நாடு முழுதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' என்ற நுழைவு தேர்வு அமலில் உள்ளது.
பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பின், உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே, நீட் தேர்வு அமலில் உள்ளது. எனவே, நீட் தேர்வு நடத்துவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.'நீட்' தேர்வு தொடர்பாக, தமிழக அரசு நியமித்த ராஜன் கமிட்டி அறிக்கையை படிக்கும் போது வியப்பாக உள்ளது.
அந்த அறிக்கை ஒரு தலைபட்சமான, அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களின் எண்ணங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள அறிக்கை. அதாவது, மாநில அரசால் நடத்தப்படும் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கு, மத்திய அரசால் நுழைவு தேர்வு நடத்த முடியாது. பல்கலைகளை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது.
அனைத்து நிகர்நிலை பல்கலைகளையும் கட்டுப்பாட்டில் எடுக்க, மாநில அரசு கட்டாயம் சட்டம் கொண்டு வர வேண்டும். 'நீட் தேர்வு சில ஆண்டுகளுக்கு நீடித்தால், தமிழகத்தின் சுகாதாரத் துறை மிக மோசமாக பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற டாக்டர்களே இருக்க மாட்டார்கள். சுதந்திர காலத்துக்கு முந்தைய நிலைக்கு தமிழகம் செல்லும் என்று கூறப்பட்டுள்ள அம்சங்கள் எல்லாம் நகைப்புக்குரியவை.
'நீட் தேர்வால் மாணவர்களுக்கு கிடைத்துள்ள பலன்களை, ராஜன் கமிட்டி புரிந்து கொள்ள வில்லை என்பதையே, அந்த கமிட்டியின் அறிக்கை காட்டுகிறது. 'நீட் தேர்வு அமலானதால், தமிழக பள்ளி மாணவர்கள், தமிழ் வழியில் இருந்து ஆங்கில வழிக்கும்; மாநில பாட திட்டத்தில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்துக்கும் மாறுகின்றனர் என அறிக்கையில் கூறியிருப்பது மோசமான அம்சம்.
மாணவர்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறுவது உண்மை தான்; ஆனால், அது நீட் தேர்வால் அல்ல. 'மாநில பாடத் திட்டம் மிக மோசமாகவும், அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் மோசமாகவும் உள்ளதால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாணவர்கள் மாறுகின்றனர். 'இதற்கு நீட் தேர்வை எதிர்ப்பதை விட, தமிழக பாட திட்டத்தின் தரத்தை உயர்த்துவதும், மாநில பாடத்திட்ட பள்ளிகளில், ஆசிரியர்களின் கற்பித்தல் தரத்தை உயர்த்துவதுமே தீர்வாக அமையும்.
'பல்வேறு பாடத்திட்ட மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்' என்று ராஜன் கமிட்டி பரிந்துரைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. பொதுவான தேர்வு ஒன்றே, மாணவர்கள் மத்தியில் சமமான நிலையை ஏற்படுத்தும் என்பது உறுதி.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மதிப்பீட்டு முறையும், தேர்வு முறையும் மோசமாக உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்கள், மாணவர்களின் உண்மையான அறிவுத்திறனை பிரதிபலிக்கும் வகையில் இல்லை. மாணவர்களிடையே போட்டியை உருவாக்கவில்லை. எனவே, நீட் தேர்வு போன்ற பொதுவான தேர்வு மட்டுமே, மாணவர்களின் தரத்தை உறுதி செய்வதாக இருக்கும்.
'நீட் தேர்வானது சமூக நீதியை குழிதோண்டி புதைப்பதாக உள்ளது' என, ராஜன் கமிட்டி கூறியிருப்பது தவறான நம்பிக்கை. நீட் தேர்வை பொறுத்தவரை வெளிப்படையான அணுகுமுறை மற்றும் நாடு முழுதும் மருத்துவம் படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும், சமமான வாய்ப்பை வழங்கக்கூடியது.
சமூக நீதி எங்கே?
ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள், நீட் போன்ற நுழைவு தேர்வுகளில் சாதிக்க முடியாது என்று கூறுவது சரி தான். அதேநேரம், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளிலும், அதே நிலை தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு அமலாகும் முன், பொருளாதாரத்தில் வசதியான மாணவர்கள், தனியார் பள்ளிகளின் சிறப்பு பயிற்சியில் சேர்ந்து, மருத்துவ படிப்பில் அதிகம் சேர்ந்தனரே; அப்போது சமூக நீதி எங்கே போனது? நீட் தேர்வானது தற்கொலையை துாண்டுவதாக கூறியிருப்பது தவறான வாதம்.
உண்மையில், நீட் தேர்வு முடிவுக்கு பின்னே சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னும், இது போன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. அதற்காக அந்த பொதுத் தேர்வுகளையும் ரத்து செய்யலாமா?
அனிதா தற்கொலை
பல தற்கொலை வழக்குகளில், தேர்வு மதிப்பெண்களை விட, வேறு பல காரணங்களே கண்டறியப்படுகின்றன. உதாரணமாக, நீட் தேர்வு முடிவு வந்த உடன், அனிதா என்ற மாணவி தற்கொலை செய்யவில்லை. அவருக்கு பல்வேறு நல்ல வாய்ப்புகள் இருந்தன. ஆனால், சில சுயநலவாதிகளின் துாண்டுதலால், அவர் உச்ச நீதிமன்றம் வரை இழுத்து செல்லப்பட்டார். அதன்பிறகே, அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டார்.
நவோதயா பள்ளிகள்
நவோதயா பள்ளிகளை மத்திய அரசு நடத்துகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு, உயர் தரமான, இலவசமான கல்வியை இந்த பள்ளிகள் வழங்குகின்றன. நீட் பிரச்னையை சமாளிக்க, இதுபோன்ற பள்ளிகள் சிறந்தவை. தமிழக அரசுக்கு உண்மையில், கிராமப்புற மாணவர்களின் மீது அக்கறை இருந்தால், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை துவங்குவதே சரியானது. இதன் வாயிலாக கிராமப்புற மாணவர்கள், நீட் தேர்வை வெற்றிகரமாக எழுதி தேர்ச்சி பெற முடியும். ஆனால், இந்த நவோதயா பள்ளிகள் விஷயத்தில், ராஜன் கமிட்டி தன் அறிக்கையில் எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்துள்ளது.
பலன்கள் என்ன?
*ஒவ்வொரு மாநிலத்திலும், மத்திய நிறுவனங்களிலும், நிகர்நிலை பல்கலைகளிலும், ஏற்கனவே பல்வேறு வகை நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டன. அவற்றுக்கு எல்லாம் ஒரே தீர்வாக நீட் தேர்வு அமலாகி, மற்ற நுழைவு தேர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன. நீட் மதிப்பெண் அடிப்படையில், இந்தியாவில் எந்த ஒரு மருத்துவ கல்லுாரியிலும் மாணவர்கள் சேர முடியும். இதனால், மாணவர்கள் பல்வேறு தேர்வுகள் எழுதும் நிலை மாறி, தங்களின் கட்டணம் மற்றும் செலவுகளை சேமித்து கொள்ள முடிகிறது
* தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களை தவிர, மற்ற அனைத்து மருத்துவ இடங்களும், தமிழக மாணவர்களுக்கே வழங்கப்படுகின்றன. நீட் தேர்வால் இடஒதுக்கீட்டு கொள்கையில் எந்த பாதிப்பும் இருக்காது
* நீட் மதிப்பெண் வாயிலாக, அனைத்து மத்திய கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைகள் மற்றும் அனைத்து நிகர்நிலை பல்கலைகளின் இடங்களிலும், மாநில அரசின் கல்லுாரிகளில், மத்திய அரசு ஒதுக்கீடான 15 சதவீத இடங்களிலும் எளிதாக சேர முடியும்.
* நிகர்நிலை பல்கலைகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய அரசே நடத்துவதால், மாணவர்கள் தரப்பில் முன்னர் போல பெரும் அளவில் நன்கொடை கொடுக்க வேண்டிய நிலை ஒழிக்கப்பட்டது. மாணவர் சேர்க்கை முறைகேடுகள் அனைத்துக்கும், நீட் தேர்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளது
* நீட் தேர்வு மதிப்பெண் வாயிலாக, வெளிநாட்டு கல்வி நிறுவன படிப்புகளிலும் சேர முடியும். நீட் தேர்வு இந்திய மருத்துவ கல்வியின் தரத்தை மட்டுமின்றி, சர்வதேச அளவில் இந்திய மருத்துவ படிப்பின் தரத்தையும் உறுதி செய்வதாக உள்ளது.
இந்நிலையில், ராஜன் கமிட்டியின் ஒரு தலைபட்சமான அறிக்கை அடிப்படையில், நீட் தேர்வுக்கு எதிராக, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இதற்கு பல்வேறு மாநில அரசுகளின் ஆதரவை, முதல்வர் ஸ்டாலின் கேட்டிருப்பது இன்னும் புதுமையாக உள்ளது.
ஆனால், அவர் ஆதரவு கேட்ட மாநிலங்கள் எல்லாம், உச்சநீதிமன்றத்தில் மேற்கொண்ட சட்ட போராட்டத்தில் வெற்றி பெற முடியாமல், இனி அரசியல் ரீதியாக ஏதும் செய்ய முடியாது என்பதால், நீட் தேர்வை அமல்படுத்த துவங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பாலகுருசாமி
முன்னாள் துணை வேந்தர்,
அண்ணா பல்கலை.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!