dinamalar telegram
Advertisement

மகாகவி உலாவிய கங்கை கரை வீட்டில்...

Share

"இன்னது நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறேஇங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே''இது கங்கைக்கு மகுடம் சூட்டி பாரதி பாடிய வரிகள்.
இதன் மூலம் அவர் காசியையும், கங்கையையும் எந்த அளவு நேசித்திருப்பார் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
39 வயது வரை வாழ்ந்த உலக மகா கவி பாரதியின் தன் வாழ்க்கையின் இளமைப் பிராயமான 16 வயதில் இருந்து 21 வயது வரை (1898-1903) காசியில் தங்கி கல்வி கற்றதுதுடன் கலை கலாச்சார பொது அறிவு விஷயங்களையும் பெற்றார்.
1898ம் ஆண்டு ஜூன் மாதம் பாரதியின் தந்தை சின்னச்சாமி காலமான பின்னர் காசியில் வாழ்ந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ணசிவனும் பாரதியை காசிக்கு அழைக்கவே மறு பேச்சு பேசாமல் பாரதி அங்கு போய்விட்டார்.காசியில் கங்கை கரையோரம் உள்ள வீட்டில் அத்தை மாமாவோடு தங்கலானார். பின்னர் காசி மிஷன் கல்லூரியிலும், ஜெய்நாராயண் கல்லூரியிலும் படித்தார். ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். அலகாபாத் சர்வ கலாசாலை பிரவேசப் பரீட்சையில் முதல் வகுப்பில் தேறி, பலரும் பாராட்டும் நிலை அடைந்தார்.
காசி பாரதி உள்ளத்தில் ஒரு புதிய இனம் தெரியாத பரவசத்தை ஊட்டிற்று. காசி நகரில், பல இடங்களுக்கும் சென்று வருவது அவருக்கு வழக்கமாயிற்று. நடந்தேதான் செல்வார்.
வீடு என்று இருந்தால் வரி கட்ட வேண்டும் அதுவே மடம் என்று இருந்தால் வரி விலக்கு உண்டு. இது அப்போதைய பிரிட்டிஷ் அரசின் சட்டம்.இந்த சட்டத்திற்காக பாரதியின் மாமா தனது வீட்டை ‛சிவ மடம்' என்றாக்கினார். நிறைய பண்டிதர்கள் வந்து போவார்கள். அவர்களுடன் எப்போதுமே தீவிரமாக பேசுவார், அதிலும் பெண் விடுதலை, பெண் கல்வி குறித்து காரசாரமாக விவாதிப்பார்.
1902-ஆம் ஆண்டு காசியிலிருந்து எட்டயபுரம் மன்னருடன் தமிழகம் திரும்பினாலும், அதன் பிறகு அவர் காசிமாநகருடனான தன்னுடைய தொடர்பை விட்டுவிடவில்லை. அவ்வப்போது அங்கே போய் வந்து கொண்டிருந்தார். ஆகவே, பாரதியாரின் வாழ்வில் காசி மாநகரம் ஒரு பெரிய பங்கை ஆற்றியுள்ளது.
பாரதியார் கல்வி கற்றதும், அவருக்குள் தேசபக்தி கனலாக எழுந்ததும், தேச விடுதலை, சமூகச் சீர்திருத்தம், பெண்கள் முன்னேற்றம் போன்ற கருத்துருவாக்கங்கள் ஏற்பட்டதும் காசி மாநகரில்தான். தேசத் தலைவர்கள் பலரை அவர் சந்தித்ததும் அங்கே தான். ஹிந்தி, சம்ஸ்க்ருதம் போன்ற பல மொழிகளை அவர் கற்றதும் அங்குதான்.பாரதி தனது உடையிலும் தோற்றத்திலும் மாற்றத்தை உருவாக்கி கொண்டது காசியில்தான். இப்போதும் கூட இங்குள்ள பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில் உள்ள பேராசிரியர்கள் வேட்டி கோட் தலைப்பாகை அணிந்து இருப்பதை பார்க்கலாம். இந்த பழக்கம்தான் பாரதிக்கு பிற்பாடு எங்கு சென்றாலும் தொடர்ந்திருக்கலாம். ஒருமுறை அல்ல ஒரு நாளின் பலமுறை பாரதி கங்கையில் நீராடுவதும் கரையில் இருந்தபடி காளிதாசர், ஷெல்லி, கீட்ஸ் கவிதைகளை படிப்பதுமாக இருப்பார். கங்கை கரை படிக்கட்டுகளில் அமர்ந்து படிப்பது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம்.
இப்படி பாரதியின் நெஞ்சுக்குள் பாய்ந்து ஒடிக்கொண்டிருந்த தொன்மையான கங்கையையும், அவர் நேசித்த காசியையும் பற்றி நிறைய முறை கேள்விப்பட்ட நமக்கு ''பாரதியாரின் நுாற்றாண்டு நினைவு நாள் ‛மகாகவி நாளாக' தமிழக அரசு சார்பில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சூழலில்,சமீபத்தில் காசி செல்லும் வாய்ப்பு கிடைத்த போது அவர் வாழ்ந்த அந்த காசியின் வீட்டை பார்க்கும் பாக்கியமும் கிடைத்தது.
காசியில் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய ‛அனுமன் காட்' என்ற என்ற பகுதியில் உள்ள சங்கரமடத்திற்கு எதிரில் உள்ளது பாரதி வாழ்ந்த வீடு.கங்கைக்கு அருகில் குறுகிய சந்தில் உள்ள அந்த வீட்டிற்கு எப்படி பார்த்தாலும் இருநுாற்று சொச்சம் வயதிருக்கும்.அதிர்ந்து பேசினாலே உதிர்ந்துவிடுவேன் என்ற நிலையில் வெளிச்சுவர்கள் பலவீனமாக காட்சி தந்தன.
வீட்டிற்குள் பாரதியின் அத்தை வம்சாவளியினர் பலர் இருந்தாலும் பாரதியை தனது பேச்சிலும் மூச்சிலும் சுமந்து கொண்டு இருப்பவர் 96 வயது கே.வி.கிருஷ்ணன்தான்.பாரதியின் அப்பாவுடன் பிறந்த குப்பம்மாள் மகள் வழி பையனான இவர், பாரதி இங்கு இருந்த போது பிறக்கவேயில்லை.
பிற்பாடு பாரதியார் தன் மாமா என்பதை அறிந்து அவர் மீது மிகுந்த பற்று கொண்டு அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து பாரதியை இந்தி பேசும் மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார். இதன் காரணமாக அங்குள்ள மக்கள் உதவியுடன் பாரதிக்கு இங்கு சிலையும் அமைத்துள்ளார்.
காசியில் பிறந்து வளர்ந்தவரான கே.வி.கிருஷ்ணன் இங்குள்ள வாரணாசி இந்து பல்கலையில் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். எளிமையான வாழ்க்கை, தமிழைவிட இந்தியில் திறமை அதிகம்.இசையில் புலமை அதிகம்.
பாரதியாரின் புகழை தமிழ் தெரிந்த தமிழர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது எளிய விஷயம் ஆனால் தமிழே தெரியாத இந்தி பேசும் மக்களிடம் பாரதியைக் கொண்டு போய்ச் சேர்த்தில் இவருக்கு மகத்தான பங்கு உள்ளது.
பாரதியின் மாப்பிள்ளை என்பதே என் பாக்கியம் அதைவிட வேறு எதுவும் வேண்டாம் என்ற நிலையில் உள்ளவர்.தற்போது மிகவும் தளர்ந்து போய் உள்ளார். கேட்கும் திறனும் குறைந்து விட்டது.ஆனாலும் நீண்ட தொலைவில் இருந்து பாரதியைப் பற்றி பேசுவதற்கு ஒருவன் வந்து இருக்கிறான் என்றதும் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டு உற்சாகத்தை வரவழைத்து பேசியவர் விடைபெறும் போது பாரதி பற்றி எழுதிய புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.
வீட்டிற்குள் சிறிய சன்னதி உள்ளது அதில் சித்தேஸ்வரன்,சித்தேஸ்வரி வீற்றிருந்து அருள்புரிகின்றனர், அந்த சன்னதி வாசலில் இருந்து பல பாடல்கள் பிறந்திருக்கிறது அவற்றுள் “வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள். வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்” என்ற பாடல் முக்கியமானது என்றனர் வீட்டில் இருந்தவர்கள்
சன்னதியின் படிக்கட்டை தொட்டு வணங்கிவிட்டு எழுந்த போது யாரோ ஆசீர்வாதம் செய்வது போல இருந்தது, அது மகாகவிதான் என்பதை உணர சில வினாடிகளே பிடித்தது.
-எல்.முருகராஜ்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து (5)

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  இது போன்ற கிருஷ்ணன்கள் இனி வரும் காலத்திற்கு தமிழகத்திற்கும் தேவை தமிழின் வரலாற்றை அழிக்க எஸ்ராக்களும் ஜேப்பி களும் முயன்று கொண்டுள்ளார்கள் பார்ப்போம் நாமும் ஒரு காலக்கொடுமைக்கு விட்னெஸ் ஆகா இருக்க போகிறோம் ஏற்கனவே தமிழ் மாதத்தை அழிக்கும் முயற்சி தை சித்திரை என்று ஆட்டம் காட்டும் அவர்களின் முயற்சி வெற்றி பெற்று விடுமோ என்று பயந்துள்ளேன் இனி வரும் காலத்தில் தமிழ் மெல்ல சாகும் என்ற நிலைக்கு குடும்ப கார்பொரேட் கொண்டு செல்லுகிறது அதற்க்கு தமிழர்கள் ஆதரவாக இருப்பார்கள் எதிர்ப்பார்கள என்று பார்ப்போம்

 • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

  கட்டுரைக்கு மிக்க நன்றி. இப்பொழுதுள்ள தமிழ் வளர்க்கின்ற அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் மிக கேவலம். அதுவும் திராவிட பன்றிகளின் தமிழ் மற்றும் ஆன்மீக ஒழிப்பு முயற்சி, தினமலர் போன்ற பத்திரிகைகளின் மூலம் கொஞ்சம் கட்டுப்பட்டு இருக்கின்றது.

 • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

  அருமையான பதிவு .மிக்க நன்றி .மிக சிறப்பாக இருக்கிறது .இதுவரை யாரும் காசியில் சென்று அந்த வீட்டை பற்றி எழுதியது இல்லை .மீண்டும் நன்றி .நான் அவசியம் செல்ல இருக்கிறேன் .

 • seenivasan - singapore,சிங்கப்பூர்

  ஆகா ஆகா 20ஆம் நூற்றாண்டுக்கே கட்டுரை ஆசிரியர் எங்களை கொண்டு சென்று விட்டார். வரலாற்று சிறப்புள்ள, தேசியத்தன்மை வாய்ந்த இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுங்கள். நன்றி

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement