நான் சொல்றவங்களுக்கு தான் சீட் தரணும்'னு கட்சி நிர்வாகிகளிடம் கறாரா சொல்லிட்டாரு பா...

''ஏற்கனவே, முக்கிய புள்ளி நிர்வகிக்கிற துறையில டெண்டர், அதிகாரிகள் மாற்றத்துல மட்டும் தலையிட்டுட்டு இருந்தவர், இப்ப கட்சிக்குள்ளயும் மூக்கை நுழைக்காரேன்னு, நிர்வாகிகள் வெறுத்து போயிருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''சிலருக்கு 'காந்தி' நோட்டை பார்த்தா தான், முகத்துல 'சந்தோஷம்' பொங்குதுங்க...'' என, நண்பருடன் பேசியபடியே வந்த அந்தோணிசாமி,

''ஆக்கிரமிப்பு கடை விவகாரத்தை, மாநகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த முடிவு பண்ணியிருக்காங்க...'' என, அடுத்த மேட்டரை ஆரம்பித்தார்.

''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''துாத்துக்குடி லயன்ஸ் டவுனைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருத்தருக்கு, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி உத்தரவுப்படி, இளைஞரணி மாநில துணைச் செயலர் ஜோயல் ஏற்பாட்டுல, ராஜாஜி பூங்கா பகுதியில ஜூஸ் கடை வைக்க ஏற்பாடு செய்தாங்க...

''கடையின் மாதிரி வடிவத்தை முதல்வர் இல்லத்துல, உதயநிதி வெளியிட்டார்... வேலைகள் முடிஞ்சு கடையை திறக்க இருந்த நேரத்துல, ஆக்கிரமிப்புன்னு சொல்லி, மாநகராட்சி அதிகாரிகள் இடிச்சு தள்ளிட்டாங்க...

''உதயநிதி ஆதரவுல, மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிச்சிருக்கிறதா, இந்த விஷயத்தை துாத்துக்குடி மாநகராட்சி தேர்தல்ல ஊதி பெருசாக்க, எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் முடிவு பண்ணியிருக்குதுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''போன வேகத்துல திரும்பி வர காய் நகர்த்திட்டு இருக்காரு வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அண்ணாச்சி.

''யார், எங்க போனது ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''கோவை மாநகராட்சியில, டெண்டர் முறைகேட்டுல சிக்குன அதிகாரிகளை வேற வேற ஊர்களுக்கு 'டிரான்ஸ்பர்' செஞ்சாங்கல்லா... இப்படி போன ஒரு இன்ஜினியர், பழைய இடத்துக்கு திரும்பி வர, துறையின் மேலிடத்துக்கு வேண்டிய புள்ளிகள் மூலமா காய் நகர்த்திட்டு இருக்காரு வே...

''இதுல, 3 கோடிக்கு ஆரம்பிச்ச பேரம், 2.5 கோடியில முடிஞ்சிருக்கு... குடுத்த பணத்தை எடுக்க வசதியா, அதிகாரிக்கு சகல அதிகாரமுள்ள கூடுதல் பொறுப்பு கொடுக்கச் சொல்லியும் உத்தரவு போட்டிருக்காவ... சீக்கிரமே ஆர்டர் வந்துடும்னு காத்துட்டு இருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.
ஒலித்த போனை எடுத்த அன்வர்பாய், ''ஞானவேல், ரவி, மணிவண்ணனை பார்த்து பேசிடுங்க... காரியம் கச்சிதமா முடிஞ்சிடும் பா...'' என்றபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • DVRR - Kolkata,இந்தியா

    2.50 சி கொடுத்தா 10 சி கிடைக்கும் அந்த பதவி மாற்றத்தால் என்று தெரிந்து தானே கொடுக்கின்றார்கள்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement