ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அஞ்சூரில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவது, தி.மு.க.,வின் இந்த மாதத்திற்கான கோட்டா. முன்னாள் அமைச்சர்கள் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும்...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க., அரசு ஏதோ பெயருக்கு ரெய்டு நடத்திக்கிட்டு இருக்கு... இவரு தி.மு.க., அரசை உசுப்பேத்தி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களை 'உள்ளே' தள்ளாமல் விடமாட்டார் போல...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
'தி.மு.க.,வின் பழைய நினைப்பு!'
பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா, கோவை கவுண்டம்பாளையத்தில் நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'தமிழக அரசு வழங்கிய பொங்கல் பொருட்கள், தரமின்றி இருந்தன. இப்பிரச்னையை மறைக்க, குடியரசு தினத்தன்று தமிழக அலங்கார ஊர்தி அனுமதிக்கப்படவில்லை என, புதிய பிரச்னையை கிளப்பி வருகின்றனர். ஆனால், தி.மு.க., - காங்., மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியாக, 2004 முதல், 2014 வரை ஆட்சியில் இருந்தபோதும், தமிழக அலங்கார ஊர்தி, 2009 மற்றும் 2014ல் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது...' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'ஆட்சிக்கு வந்த பின்னும், தி.மு.க., எதிர்க்கட்சி நினைப்பிலேயே இன்னமும் குறை சொல்லியே அரசியல் செய்யுது... தி.மு.க.,வினரிடம், 'ஆட்சி நிர்வாகம் செய்யுற வேலையை பாருங்க'ன்னு யாராவது சொல்லணும் பா...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
'எல்லாம் மக்களுக்கு தெரியும்'
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியிலுள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீடு உள்ளிட்ட, 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர்.அதன் பின், வீட்டிலிருந்து வெளியே வந்த அன்பழகன், நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., அரசு பொங்கல் பரிசு தொகுப்பில், 500 கோடி ரூபாய் ஊழல் செய்ததை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வெளிக்கொண்டு வந்தார்.
இந்த ஊழல் வெளியானதை, மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தில், தி.மு.க., அரசு ரெய்டு நடத்தியது...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'எத்தனை கோடி ரூபாய் ஊழல் நடந்தாலும், எவ்வளவு முறை ரெய்டு நடத்தினாலும், எந்த அரசியல்வாதியும் சிக்குறதே இல்லையே... இந்த ரெய்டு நாடகம் எல்லாம் மக்களுக்கு தெரியுமுங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!